உள்ளூர் செய்திகள்

இன்றிலிருந்து இந்தியா!

இந்தியா எல்லா விதங்களிலும், எல்லா துறைகளிலும் எல்லா நிலைகளிலும், இன்று முதல் வளரும்... வளரும்... வளரும்... ஆகஸ்ட் 15... இந்தியர்களின் கனவு, நினைவான தினம். சுதந்திரம் கிடைத்த நாள் என்று சாதாரணமாக சொல்லும் நாளா அது...எத்தனை தியாக உள்ளங்களால் உதித்த தினம் அது! எத்தனை தன்னலமற்ற தலைவர்களை உருவாக்கிய தினம் அது! எத்தனை சாதனையாளர்களை தந்த சரித்திர தினம் அது! ஒரு நாளின் பின்னால், ஓராயிரம் வரலாற்று நிகழ்வுகள்!இந்தியா வல்லரசாக, 2020ல், அப்துல் கலாம் நாள் குறித்தார். ஏனென்றால், 2020ல், உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக, இந்தியா இருக்கும். அதிக இளைஞர்களின் அறிவு, திறமை, உடல் வலிமை போன்றவற்றை கொண்ட தேசம் உலகின் வல்லரசாக தானே இருக்க முடியும்.அதற்கு நேற்றைய, இன்றைய, நாளைய இளைஞர்கள் பாடுபட வேண்டும்; அப்படி சாதித்த சிலரை, பார்த்து பெருமிதம் கொள்வோம்.வறுமை, தீண்டாமை, பசி, சுத்தமின்மை, பெண் கொடுமை என, அனைத்து தீமைகளிலிருந்து விடுதலை பெற, புதிய சுதந்திர போரை துவக்குவோம்!சின்னஞ்சிறு செயற்கைக்கோள்!செயற்கைக் கோள் என்றால், எம்மாம் பெரிசு என்று, மனக்கண்ணில் காட்சி விரியும். அதை, வெறும், 33.39 கிராமில் செய்து, உலகிலேயே மிகச் சிறிய செயற்கைக் கோளை உருவாக்கி உள்ளனர், மாணவர்கள்.சென்னை அருகே உள்ள, கேளம்பாக்கம், தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள், ஹரிகிருஷ்ணன், கிரிபிரசாத், அமர்நாத், சுதி ஆகியோர் உருவாக்கிய உன்னதம் இது.'ஐடூடுல் எடு' என்ற நிறுவனம், 'கியூப்ஸ் இன் ஸ்பேஸ்' என்ற தலைப்பில், 2018ல், செயற்கைக்கோளை உருவாக்குவதற்காக நடத்தும் போட்டி இது. இதற்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, நாசா ஆதரவு அளிக்கிறது.மிகவும் மலிவாக தயாரிக்கப்பட்டது. ஆம்... 15 ஆயிரம் ரூபாயில் உருவாக்கப்பட்டது. முப்பரிமாண அச்சிடல் முறையில், நைலானால் செயற்கைக்கோளை உருவாக்கியிருக்கின்றனர். ஹீலியம் வாயு நிரப்பிய பலுான் மூலம், செயற்கைக்கோள் வானில், விண்ணை ஒட்டிய பகுதிக்கு அனுப்பப்படும்.அங்கு, புவி ஈர்ப்பு சக்தி குறைந்த பகுதியில், நைலான் தன்மை எப்படி இயங்கும் என்பதை அறிவதும் ஒரு குறிக்கோள். அதன்மூலம், எதிர்காலத்தில் விண்வெளியில் நைலானை பயன்படுத்த முடியுமா என்று தெரிந்துக் கொள்ள முடியும். பலுான் செல்லும் வேகம், பூமி பரப்பில் இருந்து, அதன் உயரம், அங்கு நிலவும் வெப்ப நிலை, அழுத்தம், ஈரப்பதம், புற ஊதாக் கதிர்களின் அடர்த்தி போன்ற தகவல்களையும், இந்த செயற்கைக்கோள் தெரிவிக்கும்.தகவல்கள், வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவும்.இதன் ஆயுட்காலம் ஒரு நாள் தான் என்றாலும், பயனுள்ள தகவல்களை வழங்கும். இதற்கு முன், 64 கிராம் எடையுள்ள செயற்கைக்கோளை உருவாக்கிய, 'ஸ்பேஸ் கிட்ஸ்' மாணவர்கள். 500 கிராம் எடை கொண்ட செயற்கைக்கோளை உருவாக்கிய, திருச்சி மாணவி, வில்லட் ஓவியா என, இந்தியாவில் முக்கியமாக, நுண் செயற்கைக்கோள்களை உருவாக்கியது, தமிழக மாணவர்கள் தான்!புயல் படைத்த சாதனை!ஜூன், 2018ல், வடக்கு ஐரோப்பாவில் உள்ள பின்லாந்தில் நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை ஹிமாதாஸ், 400 மீட்டர் ஓட்டத்தில், 51.46 வினாடிகளில் இலக்கை கடந்து, தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம், உலக அளவிலான தடகளத்தில், தங்கப்பதக்கத்தை அறுவடை செய்த, முதல் இந்திய மங்கை என்ற சாதனை படைத்துள்ளார்.பதக்கம் வழங்கி தேசிய கீதம் இசைத்த போது, பதக்க மேடையில் நின்ற அவரது கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது. ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். சொந்த ஊர், அசாம் மாநிலம், நாகோவான் மாவட்டத்தில் உள்ள, திங் கிராமம்.இந்த மகத்தான வெற்றியால், அந்த கிராமமே உற்சாகம் பூண்டுள்ளது. ஹிமாதாஸ் பேசும்போது, 'தேசத்திற்காக பதக்கத்தை கொண்டு வருவது மிகப்பெரிய சாதனை... மிகவும் பெருமையாக உள்ளது. உலக சாம்பியன் ஆனதன் மூலம், என் கனவு, நனவாகி உள்ளது. அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும், திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பேன்...' என்றார்.இது துவக்கம் தான், இன்னும் நிறைய பதக்கங்களை வெல்வார்!'செஸ்'ஸானந்தா!'செஸ் என்றால், இந்தியரின் ஞாபகத்தில் வருவது விஸ்வநாத் ஆனந்த். இனி, சென்னை வீரர் பிரக்ஞானந்தாவும் வருவார். படிப்பது, ௮ம் வகுப்பு தான். ஆனால், உலக சிகரத்தை எட்டி விட்டார். இத்தாலி, ஆர்.வி.சி.நகரில், 4வது கிரெடின் ஓபன் சதுரங்க போட்டி, ஜூன், 16ல் துவங்கி, 24ம் தேதி வரை நடந்தது. இப்போட்டியில், பிரக்ஞானந்தா பங்கேற்று, இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார்.மேலும், 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்ற முதல் இந்தியர் மற்றும் சர்வதேச அளவில் இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இவருக்கு முன் சாதனையாளராக திகழும், கிழக்கு ஐரோப்பாவில் உள்ள உக்ரைன் நாட்டு வீரர்கள் செர்ஜி, கர்ஜாகின் மட்டுமே உலகிலேயே, 13 வயதுக்கு முன், கிராண்ட் மாஸ்டர் ஆனவர்கள்.உண்மையில் பிரக்ஞானந்தாவுக்கு மிக இளவயதில், 'கிராண்ட் மாஸ்டர்' ஆவது குறிக்கோள் இல்லையாம். மனதில் பல நீண்ட கால இலக்குகளை வைத்திருக்கிறார். சாதாரணமாகவே சமத்துப் பிள்ளை. வெளியே சுற்றுவதிலும், பொழுதுபோக்குகளில் நேரத்தை கழிப்பதிலும் அவருக்கு ஆர்வம் இல்லை. சதுரங்கமே உயிர்மூச்சாகக் கொண்டவர். அதுதான் அவரது வெற்றியின் ரகசியம்.நாமென்ன செய்தோம்!தமிழக முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., ஒரு படத்தில், 'நாடென்ன செய்தது எனக்கு... என கேட்டிடும் கேள்விகள் எதற்கு, நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு...' என்று பாடி இருப்பார். அதுதான், வாழ்க்கையை நடத்தும் வரிகளாக வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் அவரவரை சிறப்புக்குரியவராய் மாற்ற முயற்சித்தால், இந்தியா மாபெரும் சொர்க்க பூமியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !