சூழலை காக்கும் கீரி இனம்!
பாலுாட்டி வகையைச் சேர்ந்த ஊனுண்ணி உயிரினம் கீரி. ஆசியா, ஆப்ரிக்கா கண்ட பகுதிகளில் காணப்படுகிறது. இதில், 34 சிற்றினங்கள் உள்ளன. இதன் நீளம், 58 செ.மீ., எடை, 5 கிலோ இருக்கும். பூச்சி, பல்லி, பாம்பு, சிறிய பறவைகளை உணவாக்கும். முட்டைகளையும், இறந்த விலங்கின் இறைச்சியையும் கூட உண்ணும். சில இனங்கள் தனித்தே உணவு தேடி வாழும். சில, குழுவாக இணைந்து வாழ்ந்து, இரையைப் பகிர்ந்து கொள்ளும். இந்திய சாம்பல் நிற கீரி, கொடிய நச்சுள்ள, நாகப்பாம்புடன் சண்டையிட்டு கொல்லும் திறன் உடையது. கீரியின் தடித்த தோலும், அதிவேகமாக இயங்கும் ஆற்றலும் பாம்பை எதிர்க்க உதவுகின்றன. கீரியின் உடலில், 'அசிட்டைல்கோலின்' என்ற வேதிப்பொருள் பாம்பின் நச்சை எதிர்க்கும் திறனைக் கொடுக்கிறது. அதிவேகமாக செயல்படும் கீரி இனங்கள் பற்றி பார்ப்போம்...பாலைவன கீரி!ஆப்பிரிக்க நாடுகளான நமீபியாவில் நமிப் பாலைவனம், தென்மேற்கு அங்கோலா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் அதிகம் காணப்படுகிறது. கூட்டமாக வாழும். கூட்டத்திற்கு பெண் கீரியே தலைமை வகிக்கும். ஆண், துணையாக இருக்கும். ஒரு கூட்டத்தில் சராசரியாக, 20 கீரிகள் வரை இடம் பெற்றிருக்கும். அதிகபட்சமாக, 50 கீரிகள் இருக்கும். இந்த இனம், 14 ஆண்டுகள் வரை ஆயுள் உடையது.சிவந்த கீரி!இந்தியா, இலங்கை மலைக்காடுகளில் காணப்படுகிறது. இந்திய சாம்பல் கீரி இனத்துடன் மிகவும் நெருக்கமானது. சற்றே பெரிதாக இருக்கும். கறுப்பு முனையுள்ள நீண்ட வாலுடன் காணப்படும். இந்த கீரியில் இரு கிளை இனங்கள் உள்ளன. வயல்களிலும், திறந்த வெளிகளிலும் காணப்படும். கடல் கீரி!இது கடல் பாலுாட்டி இனமாகும். வடக்கு பசிபிக் பெருங்கடலின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணப்படுகிறது. வளர்ந்த கடல் கீரி, 45 கிலோ எடையுடன் இருக்கும். முழுதும் பெருங்கடலில் வாழும் சிறப்பு உடையது. ஆமை போன்ற உயிரினங்களை உண்ணும். இது உணவு தேடுவதும், உண்ணும் பழக்கமும் வியப்பானது. இரையின் ஓட்டை உடைக்க, கற்களை பயன்படுத்தும் திறன் உடையது. அதன் வாழ்விடத்தில், மைய உயிரினமாக செயல்படுகிறது. இதன் எண்ணிக்கை குறைந்தால், கடல் முள்ளெலி எண்ணிக்கை அதிகமாகி, சூழலில் பெரும் பாதிப்பு ஏற்படும். இந்த இனம் ரோமத்திற்காக, அதிக அளவில் வேட்டையாடப்பட்டது. இதனால், உலக அளவில் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இதை வேட்டையாடுவதற்கு சர்வதேச அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இனத்தின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. கருங்கால் கீரி!கால்களில், நான்கு விரல்களை உடையது இந்த கீரி இனம். மத்திய ஆப்பிரிக்க கண்ட பகுதியில் அதிகம் காணப்படுகிறது. மத்திய ஆப்பிரிக்க நாடுகளான கங்கோ, கபோன், கென்யா, நைஜிரியா பகுதிகளில், பெருமூக்கு கீரி என்ற இனம் அதிக அளவில் உள்ளது.- மு.நாவம்மா