மாயக்குரல்!
நாகர்கோவில் அடுத்த வல்லன்குமாரன் விளை அரசு உயர்நிலைப் பள்ளியில், 1977ல், 7ம் வகுப்பு படித்த போது வகுப்பு ஆசிரியராக இருந்தார் வேதகுலமுத்து. எளிமையாக கதை சொல்வது போல், பாடங்களை கற்றுத்தருவார். அன்று, 'எதிரொலி' பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, 'அசரீரி என்றால் என்ன...' என்ற கேள்வியை கேட்டார். பெரும்பாலானோர், 'பல்லி சத்தம்' என கூறினர். என்முறை வந்த போது, 'அசரீரி என்பது மாய குரல்...' என தெளிவாக கூறினேன். பாராட்டியதுடன், 'இது பற்றி உனக்கு எப்படி தெரியும்...' என விசாரித்தார்.தயக்கம் நீங்கி, 'கதைகளில் விக்கிரமாதித்த மன்னன் பற்றி சொல்வார், என் தாத்தா. அவன் அரியணை ஏற முதல் படியில் கால் வைக்கும் போது, 'அசரீரி போல் மாயக்குரல் பேசியது' என, சுவை பட விவரிப்பதை கவனித்ததால் அறிந்தேன்...' என்றேன். மிகவும் கனிவுடன், 'ஆர்வமுடன் கேட்பது எதையும் கற்பதை எளிதாக்கும்...' என்று அறிவுரைத்தார்.தற்போது, என் வயது, 58; விவசாய தொழில் செய்து வருகிறேன். தாத்தா, பாட்டி சொல்லும் கதைகளில் நல்ல விஷயங்களை கூர்மையாக அவதானிக்க உற்சாகப்படுத்திய ஆசிரியரை வணங்குகிறேன். - அ.ரவீந்திரன், கன்னியாகுமரி.தொடர்புக்கு: 99766 79612