உள்ளூர் செய்திகள்

ஒருவன் மட்டும்...

ஆசிரியர் ஒருவர், மாணவர்களை சோதித்து, 'எத்தனை பேர் புத்திசாலிகள்; எத்தனை பேர் முட்டாள்கள்' என்று, அறிய நினைத்தார். ''ஒரு கதை சொல்ல போறேன்; அதில் நம்ப முடியாத நிகழ்ச்சிகள் இருந்தால், சிந்தித்துக் கூறுங்கள்...'' என்றார். மாணவர்கள் ஒப்புக் கொண்டனர்.கதையை ஆரம்பித்தார்...ஒரு நாட்டில், மதிவாணன் என்ற மாவீரன் இருந்தான்; தன்னை, வீரன் என்று உலகமே ஒப்புக் கொள்ள என்ன வழி என்று யோசித்தான். ஒரு முடிவிற்கு வந்தவன், தன்னந்தனியாக பகை நாட்டிற்குள் சென்றான்; அந்த நாட்டு வீரர்களைப் போருக்கு அழைத்தான்.எதிரிகள் கிளர்ந்தெழுந்தனர்.'தனியாக வந்து, போருக்கு அழைக்கிறான் என்றால், எத்தனை ஆணவம் இருக்க வேண்டும்' என்று கறுவியபடி, கூட்டமாக கிளம்பி வந்து, போரிட்டனர். போர் உக்கிரமானது; பலரை வெட்டி வீழ்த்தினான் மதிவாணன். ஆனால், தனி ஒருவனாக எதிர்கொண்டதால் தளர்ந்து போனான்.எதிரி வீரன் ஒருவன், இதைப் பயன்படுத்தி, மதிவாணன் தலையை ஒரே சீவாக சீவி எறிந்தான்.அவன் இறந்து விட்டதை அறிந்த எதிரி நாட்டு வீரர்கள், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபடி சென்று விட்டனர்.மதிவாணன் உடல், அதே இடத்தில் கிடந்தது.'ஐயோ... நான் இறந்து கிடப்பது, என் நாட்டு மக்களுக்கு தெரியாதே... எப்படியாவது, தெரியப்படுத்த வேண்டும்' என நினைத்தான்.அதனால், வெட்டுண்டு கிடந்த, தலையை கையில் எடுத்தபடி, நாட்டை நோக்கி நடந்தான்.ஆறு, குறுக்கிட்டது; அதைக் கடந்தால் தான், நாட்டை அடைய முடியும்.தலையை கையில் வைத்து, நீச்சல் அடிக்க முடியாது; அதை, எங்கும் விட்டு செல்ல முடியாது; என்ன செய்யலாம் என்று யோசித்தான்.நல்ல யோசனை தோன்றியது...வாயைத் திறந்து அதற்குள், தலையை திணித்தான். பற்களால், நன்றாக கவ்விக் கொண்டான். இப்போது ஆற்றில் இறங்கினான்; தாரளமாக நீச்சல் அடித்தான்; மறுகரையில் நாட்டு எல்லையை அடைந்தான்.மீண்டும் தலையை கையில் எடுத்தான்.நகரத்திற்கு வந்தான்; மக்களை கூவி அழைத்தான். மக்கள் கூடிவிட்டனர்; தன் கதையை கூறினான்.'நுாற்றுக்கணக்கான எதிரி வீரர்களை கொன்று, உயிரிழந்தேன்...' என்று கூறினான்.அவன் வீர தீரத்தை, மக்கள் பெரிதாக போற்றி, பாராட்டினர்.கதையை முடித்தார், ஆசிரியர்.''மாணவர்களே... கதையில் நம்ப முடியாத செய்திகள் இருந்தால் சொல்லலாம்...'' என்றார்.'நல்ல கதை... நம்பும் படியாகவே உள்ளது...' என்றனர், மாணவர்கள் ஒரே குரலில்.ஒருவன் மட்டும் யோசனையில் அமர்ந்திருந்தான். அவன் புத்திசாலியாக இருப்பான் என நினைத்தார், ஆசிரியர். ''சுரேஷ்... இந்த கதையை நம்பவில்லையா...'' என்றார்.அவன், ''கதை நம்பும்படியாகத்தான் இருக்கு; ஆனா, அவ்வளவு பெரிய தலையை, எப்படி வாயில் கவ்வ முடியும். அதுதான் யோசிக்கிறேன்...'' என்றான்.ஆசிரியர் நொந்துபோனார். 'அடப்பாவி நீயும் முட்டாள் தானா' என்று நினைத்து, தலையில் அடித்துக் கொண்டார்.குட்டீஸ்... கற்பனை கதைகளில், உண்மை இருக்கு என்று குழப்பிக் கொள்ளாதீங்க. புரிஞ்சுதா.- வாண்டு மாமா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !