உள்ளூர் செய்திகள்

தன்னுணர்வு!

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம், ரகுமானியா மேல்நிலைப் பள்ளியில், 1994ல், 10ம் வகுப்பு படித்தேன். அன்று, தமிழ் முதல் தாள் பொதுத்தேர்வு நடந்தது. தெரிந்த கேள்விகளுக்கு நிதானமாக யோசித்து பதில் எழுதிக் கொண்டிருந்தேன். நான் திணறுவதாக எண்ணி, பக்கத்தில் அமர்ந்திருந்தவன், எழுதி முடித்த விடைத்தாளின் பக்கத்தை, என் பார்வையில் படும்படி மேஜையில் விரித்து வைத்தான். நப்பாசையால் அதை ஓரக் கண்ணால் பார்த்து எழுதி கொண்டிருந்தேன். அந்தவேளை வந்த பறக்கும் படை பார்வை என் மீது விழுந்தது. அருகில் வந்து, 'என்ன இது' என்பது போல் புருவத்தை உயர்த்தினார் அதிகாரி ஒருவர். நிதானமாக, 'ஒன்றுமில்லை' என்பதாக தலையசைத்தேன். ஒரு அதட்டல் போட்டு சென்றார். அதன்பின் நடந்த தேர்வுகளை குனிந்த தலை நிமிராமல் எழுதி, 40 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். என் அருகில் அமர்ந்து எழுதியவன் மூன்று பாடங்களில், குறைந்த மதிப்பெண் பெற்றதால் வெற்றி பெறவில்லை. அப்போது தான் தன்னுணர்வு ஏற்பட்டது. அந்த அதிகாரி கண்டிக்காமல் விட்டிருந்தால், மற்ற பாடங்களையும் காப்பி அடித்து தோல்வி அடைந்திருக்கக்கூடும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனக்கு, 42 வயதாகிறது. சொந்தமாக தொழில் செய்து, சிறப்பாக வாழ்கிறேன். தேர்வு அறையில் எச்சரித்து திருப்பம் ஏற்படுத்திய, அந்த அதிகாரியை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.- ஏ.ஜி.முகம்மது தவுபீக், திருநெல்வேலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !