உள்ளூர் செய்திகள்

கண்டிப்பும், கனிவும்!

மகாகவி பாரதியார் பணியாற்றிய மதுரை, சேதுபதி உயர்நிலைப் பள்ளியில், 1971ல், 10ம் வகுப்பு படித்தேன். வேதியியல் ஆசிரியர் கோபால், வாட்ட சாட்டமான உடல் அமைப்புள்ளவர். என்.சி.சி., என்ற தேசிய மாணவர் படை பிரிவையும் கவனித்து வந்தார். அவரைக் கண்டாலே யாரும் நடுங்கி அடங்கி விடுவர்.எனக்கு மட்டும் எந்த பயமும் இல்லை. காரணம், என் அப்பாவின் நெருங்கிய நண்பர். என் இல்லம் வந்து, 'டியூஷன்' கற்பிப்பார். ஒருநாள், வகுப்பில் பாடம் நடத்திய போது, கவனிக்காமல் நண்பனோடு சினிமா பற்றி பேசியபடி இருந்தேன். நண்பன் தந்த எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை. பாடத்தை நிறுத்திய ஆசிரியர் முறைத்த போதும் கண்டுகொள்ளவில்லை. கடும் கோபத்தில் அழைத்தவரை பதற்றம் இன்றி நெருங்கினேன்.சற்றும் எதிர்பாராதபடி கன்னத்தில் அறைந்து, 'வெளியே போ...' என கடிந்தார். அழுதபடி வெளியேறினேன். அன்று மாலை, என் வீட்டுக்கு வந்தவரிடம், 'உங்களிடம் இனி படிக்க மாட்டேன்...' என்று ஆவேசப்பட்டேன்.சிரித்தபடியே, 'ஆசிரியர் பணியில் யாருக்கும் பாரபட்சம் காட்ட மாட்டேன். கண்டிப்புடன் இருந்தால் தான் மாணவர்கள் ஒழுங்காக படிப்பர். உனக்கு சலுகை தந்தால், மற்றவர்கள் தறவாக எண்ணக்கூடும்... வகுப்பில் நீ செய்த தவறுக்கு தான் தண்டனை தந்தேன்... உன் மீது வெறுப்பு இல்லை...' என உணர்த்தினார். மன்னிப்பு கேட்டு படிப்பை தொடர்ந்தேன்.எனக்கு, 70 வயதாகிறது; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பாரபட்சம் பார்க்காமல் அக்கறையுடன் கண்டித்த அந்த ஆசிரியர் இப்போது உயிருடன் இல்லை. அவர் என்றும் மறையாமல் என் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.- ஆர்.கண்ணன், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !