உள்ளூர் செய்திகள்

மனச்சித்திரம்!

திருவண்ணாமலை மாவட்டம், குண்ணகம்பூண்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1983ல், 9ம் வகுப்பு படித்தேன்.அன்று அறிவியல் ஆசிரியர் சுப்பிரமணியன் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அது தேர்தல் நேரம் என்பதால், ஒலிபெருக்கியில் பிரசார சத்தம், வாகன இரைச்சல் என, ஆராவாரமாக இருந்தது. அனைவரும் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சாகசம் செய்வதாக எண்ணி ஆசிரியர் இருக்கையில் போய் அமர்ந்து எழுந்தேன். விளையாட்டாக செய்ததை கவனித்து விட்டார் ஆசிரியர். நடுங்கியபடி, 'இன்று கடுமையாக அடி கிடைக்கும்' என உதறல் எடுத்தது. வகுப்பே எதிர்பார்ப்புடன் அமைதியாக இருந்தது. மென்மையாக அழைத்தவர் அருகே பயந்தபடி சென்றேன். புன்னகைத்தபடி, 'இந்த இருக்கையில் சிறிது நேரம் மட்டும் உட்கார ஆசைப்படாதே... நிரந்தரமாக இருக்க ஆசைப்படு...' என கனிவுடன் கூறினார். பயம் மறைந்து தெளிவு ஏற்பட்டது. குறிக்கோள் அமைத்து விடாமுயற்சியுடன் படித்து முன்னேறினேன்.இப்போது என் வயது, 54; ஜவ்வாதுமலை, ஆட்டியானுார், பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழாசிரியராக பணி செய்து வருகிறேன். இந்த பணியில் சேர உத்வேகம் ஊட்டிய சம்பவத்தை மனதில் வரைந்துள்ளேன். அந்த ஆசிரியரை பின்பற்றி பாடம் கற்பிப்பதை தவறாமல் கடைபிடித்து வருகிறேன்.- ம.ம.பழனி, வந்தவாசி.தொடர்புக்கு: 96553 67080


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !