நாட்டு நடப்பு!
சீர்காழி, சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில், 2000ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!வகுப்பு தேர்வுகளில், முதல் மூன்று இடங்களில் வந்து விடும் நோக்கில், பாடங்களில் கவனம் செலுத்தி படித்து வந்தேன். பொது அறிவில் கவனம் செலுத்தவில்லை. அந்த ஆண்டு நல்ல மதிப்பெண்களுடன், விளையாட்டு, பேச்சு போட்டிகளில் பரிசு வாங்கியிருந்தேன்.சமூக அறிவியல் ஆசிரியர் இளங்கோவன், 'சிறந்த மாணவி விருதுக்கு, உன்னை பரிந்துரைக்க விரும்புகிறேன். அதற்கு, பொது அறிவில் திறன் பெற்றிருப்பது அவசியம்...' என்றார். அன்று துவங்கி செய்தித்தாள் வாசிக்க ஆரம்பித்தேன். உலகம் துவங்கி உள்ளூர் வரை பொது அறிவு தகவல்களை பெற்றேன்.பள்ளி ஆண்டு விழா விருந்தினரான அப்போதைய தமிழக கவர்னர் பாத்திமா பீபி, பொது அறிவு கேள்விகள் கேட்டார். தயங்காமல் பதில் கூறினேன். வெள்ளி பதக்கம் அணிவித்து கவுரவித்தார்.நிகழ்வு முடிந்ததும் அந்த ஆசிரியருக்கு, ஆனந்த கண்ணீர் பெருக நன்றி கூறினேன். இயல்பாக, 'சொன்னதை புரிந்து செயல்பட்டதால் பெருமை கிடைத்துள்ளது...' என வாழ்த்தினார். தொடர்ந்து, சிறந்த மாணவி விருதை மூன்று முறை வாங்கினேன்.இப்போது என் வயது, 35; தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறேன். உலக நடப்புகளை உற்று நோக்கி என் மகளுக்கு பகிர்கிறேன். இதற்கு ஊக்கப்படுத்திய ஆசிரியரை மானசீகமாக வணங்கி மகிழ்கிறேன்.- வி.சுபஸ்ரீ, சென்னை.