ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (1)
பள்ளியில், மாலை வகுப்புகள் முடிந்தன.வீட்டிற்கு செல்ல அறிவிப்பு மணி ஒலித்தது. வகுப்பறையிலிருந்து வெளியே வந்தான் மகிழ். அந்த பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறான். சிறு வயது நடிகர் அஜித்குமார் போன்ற முக சாயல் உடையவன்; கருப்பு கிரானைட் தலைகேசம். நட்பை தேடும் கண்கள். உருட்டிய வெண்ணெய் போல மூக்கு; வெல்வெட் உதடுகள்.கழுத்தில், சிறு மாலை அணிந்திருந்தான்.''நண்பர்களே... நாளை சந்திப்போம்...''சக மாணவர்களிடம் விடை பெற்றான் மகிழ்.புத்தகப் பையை முதுகில் துாக்கிக் கொண்டான்; பாதுகாப்புக்காக தலையில், 'பிங்க்' வண்ண தலைகவசம் அணிந்தான். முழங்கால், முழங்கை, மணிக்கட்டில் பாதுகாப்பு அட்டைகளை பொருத்திக் கொண்டான்.எட்டு சக்கரங்களுடன் கூடிய, இரட்டை ரோலிங் ஸ்கேட்டர்களை கால்களில் மாட்டினான். பளிங்கு சாலையில், மனித அம்பாய் சீறி, மணிக்கு, 30 கி.மீ., வேகத்தில் பாய்ந்தான்.இரண்டு சக்கர வாகனங்களை லாவகமாக தாண்டினான்; வாகனங்களில் செல்வோர் கையசைத்தனர். பதிலுக்கு கையசைத்து மகிழ்வை வெளிப்படுத்தினான்.கை கட்டை விரல் உயர்த்தினார் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர். அடுத்து, 10 நிமிடத்தில், பாற்கடல் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து சேர்ந்தான் மகிழ். புன்னகைத்தபடி அருகில் வந்தார் அடுக்குமாடி முதிய காவலாளி.''தம்பி சரியான சாகச விரும்பி; காலில், சக்கரம் மாட்டி, சாலையில், பறந்து வரும் அழகே அழகு...''''நன்றி தாத்தா...''கால்களில் மாட்டியிருந்த ரோலிங் ஸ்கேட்டரை கழற்றிய பின், இயங்கு ஏணியில் ஏறி, நான்காவது தளத்தை அடைந்தான். கதவைத் திறந்த அம்மாவுக்கு, ''ஹாய்...'' என்றான் மகிழ்.''உள்ளே வாடா...''''அப்பா வரலையாம்மா...''''மாலை, 6:00 மணிக்கு தான் வருவார்...''முகம், கை, கால் கழுவி, டி - சர்ட், பேகிஸ் டவுசர் அணிந்தான். டி - சர்ட்டில், 'மனித நேயம், எங்கள் மதம், மனசாட்சி, எங்கள் கடவுள்...' என்ற வாசகம் மிளிர்ந்தது.அம்மா கொடுத்த பஜ்ஜியை சாப்பிட்டு, காபி குடித்தான். எடித் நெஸ்பிட் எழுதிய, 'தி ரயில்வே சில்ரன்' கதை புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தான்.மாலை, 6:00 மணி. மகிழின் அப்பா வீட்டிற்கு வந்தார். அவர் மீது புரூட் நறுமணம் அடித்தது. ''வாங்கப்பா...''''ஹாய் மகிழ்...''மாலை, 6:00 மணி முதல், 7:00 வரை, 'நேஷனல் ஜியாகிராபிக்' பார்த்தான். பின், 9:00 மணி வரை, பள்ளிப்பாடங்களை படித்து முடித்தான்.இரவு சப்பாத்தி, முட்டைக் குருமா சாப்பிட்டான். ''நான், துாங்கப் போகிறேன்...''பெற்றோரிடம் தெரிவித்து, படுக்கை அறைக்குள் பிரவேசித்தான் மகிழ்.இரட்டை படுக்கை; சுவர்களில் கார்ட்டூன் கதாபாத்திரங்கள், 'லேமினேட்' செய்யப்பட்டு தொங்கின. படுக்கையில் சம்மணமிட்டான்.'இறைவா... உலக மக்களை பசி, பட்டினி இன்றி, மகிழ்ச்சி, ஆரோக்கியத்துடன் சுபிட்சமாக வைத்திருப்பாயாக' மனதில் வேண்டிய பின், படுத்தான் மகிழ்.ரேஷன் செய்யப்பட்ட நீல நிற வெளிச்சம், அறை முழுதும் பரவியிருந்தது. மகிழ் முகத்தருகே ஆரஞ்சு நிறத்தில் ஒரு ரோமப்பந்து புசு புசுத்தது. தொடர்ந்து, அரையடி உயரம், 1,500 கிராம் எடை உடைய பூக்குட்டிகள், மகிழின் கால்மாட்டில் ஊர்ந்தன.'ஓவ்... நாய் குட்டிகள்...'தடவி பார்த்து அறிந்தான்.சிறிது நேரத்தில் -நாய் குட்டிகள் பெருகி மகிழை மொய்த்தன. நரிமுக பொமேரியன், டெடிபியர் பொமேரியன், பாக்கட் மைக்ரோ பொமேரியன், டீ கப் பொமேரியன், மினியேச்சர் பொமேரியன் போன்றவை அங்கிருந்தன.நாய் குட்டிகளின் ஊர்வலத்தில் மிதந்தான் மகிழ். 'எதற்காக, என் படுக்கையறைக்கு வந்துள்ளீர்...'மகிழின் கன்னத்தில் முத்தமிட்டது, குட்டி ஒன்று.'அன்பை செலுத்தி, திரும்பப் பெற தான்...'சட்டென்று கனவு அறுபட்டது. இன்னும், நாய் குட்டிகளின் வாசனை மகிழின் நாசிகளில் உறைந்திருந்தது. அறை கதவு தட்டும் சத்தம் கேட்டது.திறந்து வெளியே வந்தான் மகிழ். ''இன்றைக்கு, மனநிறைவு தரும் ஆச்சரியம் ஒன்று உனக்காக காத்திருக்கிறது...''மகனிடம் பூடகமாக அறிவித்தார் அப்பா.- தொடரும்...- ஆர்னிகா நாசர்