ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (9)
முன்கதை: வளர்ப்பு மிருகங்கள் மீது அன்பு கொண்டு கற்பனையில் சஞ்சரித்து வந்தான் மகிழ். அவன் ஆர்வத்தை அறிந்து, காவல்துறையில் ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கானை தத்தெடுத்தார் அவன் தந்தை. அடுக்குமாடி குடியிருப்பில் எதிர்ப்பை மீறி குழந்தைகள் அந்த நாயுடன் நெருக்கம் காட்டினர். அது, குடியிருப்பின் எல்லா பகுதிகளையும் சுற்றிப் பார்த்து, பாதுகாப்பை உறுதி செய்தது. இனி -அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிய பின், மகிழ் வீட்டுக்கு சென்றது செங்கிஸ்கான். அங்குள்ள அறையில் ஓய்வாக படுத்த போது அதன் மனக்கண்ணில், இறந்த காலத்திய நிகழ்வுகள், நினைவுகளாக ஓடின. தாய் போட்ட, நான்கு குட்டிகளில் ஒன்றாய், பிசு பிசுப்பு திரவத்துடன், அரைக் கண் மூடித் திறந்திருந்தது செங்கிஸ்கான்-.காவல்துறை அதிகாரிகள் நன்கு சோதித்து தேர்ந்தெடுத்தனர்-. அதை முகத்துக்கு நேராக துாக்கி, தன் வாயில் முத்தம் கொடுத்தான் பயிற்சியாளர் காண்டீபன்.தொடர்ந்து...* அதை எடுத்து வந்து கொடுக்கப்பட்ட தொடர் பயிற்சிகள்-* காவல்துறையில் பணியாற்றியது-* காண்டீபன் ஆப்த உறவாய் முகிழ்த்தது-* ஓய்வு பெற்ற போது, மகிழும், அவன் தந்தையும் வந்து தத்தெடுத்தது* அடுக்குமாடி குடியிருப்பு வாசலில் செயலர் ஆயிரம் குறுக்கு கேள்விகள் கேட்டது-* படுக்கை அறையில் வந்து அடைக்கலம் ஆனது... இப்படி நிகழ்வுகள் காட்சி வடிவங்களாய் மனக்கண்ணில் வந்தன. செங்கிஸ்கான் படுத்திருந்த அறை சுவர்களில், அக்ரிலிக் புகைப்படங்களாய், பல குட்டி நாய்கள் சிரித்தன.தனக்குள்ளே கேள்வி எழுப்பி பதில் தேடியது செங்கிஸ்கான்.'எனக்கு ஏன் பணி ஓய்வு அளித்தனர்...''நீ தான், குடு... குடு... கிழவன் ஆகிவிட்டாயே... இனி, குற்றவாளியை கண்டுபிடிக்க சென்றால், அவன் மீதே தடுக்கி விழுவாய்...''என் உடலில் ஆரோக்கியமும், மிடுக்கும் பொங்கி வழிகின்றன. நான் இன்னும், நன்றாக தான் இருக்கிறேன்...''நீ ஒரு தாத்தா. உனக்கு ஓய்வு கொடுத்து விட்டனர்; இந்த வீட்டில், மகிழ்ச்சியாக இருக்கலாம். வகை வகையாய் உணவு தருவர்; சாப்பிட்டு ஓய்வு எடுத்தால் போதுமானது...''என்னால் அப்படி இருக்க முடியாது...''அப்படியென்றால், இந்த அறைக்குள்ளேயே குத்தாட்டம் போடு...''அதுக்கு வேற ஆளப் பாரு. இந்த அடுக்குமாடி குடியிருப்பில், 64 வீடுகள் உள்ளன; உரிமையாளர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க போகிறேன்...''அவர்கள் உன்னை கேட்டனரா...''மகிழுக்காக இந்த உலகத்தையே புரட்டி போடுவேன்...''அப்படியென்றால், காண்டீபனை மறந்து விட்டாய்...''அப்படி கூறாதே... அவர் எனக்கு அப்பா போல...''நீ ஒரு சென்டிமென்ட் இடியட்...''அப்படியே இருந்துட்டு போகிறேன்...''இன்னும் ஒரே வாரத்தில், இரும்பு கடையில், குப்பையாய் துாக்கி எறியப் போகின்றனர்...''சரி... உன் வேலையை பார்...'செங்கிஸ்கான், மனசாட்சியுடன் பேசி விடை தேடியது. இறுதியில் ஓடி ஒளிந்து பம்மியது.'என்னிடம் உடல் பலம் சற்று குறைந்து இருக்கலாம். மன நலம் நான்கைந்து மடங்குகளாய் பெருகி இருக்கிறது...'இந்த மனப் போராட்டம் நடந்த போதே அங்கு வந்தான் மகிழ்.இரவு உணவாக, அவித்த மாமிசமும், காய்கறி சாலட்டும் வைத்தான். அதை சாப்பிட்டது செங்கிஸ்கான்.''நல்லா துாங்கு...''பதிலுக்கு சிறிதாய் குரைத்தது.மறுநாள் காலை - கிழக்கு திசையில், புதிதாக ஒரு சூரியப் பழம் பழுத்து தொங்கியது.'செங்கிஸ்கான் தி கிங்'வாசகங்கள் அடங்கிய கழுத்து பட்டையை அணிந்திருந்தது.நடைப்பயிற்சி மேற்கொண்டான் மகிழ்; உடன் சென்றது செங்கிஸ்கான்.ஒரு மணி நேரத்திற்கு பின், திரும்பி வந்த போது அடுக்குமாடி குடியிருப்பு அல்லோல கல்லோலப் பட்டது. செயலருடன், ஏழெட்டு பேர் குழுமி இருந்தனர்; எதையோ சுற்றி வட்டம் போட்டு இருந்தனர்.''மகிழ்... வந்த அன்றே, வேலையை ஆரம்பித்து விட்டது. உன் செங்கிஸ்கான் செய்ததை நீயே பார்...''செயலர் சுட்டிய இடத்தில், -வீச்சம் அடிக்கும் சிறுநீர் நதி ஓடி தேங்கி இருந்தது. அருகிலே குமிழாய், பழுப்பு நிறத்தில் நாயின் மலம். செங்கிஸ்கானை திரும்பி பார்த்தான் மகிழ்.'இல்லை... நான் செய்யவில்லை...' சமிக்ஞை மொழியில் உணர்த்தியது செங்கிஸ்கான்.''செயலரே... இது, புது இடம் என்பதால், செங்கிஸ்கான் அசிங்கம் செய்து இருப்பான். நானே கழுவி விடுகிறேன்...''''முதல் முறை குற்றம் என்பதால் அபராதம், 2,000 ரூபாய்...''''சரி... செலுத்தி விடுகிறேன்...''எதையோ யோசித்து, பின், சிறுநீர் திரவத்தையும், மலத்தையும் முகர்ந்து பார்த்தது செங்கிஸ்கான்; அதன் கண்கள் அமானுஷ்யமாய் மிளிர்ந்தன. திடீரென ஓட ஆரம்பித்தது. 'எதற்கு ஓடுகிறது' என எண்ணி, பின் தொடர்ந்தான் மகிழ்.- தொடரும்...ஆர்னிகா நாசர்