ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (19)
முன்கதை: வளர்ப்பு மிருகம் மீதான ஆர்வத்தால், காவல்துறையில் ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கானை, தந்தை உதவியுடன் தத்தெடுத்தான் சிறுவன் மகிழ். குடியிருப்பில் பாதுகாப்பை உறுதி செய்து அன்பை பெற்றது. அதன் பயிற்சியாளராக இருந்த காண்டீபன் பிரிய மனமின்றி கடத்தி சென்று பணிய வைக்க முயன்றான். அவனுடன் ஒத்துழைக்க மறுத்ததால் திறந்து விட்டான். ஓட்டம் பிடித்தது செங்கிஸ்கான். இனி -வந்த வழியை மோப்பம் பிடித்து ஓடியது செங்கிஸ்கான். ஓடும் வழியில், பல காட்டு மிருகங்கள் குறுக்கிட்டன.'யார் நீ எங்கே ஓடுகிறாய்...'வினவலுடன் பார்த்தன வரையாடுகள்.'என்னை வளர்க்கும் அன்பு சிறுவன் மகிழ் வீட்டுக்கு செல்கிறேன்...'மென்மையாக குரைத்து, பதிலளித்தது செங்கிஸ்கான்.'ஏதாவது உதவி தேவையா...''அன்பிற்கு நன்றி. விரைந்து செல்ல வேண்டும். புறப்படுறேன்...'சிறிது துாரத்தில் குட்டி யானை ஒன்றுடன், தாய் குறுக்கிட்டது.'யார் நீ... எங்கள் காட்டுக்குள் என்ன செய்கிறாய்...''நான் ஓய்வு பெற்ற போலீஸ் மோப்பநாய். என்னை தத்தெடுத்தோர் வீட்டுக்கு செல்கிறேன்...'தும்பிக்கையால், செங்கிஸ்கானை சுருட்டி எடுத்து, முதுகில் அமர வைத்தது தாய் யானை.'சற்று இளைப்பாறு; உன் பெயர் என்ன...''செங்கிஸ்கான்...''மிடுக்கான பெயர். எனக்கெல்லாம் பெயர் வைக்க ஆளில்லை; வெறும் காட்டு யானையாக தான் அலைகிறேன்...''உனக்கு ஒரு பெயர் வைக்கட்டுமா...' என கேட்டு, நல்ல பெயர் ஒன்றை சூட்டியது.பதிலுக்கு நன்றி தெரிவித்தது தாய் யானை.'என்னை இறக்கி விடு... நான் வெகு துாரம் போக வேண்டும்...''சாப்பிட ஏதாவது தரட்டுமா...''வேண்டாம்... புறப்படும் போது சாப்பிட்டு தான் வந்தேன்...' செங்கிஸ்கானை இறக்கி விட்டது தாய் யானை.குட்டி யானையை கொஞ்சி முத்தமிட்டு புறப்பட்டது செங்கிஸ்கான். சிறிது துாரத்தில், வழி மறித்தன கரடிகள்.'யார் உன்னை துரத்துறது... ஏன் தலைதெறிக்க ஓடுகிறாய்...''மகிழ் வீட்டுக்கு செல்கிறேன்...''வயதில் மூத்த வெளிநாட்டு இன நாயாய் தெரிகிறாய். உனக்கு, என் பெரியப்பா வயது இருக்கும்; பார்வைக்கு கண்ணியமாய் தெரிகிறாய்...''கணிப்புக்கு நன்றி...'கரடி கையில் ஸ்ட்ரா பெர்ரி, தாட் பூட் பழம் மற்றும் ஆரஞ்சு பழங்கள் இருந்தன.'பெயர் என்ன...''செங்கிஸ்கான்...'பழங்களை நீட்டி, 'செங்கிஸ்கான்... எங்கள் மகிழ்ச்சிக்கு, சில பழங்களை சாப்பிட்டு செல்...'ஸ்ட்ரா பெர்ரியை தின்றது செங்கிஸ்கான்.'சுவை எப்படி...''உங்கள் விருந்தோம்பலுடன் தித்திப்பு இரட்டிப்பாய் தெரிகிறது...''பழங்கள் மரங்களின் புன்னகை. நாக்கில் தித்திப்பு தேவராட்டம் ஆடுகிறது...''கவிஞர் போல பேசுகிறாய் அன்பு கரடியே...''இங்கு, எங்களுடன் தங்கி நாளை செல்லலாமே...''இன்னொரு முறை பார்ப்போம். நன்றி; புறப்படுகிறேன்...''வா... ஒரு முறை கட்டி அணைத்துக் கொள்வோம். காட்டு வாசனை அடிக்கும்; போதுமான அளவு நுகர்ந்து செல்...'கரடிகளை அணைத்த போது, கை, கால் முளைத்த ஒரு சிறு இருட்டை கட்டியது போலிருந்தது.வழியில், இரு முயல்கள் கேரட் நீட்டின. வாங்கி தின்றபடி, தொடர்ந்து ஓடியது செங்கிஸ்கான்.எதிரில் வரும் வாகனங்களின் வெளிச்சம் கண்களை கூச வைத்தது. தன் வேகத்துக்கு சமமாக ஒரு லாரி தொடர்ந்து வருவதை உணர்ந்தது செங்கிஸ்கான்.''வளர்ப்பு நாய் போல இருக்கிறாய். வழி தவறி வந்து விட்டாயா...''லாரியை நிறுத்தி கேட்டார் லாரி ஓட்டுநர்.'இல்லை...'''சங்கோஜப்படாதே... கிளீனர் இடம் காலியாக தான் கிடக்கிறது. வந்து ஏறிக்கொள்; உன் இடம் வந்ததும், இறக்கி விடுகிறேன்...'''வேண்டாம்...'''நான் ஒன்று கூறினால், கோபம் கொள்ள மாட்டாயே... நாய் என்றால், எனக்கு கொள்ளைப் பிரியம்; ஏற்கனவே, என் வீட்டில், நான்கு நாய்கள் வளர்க்கிறேன். ஐந்தாவதாக வந்து இணைந்து கொள்கிறாயா...'''மன்னிக்கணும். என்னால் முடியாது...'''உனக்கு பசிக்குதா...'''இல்லை...'அருகில் வைத்திருந்த வர்க்கியை எடுத்து, செங்கிஸ்கானிடம் நீட்டினார் லாரி ஓட்டுநர்.''மனித இனம் தோன்றியதில் இருந்து, அவர்களுக்கு அனுசரணையாக, விசுவாசமாக இருக்கும் வளர்ப்பு மிருகம் நாய்கள் தானே...''லாரி ஓட்டுநரை புன்முறுவலுடன் பார்த்து, அவர் தந்த வர்க்கியை கடித்து தின்றது செங்கிஸ்கான்.''நான் புறப்படுகிறேன். பத்திரமாக செல்...'''சரி...' என தலையசைத்தது செங்கிஸ்கான்.லாரி புறப்பட்டது.காரில் செல்வோர் செங்கிஸ்கானை பார்த்து கையசைத்தனர். அதிவேகமாக ஓடி, மகிழ் வசிக்கும் பாற்கடல் அடுக்குமாடி குடியிருப்பின் பிரதான வாசலுக்குள் பிரவேசித்தது செங்கிஸ்கான். 'செங்கிஸ்கானே... திரும்பி போ... பிரச்னை உண்டாக்கும் நீ, எங்களுக்கு தேவையில்லை'குடியிருப்பின் காவலாளி அறை அருகே, ஒரு பேனர் கட்டப்பட்டிருந்தது. அதில், இவ்வாசகம் பொறிக்கப்பட்டு இருந்தது.- தொடரும்...- ஆர்னிகா நாசர்