உள்ளூர் செய்திகள்

டீன்ஏஜ் தள்ளாட்டம்!

மதுரை, தெற்குவாசல் நாடார் வித்யாசாலை உயர்நிலைப் பள்ளியில், 1981ல், 10ம் வகுப்பு படித்தேன்.பிரத்தியேக டியூஷன் தேவைப்பட்டது. மதுரை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக இருந்த சையது குலாம் முஸ்தபா என்ற அக்தர் பாயிடம் அதற்காக சேர்த்து விட்டிருந்தார் என் தந்தை. அரசின் நல்லாசிரியர் விருது பெற்றிருந்த அவரிடம் கற்றேன். பொதுத்தேர்வில், 80 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்.மேல்நிலை வகுப்பில் பள்ளியை மாற்றியதால் குழப்பம் ஏற்பட்டது. படிப்பில் சரியாக கவனம் செலுத்த இயலவில்லை. உடல் வளர்ச்சியால், 'டீன்ஏஜ்' பருவத்தை புரியாமல் தள்ளாடினேன். கணக்கு பாடத்தில் கவனமே வரவில்லை. இரண்டு பள்ளிகள் மாறியும் நிலைமை சீராகவில்லை.இந்த நிலையில், முந்தைய டியூஷன் ஆசிரியரை அணுகி, 'மகன் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாறுதலை சரி செய்து உதவுங்கள்...' என கேட்டார் தந்தை.அதற்கு இணங்கி, இரண்டு மாதங்கள் எனக்கு மட்டும் பிரத்யேகமாக கற்பித்தார். கணக்கில் சந்தேகங்களை நிவர்த்தி செய்தார். தடம் மாறியிருந்த என் கால்கள் சரியான வழிக்கு வந்தன; பயணம் சீர்பட்டது. தொடர்ந்து பொறியியல் படிப்பையும் சிறப்பாக முடித்தேன்.என் வயது, 58; தெற்கு ரயில்வேயில் முதுநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறேன். பதின்பருவ வயதில் தடம் புரளவிருந்த என் வாழ்வை சீரமைத்து செம்மைப்படுத்திய அந்த தலைமையாசிரியரை நன்றியுடன் நினைவில் பதித்துள்ளேன்!- எஸ்.அப்துல் சலாம் இப்ராஹிம், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !