உள்ளூர் செய்திகள்

ரயில் அருங்காட்சியகம்!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை முதல், தானே நகரம் வரை முதல் ரயில் ஓடியது. இது, 14 பெட்டிகளுடன் ஏப்ரல் 16, 1853 அன்று மாலை 3:30 மணிக்கு புறப்பட்டது. துப்பாக்கியில், 21 குண்டுகள் முழங்க கூடியிருந்தோர் கரகோஷம் எழுப்பினர். வரலாற்று முக்கியத்துவம் மிக்க இதில், 400 பேர் பயணம் செய்தனர். பயண துாரம், 21 கி.மீ., மட்டுமே. அடுத்து, ஆகஸ்ட் 15, 1854ல், ஹவுராவில் முதல் பயணியர் ரயில் இயக்கப்பட்டது. தமிழகத்தில், மெட்ராஸ் ரயில்வே கம்பெனி ரயில்வே பணிகளில் ஈடுபட்டது. சென்னை, வியாசர்பாடி துவங்கி, ஆற்காடு, வாலாஜா சாலை வரை, 63 கி.மீ., தூரத்திற்கு ஜூலை 1, 1856ல் ரயில் இயக்கப்பட்டது. இப்படி துவங்கிய ரயில் போக்குவரத்துக்கு, 1880-ல், 9000 கி.மீ., துாரத்துக்கு பாதை அமைக்கப்பட்டது.கன்னியாகுமரி முதல், காஷ்மீர் வரை ரயில்களை ஓட்டுகிறது இந்திய ரயில்வே. ஆசியா கண்டத்தில் மிகப்பெரியது. ஒரே நிர்வாகத்தில் இயங்கும் உலகின், 2ம் பெரிய அமைப்பாக உள்ளது. ஒவ்வொரு நாளும், 11 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், 7,000 பயணிகளுக்கானது. ரயில்வே துறையில், 15.4 லட்சம் பேர் நேரடி, மறைமுகமாக பணியாற்றுகின்றனர். தினமும், 1.3 கோடி பேர் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். செல்லப் பிராணிகளை ரயிலில் எடுத்து செல்லவும் வசதி உள்ளது.உலகில், பாரம்பரிய சிறப்பு மிக்கதாக, டார்ஜிலிங் - இமாலயன் மலை ரயில் பாதையை, யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய ரிலே இண்டர் லாக்கிங் சிஸ்டம் ரூட் என்ற சிறப்புடன், டில்லி மெயின் ரயில் நிலையம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. ரயில் அருங்காட்சியகம் டில்லியில், பிப்ரவரி 1, 1975ல் துவங்கப்பட்டது. இங்கு ரயில் போக்குவரத்து வரலாறு, தொழில்நுட்ப வளர்ச்சியை தெளிவாக அறிந்து கொள்ளலாம். - எம்.நிர்மலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !