கொண்டைக்கடலை!
கொண்டைக்கடலை, பேபேசி குடும்பத்தைச் சார்ந்த தாவரம். ஆசிய நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த பருப்பை அவித்து மற்றும் கறியாக்கி உண்ணலாம். உலக அளவில் இந்த பருப்பு உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இதில், இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, வெள்ளை; மற்றொன்று, கருப்பு. சிறிதாக இருந்தாலும், புரதம் நிரம்பியது. காய், பச்சையாக இருக்கும் போதே சாலட், சாட் உணவுகளில் சேர்க்கப்படுகிறது. இதை ஊற வைத்து பயன்படுத்த வேண்டும். இதில் செய்யப்படும் உப்புக்கடலை பிரபலமான நொறுவை உணவு. உடைச்ச கடலை எனப்படும் பொட்டுக்கடலையும் கொண்டைக்கடலையில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. கருப்பு கொண்டைக்கடலையில், போலிக் அமிலத்துக்கு அடிப்படையான போலேட் போதுமான அளவில் உள்ளது. இது, மாரடைப்புக்கு காரணமான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைக்கிறது. கர்ப்பிணிகளுக்கு அவசியம் தேவை போலிக் அமிலம். இந்த தானியத்தில் நார்ச்சத்தும் அதிகம். சர்க்கரையை வெளியிடும் பண்பு குறைவு. நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.இரும்பு, சோடியம், செலெனியம், துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிம சத்துகளும் உள்ளன. அளவுடன் சாப்பிட்டால், செரிமான கோளாறு, வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று மந்தம் தீர்க்க உதவும். கொண்டைக்கடலை செடி மீது, வெள்ளைத் துணியை இட்டு, அதன் மீது படியும் பனி நீரைப் பிழிந்து சேகரிப்பது, 'கடலைப் புளிப்பு' என்று அழைக்கப்படுகிறது. செரியாமை, வாந்தி போன்ற உபாதைகளை இது, தீர்ப்பதாக கிராம மக்கள் நம்புகின்றனர்.- ரா.அமிர்தவர்ஷினி