பொறாமை அகற்று!
முருகேசும், ரகுவும் ஒரே பகுதியில் வசித்தனர். ஒரே பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரின் தந்தையரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தனர்.முருகேசுக்கு ஒரு தம்பி இருக்கிறான். ரகு, வீட்டிற்கு ஒரே பிள்ளை. அவனது பேனா, பென்சில், ஸ்கூல் பேக் அனைத்தும் உயர்தரமாக இருக்கும். படிப்பில், முதல் மூன்று இடத்துக்குள் வந்து விடுவான். அமைதியாக இருப்பான்.அவன் மீது முருகேசுக்கு பொறாமை; ஏதாவது குற்றம் கண்டுபிடித்து, வீண் பழி சுமத்துவான். வம்பு சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருந்தான்.அன்று, புதிய மிதிவண்டியில் பள்ளிக்கு வந்தான் ரகு. இதை பார்த்ததும், முருகேஷ் மனதில் மண்டி கிடந்த பொறாமை உணர்வு தலை துாக்கியது. அது குரோதமாக தலை விரித்து ஆடியது.மதிய இடைவேளை - யாருக்கும் தெரியாமல் ரகுவின் மிதிவண்டியில், காற்றை, 'புஸ்...' என, இறக்கி விட்டான் முருகேஷ்; பின், கூர்மையான கல்லால் டயரை கிழித்தான். யார் கண்ணிலும் படாதவாறு வகுப்பிற்குள் சென்று அமர்ந்தான்.அன்று, மாலை வகுப்புகள் முடிந்தன. மாணவர்கள் வீட்டிற்கு புறப்பட்டனர். முருகேஷ் நண்பர்களுடன் வந்து, ''என்னடா ரகு... புது மிதிவண்டியா இது... இப்படி படுத்து கிடக்கு; நல்லதா பார்த்து, வாங்க தெரியாதா...'' என கிண்டல் அடித்தான். எதுவும் பேசாமல், மிதிவண்டியை உருட்டி சென்றான் ரகு.மறுநாள் அதிகாலை -முருகேசை எழுப்பினார் அம்மா.''அகத்திஸ்வரர் கோவிலுக்கு போகணும். இன்று, உன் நட்சத்திர பூஜை இருக்கு; குளிச்சிட்டு கிளம்பு...'' என அவசரப்படுத்தி அழைத்து சென்றார். வழியில் கண்ட காட்சி அவனுக்குள் திகைப்பை தந்தது.அங்குள்ள வீடுகளுக்கு, நாளிதழ் வினியோகித்துக் கொண்டிருந்தான் ரகு. இதைக் கண்டு வியப்படைந்தான் முருகேஷ். எதையும் காணாதது போல் சென்று விட்டான். மறுநாள் - மிதிவண்டியில் பள்ளி சென்று கொண்டிருந்தான் ரகு. வழியில் நடந்து வந்த முருகேசிடம், ''ஏறிக்கோ... சேர்ந்து செல்லலாம்...'' என அழைத்தான். அதில் ஏறியபடி, ''இந்த மிதிவண்டியை, உன் மாமா தானே வாங்கி தந்தாங்க...'' என்றான் முருகேஷ்.சிறிது யோசனைக்கு பின் -''இல்லைடா... தினமும் அதிகாலை எழுந்து, 100 வீடுகளுக்கு செய்திதாள் வினியோகிக்கிறேன்; அதில் கிடைக்கும் பணத்தை சேமித்து, புதிய மிதிவண்டி வாங்கினேன்; மிதிவண்டி இருக்குறதால நிறைய வீடுகளுக்கு, சீக்கிரமாக செய்திதாள் போட முடியுது. இதனால பணம் அதிகமாக கிடைக்கிறது; நேரமும் மிச்சமாகிறது...'' என்றான் ரகு.இதை கேட்டதும், முருகேஷின் மனதில் இருந்த பொறாமை என்ற அழுக்கு கரைந்தது. நட்புடன் புன்னகைத்தான். யார் மீதும் பொறாமை கொள்ளக்கூடாது என முடிவு செய்தான்.குழந்தைகளே... எந்த காரணத்திற்காகவும், யார் மீதும் பொறாமை கொள்ளாதீர்!பா.செண்பகவல்லி