உள்ளூர் செய்திகள்

எட்டு வயதில் சூரிய வணக்கம்!

ஜன.,15 பொங்கல் திருநாள்ஒளி, நெருப்பு ஆகியவற்றை தெய்வமாகக் கருதி வணங்கினர் முன்னோர். குறிப்பாக, சூரியன், சந்திரனை கண் கண்ட தெய்வங்களாக பார்த்தனர். சூரியனுக்கு தைப்பொங்கல், சந்திரனுக்கு, சித்ரா பவுர்ணமி என விழாக்களை உருவாக்கினர். பொங்கல் பண்டிகையின் நாயகராக உள்ளது சூரியன். இது பூமியை விட, 3.33 லட்சம் மடங்கு பெரியது. பூமியிலிருந்து, 15 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது. எல்லா கிரகங்களும், சூரியனை மையமாக்கி சுற்றுகின்றன. பூமி தன்னைத்தானே சுற்றி, சூரியனையும் சுற்றுகிறது. இதனால், இரவு, பகல் ஏற்படுகிறது. சூரியனில் அதிக வெப்பம் தரக்கூடிய ஹீலியம், ஹைட்ரஜன் வாயுக்கள் உள்ளன. இந்த வெப்பம், மின்சக்தி ரூபமாக வெளிப்படுகிறது. இது பூமியை வந்தடையும் போது வெப்ப சக்தியாக மாறி விடுகிறது.எதையும் புராணக் கதையுடன் இணைத்து சொல்வது நம்மிடையே மரபாக உள்ளது. பொங்கல் பண்டிகை தொடர்பாக கூறப்படும் புராணக் கதையை பார்ப்போம்...சப்த ரிஷிகளில் ஒருவரான மரீசி முனிவரின் மகன் காஷ்யபர். இவரது மனைவி பெயர் அதிதி. இவர்களின் பிள்ளையே சூரியன். சூரியனுக்கு, சுவர்ச்சலா, சாயாதேவி, சமுங்கை, பிரபை என்ற மனைவியர் உண்டு. சமுங்கை, பிரபையை, ரஜனி, சுவர்ணா என்றும் சொல்வது உண்டு. இவர்களில் சுவர்ச்சலாவுக்கு, வைவஸ்தமனு, எமதர்மராஜன் என்ற மகன்களும், யமுனை என்ற மகளும் பிறந்தனர். யமுனை நதியாக மாறிவிட்டாள். சுவர்ச்சலாவுக்கு சூரியனின் வெப்பத்தை தாங்கும் சக்தி குறைந்தது. எனவே, தன்னைப் போலவே ஒரு பிம்பத்தை உருவாக்கி சாயா என்று பெயரிட்டாள். சாயா என்பதற்கு நிழல் என்று பொருள். அவள் சூரியனின் மனைவியானாள். அவளுக்கு கிருதத்வாசி, கிருதவர்மா என்ற மகன்களும் தப்தி என்ற மகளும் பிறந்தனர். தப்தி நதியாகி விட்டாள். கிருதவர்மா தவசக்தியால் சிவனருள் பெற்று சனி என்ற பெயரில் நவக்கிரக மண்டலத்தில் இடம் பெற்றார். பிருகு, வால்மீகி, வசிஷ்டர், அகத்தியர் முனிவர்களும், சுக்ரீவன், கர்ணன் ஆகியோரும் சூரியன் அருளால் பிறந்தோர் என்று புராணக்கதை மரபு கூறுகிறது.சூரியன்...* உதிக்கும் நேரத்தில் வணங்குவது உடலுக்கு நல்லது* இதை எட்டு முதல், 80 வயது வரையுள்ளோர் தயக்கமின்றி செய்யலாம்* இது ஒரு வகை எளிய யோகாசனம்* கடற்கரையில் நின்று அதிகாலை சூரிய நமஸ்காரம் செய்வோரை நோய் அணுகாது. இதனால் தான் கன்னியாகுமரியில், சூரியோதயம் காண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் மக்கள். உதயப்பொழுதில் திறந்த வெளியில் வணங்கினால் மனதிற்கும், உடலுக்கும் பலம் கிடைக்கும். சூரியனை அதிகாலையில் கிழக்கு நோக்கி வழிபடுவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.அது மறையும் மாலை வேளையில், கிழக்கு நோக்கி நின்று வித்தியாசமாக வழிபடும் வழக்கம், ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லண்டன் அருகே, ஸ்டோன் ஹெஜ் என்ற ஊரில் நடக்கிறது. உடலின் பின் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க இவ்வாறு செய்கின்றனர். வடக்கு ஆப்ரிக்க நாடான எகிப்திலும் சூரிய வணக்கம் நடக்கிறது. அங்கு, ஆமன்-ரா என்கின்றனர். தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீசில், போபஸ் அப்பலோ என்றும், மத்திய கிழக்கு நாடான ஈரானில் மித்ரா என்ற பெயரிலும் வணங்கப்படுகிறது சூரியன். மத்திய கிழக்கு நாடான ஈராக், சுமேரியாவில் சாமாஷ் என, சூரிய வணக்கத்துக்கு பெயரிட்டுள்ளனர். மேற்கு ஆசியா பகுதியில் உள்ள கருங்கடல் கரையோரம், சூரிய வழிபாடு நடந்ததற்கான ஆதாரங்களை, ஆசிய, ஐரோப்பிய கண்டங்களை உள்ளடக்கிய நாடான ரஷ்ய தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், வட அமெரிக்க நாடான மெக்சிகோ, தென் அமெரிக்க நாடான பெருவிலும் சூரிய வழிபாடு உள்ளது. தென் அமெரிக்க நாடான சிலியில் மன்னரை, 'சூரியனின் மைந்தர்' என்பர். இந்தியாவில், வட மாநிலங்களில் மக்கள் சூரிய வழிபாட்டு தினத்தை, 'மகர சங்கராந்தி' என கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழகத்தில் தை முதல் தேதி பொங்கலிட்டு சூரியனுக்கு படைக்கின்றனர். தை மாதத்தில், கரும்பு, மஞ்சள், கிழங்கு வகைகள் தாராளமாகக் கிடைக்கும். தமிழகத்தில், மூன்று நாட்கள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. காலையில் எழுந்து, சூரியனை வணங்கி, நலம் மிக்க வாழ்வைப் பெறுவோம். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.- தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !