காடு!
அன்று பொங்கல் விடுமுறை. கொண்டாட்டத்தை முடித்த இந்திரன், சமூக அறிவியல் பாடத்தில், சூழல் சீர்கேடு பற்றிய பாடங்களை படித்துக் கொண்டிருந்தான். சற்றே அயர்ந்து துாங்கி விட்டான். அப்போது, அவன் மனதில் காடு பற்றிய எண்ண ஓட்டம் எழுந்தது.கோடையில், காட்டில் மிருகங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. எங்கும் வறட்சியாக இருந்தது. காட்டின் ராஜாவான சிங்கத்திடம் முறையிட்டன விலங்குகள். 'மேய்வதற்கு புற்கள் இல்லை. பருகுவதற்கு காட்டில் எங்குமே தண்ணீர் இல்லை. விரைவில், அனைவரும் இறந்து விடுவோம்...' என்றது கரடி.உடனே, நரியுடன் ஆலோசனை செய்தது சிங்கராஜா.'மனிதர்களை காட்டுக்குள் விட்டது தவறு. அவர்கள், காட்டின் பரப்பளவை பெருமளவு குறைத்து விட்டனர். மரங்களை வெட்டி, நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ளனர்; அதனால் தான் வறட்சி ஏற்பட்டுள்ளது...' என்றது நரி.'சுதந்திரமாக காட்டுக்குள் நம்மால் நடமாட முடியாதவாறு, சுற்று சுவர்களை எழுப்பியும், மின்வேலிகளை அமைத்தும் வருகின்றனர். சில வாரங்களுக்கு முன், ரயில் மோதி பல யானைகள் பரிதாபமாக இறந்தன...'துக்கம் தாளாமல் அழுதது யானை.'காடுகளுக்கு அருகே வந்து குடியேறி விட்டு, ஊருக்குள் சிறுத்தை வருவதாகவும், தோட்டங்களை யானைகள் அழிப்பதாகவும் சொல்கின்றனர்...' என்றது சிறுத்தை புலி.'ஆமாம் ராஜா... இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும்...' என்றது வரிக்குதிரை.'மனிதர்களால் இவ்வளவு பிரச்னையா... புறப்படுங்கள். அவர்களுக்கு நல்ல புத்தி புகட்டுவோம்...' காட்டு விலங்குகளுடன் ஊருக்குள் நுழைந்தது சிங்கராஜா.இந்த காட்சியை எண்ணியதும் திடுக்கிட்டு விழித்தான் இந்திரன். சுற்றும் முற்றும் பார்த்தான். கண்டது எல்லாம் கனவு என்பதை உணர்ந்தான். இயற்கை பேரழிவை தடுத்து நிறுத்தும் பணியில், கவனம் செலுத்த முடிவு செய்தான். பட்டூஸ்... இயற்கையின் ஆதாரமான காடுகளை அழிக்காமல் பாதுகாப்போம்!பெ.பாண்டியன்