உள்ளூர் செய்திகள்

சுவை கனி!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 1976ல், 11ம் வகுப்பு படித்தேன். தலைமை ஆசிரியராக இருந்த முருகேசன் கட்டுப்பாடுகளை முறையாக அமல்படுத்தி கண்காணித்தார். அவரை பார்த்தால் மாணவர்கள் எதிரே வர நடுங்குவர். காலை அழைப்பு மணி ஒலிக்கும் முன் அனைத்து வகுப்புகளும் நிறைந்திருக்கும். தாமதமாக வருவோரை விரல் விட்டு எண்ணி விடலாம். வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது, திடீரென வந்து சோதனை செய்வார். நடத்தும் பாடம் தொடர்பாக கேள்விகள் கேட்பார். இதனால், கற்பிக்கும் பணி ஒழுங்காக நடந்தது. ஒருமுறை போராட்டம் அறிவித்து, பள்ளி வளாகத்துக்கு வெளியே நின்றனர் மாணவர்கள். அப்போது, மிதிவண்டியில் வந்தவர், 'இங்கே என்ன வேலை. போங்கடா உள்ளே...' என அதட்டினார். அவ்வளவு தான்; போராட்டம் பிசுபிசுத்து போனது. அரசு பொது தேர்வு எழுதுவோருக்கு, அறிவியலில் சிறப்பு வகுப்பு நடத்தி புரிய வைப்பார். விளையாட்டிலும், சாதனை படைக்க துாண்டினார். கூடைபந்து போட்டிகளில், பயற்சிகள் அளித்து வந்தார். பிரபல விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, 1974ல் இவரிடம் கற்று தேர்ந்தவர்களில் ஒருவர். எனக்கு, 63 வயதாகிறது; வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பலா பழத்தின் வெளிப்புற தோலில் முள் போல, அந்த தலைமை ஆசிரியர் தெரிந்தாலும், சுவை மிக்க கனியாக இருந்தார். அவர் போல் ஒருவரை காண்பது அபூர்வம் என்ற எண்ணமே எழுகிறது!- எஸ்.பழனிவேல், திருவாரூர்.தொடர்புக்கு: 94421 29176


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !