உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (238)

அன்புள்ள அம்மா...என் வயது, 15; அரசு பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன். பள்ளி சென்று, வீடு திரும்பியவுடன், இரவாடையாக லுங்கி உடுத்துகிறேன். என்னிடம் நான்கு செட் லுங்கிகள் உள்ளன.நீண்ட நாளைக்கு பின், விருந்தாளியாக வந்த தாய்மாமா, என்னை லுங்கியில் பார்த்ததும், 'என்னடா தம்பி... பாவாடை மாதிரி கட்டியிருக்க... இந்த கைலி தமிழ் கலாசாரமே இல்லை. முரடர்கள், வேலையற்றவர் தான் அணிவர். லுங்கிக்கு பதில் பேகிஸ் டவுசர் அல்லது தொளதொள பைஜாமா உடுத்து...' என்றார். அவரது பேச்சு பிடிக்கவில்லை. வெறுப்பை விதைப்பது போல் தோன்றியது. அத்துடன் நிறுத்தாமல், 'அடுத்தமுறை நான் வரும் போது, லுங்கி உடுத்தியிருந்தேன்னா தொலைச்சிருவேன்...' என மிரட்டி, ஊர் சென்றிருக்கிறார்.நான் என்ன செய்ய... தகுந்த ஆலோசனை தாருங்கள் அம்மா.இப்படிக்கு,டி.பரணீந்திரன்.அன்பு மகனே...வண்ணங்கள் நிறைந்த லுங்கியை, கைலி என்றும், தென் தமிழகத்தில், சாரம் என்ற பெயரிலும் கேரளாவில், கைலிமுண்டு என்றும் அழைப்பர். இது, தெற்காசியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளான, ஏமன், ஓமனிலும், ஆப்ரிக்க நாடுகளான, சோமாலியா, எத்தியோப்பியாவிலும் விரும்பி அணியப்படுகிறது. பல பகுதிகளில் பெண்களும் அணிகின்றனர்.கி.பி., 6ம் நுாற்றாண்டில், சோழர் காலத்தில், ஆண்கள் கைலி அணிந்திருக்கின்றனர்.வயது வந்த ஆண் அணியும் லுங்கி, 115 செ.மீ., உயரமும், 200 செ.மீ., நீளமும் இருக்க வேண்டும். சிறுவர்கள் அணியும் லுங்கி மேற்கூறிய அளவில், மூன்றில் இரண்டு பங்கு இருக்கும்.ஐந்து வகை லுங்கிகள் பயன்பாட்டில் உள்ளன. அவை...* பருத்தியால் நெய்யப்பட்டது* பாலியஸ்டரால் ஆனது* டிசைன்கள் இல்லாத வண்ணமயமானது* சதுர கட்டங்கள் உடையது* அழகிய பூக்களும், உருவங்களும் அச்சடிக்கப்பட்ட பட்டிக் லுங்கி.லுங்கியை பப்பாயா, நிரஞ்ச், சங்குமார்க், நண்டுமார்க், துரோனா, எஸ்.பி.என், கிடெக்ஸ், காட்டன் கிரவுன், ப்ளூ லீப், மிஸ்டர் லுங்கி போன்ற தனியார் நிறுவனங்களும், பான்டெக்ஸ், கோ - ஆப் டெக்ஸ் போன்ற அரசு நிறுவனங்களும் தயாரிக்கின்றன. கைத்தறியில் லுங்கிகள் நெய்வதை விட, விசைத்தறியில் தயாரிப்பது மிக எளிது.நான்காயிரம் லிட்டர் குடிநீரில் சாயம் கலந்து தான், ஒரு கைலி தயாரிக்கின்றனர். இது அலுவலக பயன்பாட்டுக்கு ஏற்ற உடை அல்ல. பெண்கள் நைட்டி அணிவது போல, ஆண்களுக்கு காற்றோட்டமான இரவாடை.'சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற படத்தில், ஹிந்தி நடிகர் ஷாரூக்கானும், நடிகை தீபிகா படுகோனேயும் லுங்கி டான்ஸ் ஆடி பிரபலப்படுத்தி விட்டனர்.ஒவ்வொருவருக்கும் ஆடை சுதந்திரம் உண்டு. நீ தொளதொள பைஜாமா ஜிப்பாவோ, பேகிஸ் டவுசரோ, லுங்கியோ எதை வேண்டுமானாலும் அணியலாம். லுங்கியை மூட்டி வைத்து பயன்படுத்துவது பாதுகாப்பானது.மாமாவின் மிரட்டலை விடு... உன் பெற்றோர் என்ன சொல்கின்றனரோ அதன்படி நட!- அள்ளக்குறையா அன்புடன்,பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !