உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (239)

அன்புள்ள ஆன்டி...என் வயது, 20; இளங்கலை விலங்கியல் படிக்கும் மாணவி. என் தோழியர் அனைவரும், 'அமேசான்' வர்த்தக தளத்தில், 'ஆன்லைன்' வழியாக பொருட்கள் வாங்குகின்றனர். எனக்கு அது வியப்பாக இருக்கிறது. 'இணைய வழி வியாபாரத்தில் ஏமாற்று அதிகம்; ஒரு பொருளை நேரில் பார்த்து, தொட்டு தடவி, பேரம் பேசி வாங்குவது போலிருக்காது, ஆன்லைன் வியாபாரம்' என்கிறேன் நான். 'நம்பகமான நிறுவனம் ஒன்றில் பொருள் வாங்கி பார்...' என்கின்றனர் தோழியர்.அமேசான் போன்ற இணைய தள சந்தையில் பொருள் வாங்கலாமா ஆன்டி... தயவுசெய்து நல்ல அறிவுரை கூறுங்கள்.இப்படிக்கு,ஆர்.எஸ்.அசோகவர்ஷினி.அன்பு மகளுக்கு...இணைய வழியில் பொருட்கள் விற்கும் இரு பிரதான கார்ப்ரேட் நிறுவனங்களை உற்று நோக்குவோம். ஒன்று அமேசான்; இன்னொன்று பிளிப்கார்ட்!அமேசான் நிறுவனத்தின் தலைமையகம், அமெரிக்கா வாஷிங்டன், சியட்டில் நகரில் உள்ளது. அமேசான் ஸ்தாபகர் பெயர் ஜெப் பெசோஸ். இது, 1994ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில், 15.41 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.அமேசான், 50 நாடுகளுக்கு மேல் விற்பனை கிளைகள் விரித்துள்ளது. அமேசானுக்கு சொந்தமாக, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட டெலிவரி மின் வாகனங்கள் உள்ளன. பொருட்களை பாதுகாக்க கிடங்குகள் உள்ளன. அமேசானில், புத்தகம், இசை கருவிகள், மென்பொருள், ஆடை, காலணி, திறன் பேசி, குழந்தை தொடர்பான பொருட்கள், பலசரக்கு, உடல் ஆரோக்கிய சுய சுத்த பொருட்கள், சமையறை பொருட்கள், நகை மற்றும் கடிகாரங்கள், தோட்ட பொருட்கள், பொம்மைகள், வீடியோ விளையாட்டுகள் அடங்கிய பல லட்சம் தயாரிப்புகள் விற்கப்படுகின்றன.அமேசான் நிறுவன ஓ.டி.டி., தளத்தில் ஆயிரக்கணக்கான இந்திய மற்றும் சர்வதேச படங்கள் காட்சிபடுத்தப்படுகின்றன. அமேசான் நிறுவனத்தின், மூன்று குறிக்கோள்கள்... நம்பிக்கையான பொருள் கொள்முதல் அனுபவத்தை தருவது வாடிக்கையாளர் அல்லாதோருக்கும் செய்தியை கொண்டு சேர்ப்பது மாசுகள் அறவே இல்லாத உலகை பரிசளிப்பது என்பதாகும்.அமேசானில் வாங்கும் பொருட்கள் பலவற்றுக்கு கூரியர் செலவு இலவசம்.மொத்தத்தில், அமேசான் நிறுவனம், ஷாப்பிங்கை மிக வீரியமாகவும், புதுமை அனுபவமாகவும் மாற்றி பரிசளிக்கிறது. கடை வாடகை, ஊழியர் சம்பளம், மின் கட்டணம், விளம்பரம், இடைத்தரகர் கமிஷன், நேர விரயம் இல்லாமல், மலிவான, அதே நேரம் தரமான பொருட்களை வீட்டு கதவை தட்டி தருகிறது. சிறு வியாபாரிகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் உச்சத்துக்கு நகரும் போது, சில பக்க விளைவுகள் இருக்க தான் செய்யும். ஆன்லைன் வர்த்தகத்தில், மோசடிகள் இருக்க தான் செய்கின்றன. நாம் நம்பகமான இணைய வழி வர்த்தகத்தில் தான் ஈடுபட வேண்டும்!- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !