பயன்மரம்!
மதுரை, டான் பாஸ்கோ பள்ளியில், 1996ல், 9ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்... அன்று, அரையாண்டு தேர்வு முடிந்திருந்தது. அறிவியல் ஆசிரியர் விவேகானந்தம் அனைத்து மாணவ, மாணவியரையும் அழைத்தார். ஒவ்வொருவருக்கும் சிறிய காகித பை ஒன்றை கொடுத்தார். அதில், வேம்பு, புளி போன்ற மர விதைகளும், அவரை, மொச்சை போன்ற காய்கறி விதைகளும் இருந்தன. அதை பார்த்து புரியாமல் நின்றோம். மிகவும் மென்மையாக, 'உங்கள் குடும்பத்தினருக்கு, தோட்டமோ, விவசாய நிலமோ இருக்கும். வீட்டை சுற்றி சிறிய இடமாவது இருக்கும். அதில், இந்த விதைகளை துாவுங்கள். முறையாக நீர் ஊற்றி பராமரியுங்கள். விடுமுறையில், உறவினர் வீட்டுக்கு சென்றால், அங்குள்ள இடத்தில் விதைத்து நற்செயல் புரியுங்கள்...' என அறிவுரைத்தார். அதன்படி, விடுமுறையை பயன் மிக்க பொழுதாக்கினோம். பள்ளி படிப்பு காலம் முடிந்த போது எங்கள் வளர்ச்சியுடன், மரம், தாவரங்களும் வளர்ந்திருந்தன. அவை மிகவும் மகிழ்ச்சி தருகின்றன. தற்போது, என் வயது: 43; கல்லுாரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறேன். நான் நட்டு வளர்ந்த மரங்களின் பசுமையில், அந்த ஆசிரியரின் உயரிய சிந்தனையை கண்டு வருகிறேன்.- ஆர்.ரோகினி, விருதுநகர்.