வேழமலைக்கோட்டை! (2)
முன்கதை: வேழமலை மன்னர் கஜவீரர், உடல்நலமின்மையால் சிறுவனாக இருந்த இளவரசர் வீரவேலனுக்கு முடிசூட்ட முடிவு செய்தார். அதற்கு எதிராக சதியில் ஈடுபட்டனர் அரண்மனையில் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள். அவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. இனி - 'என்ன சொல்கிறாய்...'வீரனிடம், பதற்றத்துடன் கேட்டார் தளபதி.'இளவரசர் வீரவேலனை அரண்மனையில் காணவில்லை...''ஒருவேளை வெளியில் எங்காவது சென்றிருப்பாரோ...''வாயில் காவலாளிகளிடம் விசாரித்து விட்டோம். இங்கிருந்து வெளியேறவில்லை...''எங்கேயாவது பணிகளில் ஈடுபட்டு இருப்பார்; அரண்மனையில் நன்றாக தேடுங்கள்...'பதற்றத்துடன் கூறினார் ராஜகுரு.முடிசூட்டு விழாவிற்கு இன்னும், மூன்று நாட்களே இருந்தன. அதனால் இது, புது பிரச்னையாக உருவெடுத்தது.தளபதிக்கு விசுவாசமான வீரர்கள், அரண்மனையை சல்லடை போட்டு தேடினர்.உளவாளிகள் சிலரை மாறுவேடத்தில், நாடு முழுதும் தேடுவதற்கு அனுப்பினார் தளபதி.'இளவரசர் எங்கும் இல்லை' என்ற தகவலே கிடைத்தது. ஆலோசனை நடத்த மீண்டும், கூடினர் மூவரும். சிறிது நேரத்திற்கு பின் தலைமை அமைச்சரும், அங்கு வந்து சேர்ந்தார். 'இளவரசர் காணாமல் போனது இயல்பான நிகழ்வாக தெரியவில்லை...'அமைச்சர் குரலில் குழப்பம் தெரிந்தது.'அரண்மனை முழுதும், தேடி விட்டோம். நகருக்குள்ளும், சாதாரண உடை அணிந்து ரகசியமாக தேடுகின்றனர் காவலர்கள்...''நீரில் மூழ்கி துர்மரணம் ஏதாவது நிகழ்ந்து இருக்குமோ...''நீச்சல் கலையை கற்று தேர்ந்துள்ளார் இளவரசர். எனவே, நீர்நிலையில் மரணத்துக்கு வாய்ப்பில்லை; வனப்பகுதியில் வளர்ந்ததால், விலங்குகள், பாம்புகளை சமாளிக்கும் திறனும், அவருக்கு உண்டு; மரணம் ஏற்பட்டிருந்தால், உடல் கிடைத்திருக்கும்...''இளவரசருக்கு முடிசூட்டுவதை அறிந்து, எதிரி நாட்டவர் எவரேனும், தந்திரமாக கடத்தி சென்றிருப்பரோ...'சந்தேகத்தை கிளப்பினார் வைத்தியர்.'அப்படியும் இருக்கலாம்' என்ற எண்ணம் வர, ஒப்புதலாக தலையசைத்தார் ராஜகுரு.'எதிரி நாட்டினர் கடத்தியிருந்தால், அவர்கள் தரப்பில் தெரிவித்தால் மட்டுமே உறுதியாக அறிய இயலும்; அதுவரை, காத்திருக்க வேண்டும். இனி, சில திட்டங்களை மாற்றியமைக்க வேண்டியது தான்...' ராஜகுரு கூறியதை கேட்டு, கேள்விக்குறியுடன் பார்த்தனர் மூவரும்.'இரு குழுக்களாக பிரிந்து, திட்டங்களை மேற்கொள்வோம். காணாமல் போன இளவரசர் பற்றிய விஷயங்கள் மற்றும் நாட்டுப் பாதுகாப்பை நானும், தளபதியும் கவனித்து கொள்கிறோம். மன்னரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும், நமக்கு பணம் ஈட்டும் விஷயங்களையும் அமைச்சரும், வைத்தியரும் பார்க்கட்டும்...''ராஜகுரு கூறுவது சரி தான். திட்டங்களை பிரித்து மேற்கொண்டால், தொய்வின்றி செயல்பட முடியும்...'ஆமோதித்தார் அமைச்சர்.'இளவரசர் காணாமல் போன விஷயம் மன்னருக்கு தெரியாதபடி, பார்த்துக் கொள்ள வேண்டும். இளவரசரை கடத்தி பாதாள சிறையில் அடைத்திருப்பதாகவும், சொல்வது போல் மன்னர் நடந்து கொள்ளாவிட்டால், கொன்று விடுவோம் என்றும், மிரட்ட வேண்டியது தான்...''ராஜகுருவின் திட்டத்தை செயல்படுத்த முடியுமா'யோசித்தார் அமைச்சர்.'மன்னருக்கு விசுவாசமான வீரர்கள் இருக்கின்றனரே...''அவர்கள் மிகவும் சொற்ப எண்ணிக்கை தான். பெரும்பாலான படை, என் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதற்கு மன்னர், நேரடியாக கட்டளை பிறப்பிக்க இயலாது; அதேசமயம், நோய்வாய்ப்பட்டிருப்பதால், மன்னரால் சுறுசுறுப்பாக செயல்படவும் முடியாது...'சூழ்நிலையை விவரித்தார் தளபதி.'இளவரசர் பற்றி குடிமக்கள் கேட்பார்களே...'சந்தேகம் எழுப்பினார் அமைச்சர்.'முடிசூட்டுவதற்கு முன், களப்பயிற்சி பெற வேறு நாட்டிற்கு இளவரசர் சென்றுள்ளதாக, மன்னர் அறிவித்தால் போதும்...'பிரச்னைக்கு தீர்வு கூறினார் ராஜகுரு.'மன்னர் அப்படி அறிவிப்பாரா...''இளவரசர் உயிருக்கு ஆபத்து என, மிரட்டினால் அறிவிப்பு செய்துதான் ஆக வேண்டும் அமைச்சரே...' என்றார் தளபதி.தாமதிக்காமல் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தனர்.இளவரசரை பாதாள சிறையில், அடைத்திருப்பதாக உடனே கூறினர். இதைக் கேட்டு மன்னரும், மகாராணியும் அதிர்ந்தனர்.'இது ராஜ துரோகம்...'கர்ஜித்தார் மன்னர்.'சில காரணங்களுக்காக இந்த முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது மன்னா...''இளவரசரை உடனடியாக விடுவியுங்கள்...''கவலைப்படாதீர் மன்னா... இளவரசரை, விரைவில் விடுவிப்போம். அதுவரை, நிர்வாகப் பொறுப்பை எங்களிடம் ஒப்படையுங்கள்; உங்களுக்கு கட்டுப்பட்டு செயல்படுவோம்...''இளவரசர் வீரவேலன் நிலை என்ன... வேழமலை நாட்டின் எதிர்காலம்...''மன்னா... இளவரசர் இருப்பது சிறையில் தானே தவிர அவருக்கு, எந்த குறையும் இல்லை. அனைத்து வசதிகளும் செய்து கொடுத்திருக்கிறோம்...'மன்னரின் முகம் சோர்வுற்றது. மகாராணியின் கண்களில், கட்டுப்பாட்டை மீறி, கண்ணீர் சுரந்தது.மவுனமாக சம்மதம் தெரிவித்தார் மன்னர்.'ஒப்புக்கொள்வதை தவிர எனக்கு, வேறு வழி தெரியவில்லை...'சோர்வுடன் கூறினார் மன்னர்.காணாமல் போன இளவரசரை பாதாளச் சிறையில் அடைத்திருப்பதாக, வஞ்சகமாக ஒரு பொய்யை கூறினாலும், அவரை கண்டறிய தீவிரம் காட்டினர் அந்த நால்வரும்.ஒற்றன் வந்திருப்பதாக செய்தி கூறப்பட்டது. அவனை மறைவிடத்தில் சந்தித்தனர் ராஜகுருவும், தளபதியும். இடுப்பு வளையக் குனிந்து, வணங்கினான் ஒற்றன்.'முக்கிய செய்தி ஏதாவது உள்ளதா...''நாட்டை ஆபத்து சூழ்வதற்கான அறிகுறிகள் தெரிகின்றன தளபதி...'ஒற்றன் கூறிய தகவலைக் கேட்டதும், கடும் அதிர்ச்சியில் உறைந்தனர்.- தொடரும்...ஜே.டி.ஆர்.