வியாபாரி!
வியாபாரி கந்தன், கடின உழைப்பாளி, அதேசமயம் புத்திசாலியும் கூட. சளைக்காத உழைப்பால், பல ஊர்களில், தொழில் நிறுவனங்கள் துவங்கி, நிர்வாகத்தை முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தொழில், வியாபாரத்தில் முன் மாதிரியாக போற்றத்தக்க மனிதராக விளங்கினார்.அன்று கணக்கரை அழைத்து, ''என் ஒட்டு மொத்த சொத்து விபரங்கள் என்ன... தற்சமயம், என் வியாபாரங்களை நிறுத்தினால், எவ்வளவு காலம் சுகமாக வாழ முடியும்...'' என்று கேட்டார் வியாபாரி.இரண்டே நாட்களில் ஒட்டு மொத்த வரவு, செலவுகளையும் பார்த்து வந்தார் கணக்கர்.''இதுவரை செய்துள்ள முதலீடுகள் நல்ல வருமானம் ஈட்டுகிறது. தற்போது ஓய்வு பெற்றாலும் கூட இரண்டு தலைமுறைக்கு, பொருளாதார கவலை இன்றி வாழலாம்...''இதை கேட்டதும், கந்தனுக்கு துாக்கிவாரி போட்டது. அப்படி என்றால் அடுத்தடுத்து வரும் சந்ததிகளின் நிலை என்ன என எண்ணி கவலைபட்டார். உண்ணாமல், உறங்காமல், உடல்நிலையில் அக்கறை கொள்ளாமல் வாடினார்.நண்பர் ஒருவர், அவரை சந்திக்க வந்தார்.''தொழிலில் ஏதாவது பிரச்னையா...''முகவாட்டம் கண்டு அக்கறையுடன் விசாரித்தார்.''கவலையெல்லாம் இரண்டு தலைமுறைக்கு அடுத்தடுத்து வரும் சந்ததியினரின் நல்வாழ்வை உறுதி செய்ய போதுமான சொத்தை சேர்க்காதிருப்பது தான்...'' என்றார்.நண்பருக்கு பிரச்னையின் ஊற்றுக் கண் புரிந்தது. ''நண்பா... ஊருக்கு முனிவர் ஒருவர் வந்திருக்கிறார். நாளை அவரை சந்தித்து வா. செல்லும் போது மறக்காமல் அவருக்கு உணவு எடுத்துச் செல்; உன் கவலையை தீர்க்கும் வழியை சொல்வார்...' என்றார்.மறுநாள் தட்டு நிறைய உயர்தர உணவு வகைகளுடன் முனிவரை சந்தித்தார் வியாபாரி.வணங்கி, உணவை கொடுத்தார். ''தம்பிகளா... வாருங்கள்... சுவை மிக்க உணவு எடுத்து வந்திருக்கிறார்...'' மாணவர்களை அழைத்து, அந்த உணவை கொடுத்தார் முனிவர்.''குருவே... சற்று முன், ஒருவர் நமக்கான இன்றைய உணவை அளித்து சென்றார்...'' என்றார் முதன்மை சீடர்.புன்முறுவலோடு, ''இன்றைய உணவுத் தேவை பூர்த்தியாகி விட்டது. உங்கள் அறுசுவை உணவை ஏற்க இயலாத நிலையில் இருக்கிறேன்...'' என்றார் முனிவர்.''இந்த உணவை நாளைய பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளுங்கள்...'' ''உணவை பதுக்கி வைக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை. இன்றிருப்பதை உண்டு, பிறருக்கும் பகிர்ந்தளித்து வாழ்கிறோம்...''''நாளைக்கு உணவில்லை என்றால் என்ன செய்வீர். சேமிப்பு அவசியம் தானே...''''பிறக்காத நாளை பொழுதை, கற்பனையாக காண்கிறோம். பிரச்னை அதிலிருந்து உருவாகி, அதன் பாதிப்புகளை நினைத்து அஞ்சி, இன்றைய நாளை வாழாமல் கடக்கிறோம். இந்த நாளை இழந்தவருக்கு மறுநாள் எப்படி கை கொடுக்கும்...''இன்று நேற்றின் தொடர்ச்சி, நாளை இன்றின் தொடர்ச்சி. நாளை பற்றிய கவலையுடன் வாழ்ந்தால், இதன் தொடர்ச்சி மறுநாள் துவங்கும். கவலை மட்டும் மாறாமல் தொடர்கிறது. இது பிரபஞ்ச விதிகளுக்கே எதிரானது இல்லையா...''கவலையின்றி, திட்டமிட்டு உழையுங்கள்; மாற்றம் ஒன்றே மாறாதது; இவ்வேளையை உழைப்பால் வளமாக்கி, சிறப்புடன் வாழ்ந்து உதவினால், இதன் தொடர்ச்சி நன்றாக அமையும்...'' என்றார் முனிவர்.தெளிவு பெற்ற மனதுடன் புறப்பட்டார் வியாபாரி.பட்டூஸ்... காலம் அறிந்து செயல்பட்டால் மனம் நிம்மதி பெறும்!- எம். அசோக்ராஜா