உள்ளூர் செய்திகள்

தடை செய்யாதே!

புதுச்சேரி, தட்டாஞ்சாவடி, அரசு நடுநிலைப் பள்ளியில், 1985ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...வகுப்பில், 40 மாணவ, மாணவியர் எட்டு பெஞ்சுகளில் அமர்ந்திருப்போம்; தேர்வில் முதல் எட்டு இடங்களை பிடித்தவர்களை, பெஞ்சிற்கு ஒருவராக அமர்த்தி, காண்காணிக்கும் பொறுப்பு வகிக்க செய்தார், வரலாறு, புவியியல் ஆசிரியை வ.விஜயலட்சுமி.பொறுப்புக்கு வந்ததும், முதல் நாள் நடத்திய பாடங்களில் இருந்து கேள்விகளை, மறுநாள் அவரவர் பெஞ்சில் இருப்போரிடம் கேட்டு சோதிக்க வேண்டும். நானும், ஒரு பெஞ்சிற்கு பொறுப்பு வகித்தேன். அன்று, என் பெஞ்சில் நண்பன் ஒருவன் பாடங்களை படிக்காமல் வந்திருந்தான். கேள்விகளுக்கு பதிலளித்ததாக கூறி, ஆசிரியையிடம் இருந்து தப்புவிக்க கெஞ்சினான். வேறு வழியின்றி அவ்வாறு செய்தேன். அன்று, நேரடியாக அவனிடம் கேள்வி கேட்டார் ஆசிரியை. தெரியாமல் முழித்தான். விபரம் அறிந்து என்னை திட்டி, 'உன் இரக்க குணம் பிறர் வளர்ச்சிக்கு தடையாக இருக்க கூடாது...' என்று அறிவுரைத்தார். அதில் பொதிந்திருந்த பொருளை உணர்ந்து தெளிந்தேன்.என் வயது, 50; அரசு ஊழியராக பணி செய்கிறேன். அந்த ஆசிரியைக்கு சமீபத்தில் கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது அரசு. என் வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்ந்தேன்.- மு.கண்ணன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !