இடைவெளி!
மதுரை மாவட்டம், சோழவந்தான் ராணி மங்கம்மாள் நடுநிலைப் பள்ளியில், 1964ல், 5ம் வகுப்பு படித்தேன். தலைமையாசிரியராக இருந்த பரமேஸ்வரன், கண்டிப்பானவர்; பொது அறிவை வளர்க்கும் விதமாக தகவல்களை அவ்வப்போது கூறுவார்.விடுமுறை நாட்களில், நண்பர்களுடன் பக்கத்தில் இருந்த ரயில் நிலையத்துக்கு செல்வேன். அங்கு, நடைமேடை மற்றும் ரயில் பாதையில் கிடக்கும் வெற்று தீப்பெட்டிகளில் படங்களை சேகரிப்போம்.ஒருநாள், அங்கு வந்த தலைமையாசிரியர் எங்கள் செயல் கண்டு, 'விடுமுறை நாளில் வீட்டுப்பாடங்களை படிக்காமல், உயிருக்கு ஆபத்தான செயலை செய்கிறீர்களே... திடீரென கூட்ஸ் ரயில் வண்டி வந்தால், என்ன செய்வீர். இனிமேல், இது போன்று பார்த்தால் பள்ளியை விட்டே துரத்தி விடுவேன்...' என எச்சரித்தார்.பின், கனிவுடன், 'ரயில் பாதையில் தண்டவாள இணைப்புகளுக்கு இடையில், சிறியதாக ஒரு இடைவெளி விடப்பட்டுள்ளதை கவனித்தீரா... அதற்கான காரணத்தை கூறுங்கள்...' என வினவினார்.தெரியாமல் விழித்தது கண்டு, 'கண்முன் நடந்து வரும் அறிவியல் செயலை அறியாமல் இருக்கிறீர்... கோடை காலத்தில் வெப்ப அதிகரிப்பால், இரும்பு போன்ற உலோகங்கள் விரிவடையும். தண்டவாளத்தில் இடைவெளி விடா விட்டால் நெளிந்து பாதிப்படைந்து விபத்து ஏற்படும்... அதை தவிர்க்கவே இந்த ஏற்பாடு...' என்று அறிவுரைத்தார். நல்லறிவு பெற்றோம்.தற்போது, என் வயது, 70; தமிழக அரசில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். அன்று ரயில் நிலையத்தில் நிகழ்ந்தது பசுமையாய் மனதில் படர்ந்துள்ளது. அறிவார்ந்த அந்த தலைமை ஆசிரியரை போற்றி வாழ்கிறேன்.- கு.கணேசன், மதுரை.தொடர்புக்கு: 99526 82637