வேழமலைக்கோட்டை! (4)
முன்கதை: வேழமலை நாட்டில் முடிசூட்டு விழா நடக்க இருந்த நிலையில் இளவரசன் வீரவேலன் திடீரென மாயமானதாக தகவல் வந்தது. அதேநேரம் நாட்டின் தெற்கு பகுதியில் அன்னியர் நடமாட்டத்தை முறியடிக்க சென்ற குதிரை படை வீரர்கள் இருவரை காணவில்லை. இனி - 'நம் வீரர்கள் இருவர் வரவில்லையே...'மகேந்திரன் விசாரித்துக் கொண்டிருந்தான். அப்போது, மெய்க்காப்பாளர் இருவருடன் குதிரையில், அங்கு வந்தார் தளபதி.'எதிரிகளை தேடி, காட்டுக்குள் சென்ற குதிரைப்படையில் இருவர் திரும்பவில்லை...'மகேந்திரன் கூறிய தகவலை கேட்டதும், தளபதியின் முகம் மாறியது.'எங்கு சென்றனர்...'கோபத்தில் தளபதியின் கண்கள் சிவந்தன.பதில் சொல்ல முடியாமல் தயங்கினான் மகேந்திரன்.'எப்படி அவர்கள் மட்டும் காணாமல் போவர்; எதிரிகள் சிறை பிடித்திருக்க வாய்ப்பு உள்ளதா...''நாங்கள் தனித்தனியாக பிரிந்து, எதிரிகளை தேடினோம்; அப்போது தான், ஏதாவது நிகழ்ந்திருக்கும்...''அங்கே என்ன நிலவரம் என்பதை விபரமாக சொல்...''தளபதி... எதிரிகள் கால்நடையாக ஊடுருவி வந்திருக்கின்றனர். மரக்கொம்புகளை வெட்டி, காய்ந்த கொடிகளை சுற்றி தீப்பந்தம் தயாரித்து, அங்கிருந்து நகர்ந்திருக்கின்றனர். அதற்கான தடயங்கள் உள்ளன...''எதிரிகள் இருக்கும் இடம் தெரிந்ததா...''கண்டுபிடிக்க இயலவில்லை...''எதிரிகள் ஊடுருவி, உளவு பார்த்ததோடு மட்டுமின்றி, நம் வீரர்களையும் சிறை பிடித்திருப்பது அசாதாரணமாக தோன்றுகிறது...' என்றவர், சிறிது நேரம், மவுனம் காத்த பின், 'அடுத்த கட்ட நடவடிக்கைக்காக, மீண்டும், காட்டிற்குள் செல்ல தயாராக இருங்கள்...' என கூறி, விலகினார் தளபதி.தொடர்ந்து நடந்த ஆலோசனை கூடத்தில், ராஜகுரு, அமைச்சர் மற்றும் தளபதி மூவரும் பங்கேற்றனர். நிகழ்வை விவரித்தார் தளபதி.'வேழமலை நாட்டின் மீது, படையெடுக்க திட்டம் தீட்டி இருப்பதால் தான், நம் வீரர்களை சிறை பிடித்திருக்கின்றனர்...' என்றார் ராஜகுரு.'இதை செய்தது எந்த நாடாக இருக்கும்...''மருதநாட்டு மன்னனோ...''நமக்கு நட்பு நாடல்ல என்றாலும், எதிரி நாடு அல்லவே... தவிர, தன் நாட்டை மனநிறைவோடு தான் ஆள்கிறான் அந்த மன்னன்...''ஒருவேளை வந்திருப்பது வேங்கை நாட்டு வீரர்களாக இருக்கலாம்...''வேங்கை நாடு, தொலை துாரத்தில் இருக்கிறது. அங்கிருந்து படை வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் உணவு பொருட்களை எடுத்து வந்து போர் புரிவது, நடவாத செயல்...''அதேசமயம், வேங்கை நாட்டு மன்னனும், களநில மன்னர்களும் உறவினர்கள் அல்லவா... நம் வேழமலைக்காட்டை அடுத்துள்ள களநில மன்னர்களுடன், அவர்கள் கூட்டு சேர்ந்து, நம் மீது படையெடுக்க வாய்ப்பு இருக்கிறது...''ராஜகுருவே... அது எப்படி சாத்தியம். களநில மன்னர்கள், அவ்வளவு பலம் மிக்கவர்கள் அல்ல; குறுநிலத்தை ஆளும் அவர்களிடம், ஆயுதங்கள், போர் வீரர்கள் நிறைய இருக்க வாய்ப்பில்லை...''வேங்கை நாட்டிலிருந்து, படைக்கலன்கள், ஆயுதங்கள் மற்றும் உணவு பொருட்களுடன் வந்து, களநில நாட்டில் இருப்பு வைத்து, நம் மீது போர் தொடுக்கலாம் அல்லவா...' விளக்கினார் ராஜகுரு.'அப்படியென்றால், வாய்ப்புள்ளது...'ஒப்புக் கொண்டார் தளபதி.'எதுவாக இருந்தாலும், இந்த முயற்சியை, இப்போதே முறியடிக்க வேண்டும். இன்னும், அதிக படை வீரர்களை அனுப்பி, காட்டுப்பகுதி முழுவதையும் தேடுங்கள்; எதிரிகளை சிறை பிடியுங்கள்...' என்றார் அமைச்சர்.'கோட்டையின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்...''செய்து விட்டேன் ராஜகுருவே... எதிரிகளின் நடமாட்டம் மீண்டும், தென்படுகிறதா என்பதை, கோட்டை கொத்தளத்திலிருந்து இரவு முழுதும், கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளேன்...''சிறப்பு... இன்னொரு விஷயம்...'தாழ்ந்த குரலில் ஆரம்பித்த ராஜகுரு, 'நடந்த நிகழ்வுகள் இப்போதைக்கு, மன்னருக்கு தெரியாமல் இருப்பது தான் நல்லது. அதை நாமே சரி செய்வோம்...' என்றார்.அனைவரும் ஆமோதித்தனர்.நள்ளிரவு வேளை -'கோட்டையில், கண்காணிப்பு பணியை ஆய்வு செய்து வர, புறப்பட்டார் தளபதி.வீரர்கள், 10 அடிக்கு ஒருவர் என்ற வகையில், கோட்டையின் உப்பரிகையில் நிறுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் காட்டை உன்னிப்பாக கண்காணித்தனர்.கோட்டையை சுற்றிலும், கண்காணிப்பு அரண் அதிகப்படுத்தப்பட்டிருந்தது.கண்காணிப்பு பணி தலைவன் வில்லாளன். தளபதி வருவதை அறிந்த அவன் விரைந்து வந்து வணங்கியபடி, 'தளபதி... இதுவரை, எந்த ஒரு அசைவும் தெரியவில்லை. ஏதேனும், அடையாளம் தெரிந்தால், சமிக்ஞை கொடுக்க உத்தரவிட்டிருக்கிறேன்...' என்றான்.'நல்லது. உன் நேரடி கவனமும் தேவை...'தலையசைத்தான் வில்லாளன்.கோட்டைக் கொத்தளத்தில், குதிரையில், தளபதி பவனி வந்தாலும், பார்வை முழுதும், காட்டுப் பகுதியை நோக்கியே இருந்தது.அமைதியாக இருந்தது காடு. அப்போது, வில்லாளனிடமிருந்து பதற்றமான குரல் கேட்டது.'தளபதி... காட்டுப் பகுதியில் இருந்து, யாரோ கோட்டையை நோக்கி வருவது போல் தெரிகிறது...'கண்காணிப்பு வீரனின் சமிக்ஞையும் வந்தது. குதிரையின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்தன தளபதியின் கைகள்.அது நின்றது.வில்லாளன் சுட்டிக்காட்டிய திசையில் இருந்து, இருளில் ஒரு உருவம் கோட்டையை நோக்கி வருவது தளபதிக்கும் தெரிந்தது.கோட்டை வாயிலில் இருந்த வீரர்கள் எச்சரிக்கை அடைந்தனர். வருபவனை சுற்றி வளைக்க, பயங்கர ஆயுதங்களுடன் தயாராகினர்.- தொடரும்...- ஜே.டி.ஆர்.,