உள்ளூர் செய்திகள்

பெண்மை வாழ்க!

ஆலம்பட்டு கிராமத்தில் வசித்து வந்தார் வேதநாயகம். அவரது கம்பீரத் தோற்றமும், முறுக்கு மீசையும், பார்ப்போரை அச்சப்பட வைக்கும். சற்று குரல் உயர்த்தி கோபமாக பேசினால், எதிரில் நிற்போருக்கு, கை, கால்கள் நடுங்கும்.அந்த ஊர் பள்ளியில், ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவரது வகுப்பில், மாணவர்கள் அமைதியாக இருப்பர்; கிசுகிசுத்து பேச தைரியம் வராது.இதற்கு நேர்மாறானவர் அவரது மனைவி வசந்தலா. ஒல்லியான தேகம். அமைதியான குணம்; அதிர்ந்து பேசத் தெரியாதவர்.மனைவி சிறப்பாக சமைத்தாலும், திருப்தி அடைய மாட்டார் வேதநாயகம். குறை கண்டுபிடித்து நோகடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். வசந்தலா பொறுமையானவர். கணவருடன், மல்லுக்கட்டவோ, எதிர்க்கவோ செய்ய மாட்டார்; என்றாவது ஒருநாள், அருமை, பெருமை புரிய வரும் என அமைதி காத்தார்.அன்று -தம்பதியருக்கு திருமண நாள். மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்தார் வேதநாயகம்; இலை போட்டு, தண்ணீர் தெளித்து, சாப்பாடு, கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், அப்பளம், வடை, பாயசம் என, அமர்களப்படுத்தி இருந்தார் மனைவி.''என்ன இது கூட்டில் உப்பில்லை. பொரியலில் உப்பை கொட்டியுள்ளாய்; இது, சாம்பாரா அல்லது ரசமா...''குறை கூறி, சாப்பாட்டை பாதியில் வைத்து எழுந்தார்.வருத்தத்துடன் கோபித்து, பிறந்த வீட்டுக்கு சென்று விட்டார் வசந்தலா.'கட்டாயம் திரும்பி வருவார்'மனைவிக்காக காத்திருந்தார் வேதநாயகம். நாட்கள் ஓடின; ஆனால், மனைவி திரும்பவில்லை.ஓட்டலில் சாப்பிட்டதால், வயிறு கெட்டு ஆரோக்கியத்தை இழந்தார். ஓட்டல் உணவு மீது வெறுப்பு ஏற்பட்டது. மனைவியை அழைக்க மனமின்றி தானே சமைக்க முடிவெடுத்தார். இதுவரை சமையல் அறையை எட்டிப் பார்க்காதவர், சாதம் செய்வது, காய்கறி நறுக்குவது, குழம்புக்கு காரம், உப்பு சேர்க்க தெரியாமல் விழி பிதுங்கி நின்றார்.பாத்திரங்களை கையாள தெரியாமல் சுட்டு கொண்டதுடன், குழம்புக்கு தாளித்த பொருட்கள் அனைத்தும், தீயில் கருகின. சமையல் முறைகள் தெரியாமல் சொதப்பி முழுக்க பட்டினி கிடந்து வருந்தினார். பின், தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்டு மனைவியை அழைத்து வந்தார் வேதநாயகம்.பட்டூஸ்... சத்துள்ள உணவை முழு மனதுடன் தயாரித்து, பரிமாறும் அம்மாவின் தியாகத்தை என்றும் மதிக்க வேண்டும்!- பெ. பாண்டியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !