நாட்டு நலம்!
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1980ல், பிளஸ் 2 படித்த போது வகுப்பாசிரியராக இருந்த பாஸ்கரன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலராகவும் பொறுப்பு வகித்தார். மாணவர்கள் மீது, அன்பு செலுத்தி நன்மதிப்பை பெற்றவர். ஒவ்வொரு நாளும் வகுப்பில், 'படிப்பு மட்டும் போதாது. ஒழுக்கத்துடன் பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும். சமுதாயத்துடன் இணைந்து, வாழ வேண்டும்; நல்லதை மட்டுமே செய்வதை கடமையாக கொள்ள வேண்டும்...' என போதிப்பார். பொங்கல் விடுமுறையில், மகாராஜா கடை என்ற கிராமத்துக்கு அழைத்து சென்று, நாட்டு நலப்பணி முகாம் ஒன்றை சிறப்புற நடத்தினார். அங்குள்ள மக்களின் அன்புக்கு பாத்திரமாக்கினார். சுத்தம் பேணுவதை போதித்து பயிற்சி அளித்தார். சாலையில் கிடக்கும் தடைகளை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அப்புறப்படுத்த வலியுறுத்தினார்.அதன்படி, உடைந்த பாட்டில், குப்பையை எங்கு கண்டாலும் அப்புறப்படுத்துவதை வழக்கமாக்கியுள்ளேன். தற்போது என் வயது, 61; கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். சமுதாயத்துக்கு தொண்டு செய்து வாழ்வதற்கு வழிகாட்டிய அந்த ஆசிரியரை இதய கோவிலில் வைத்து வணங்குகிறேன்.- ஜி.விஜயகுமார், கோவை.தொடர்புக்கு: 93447 36407