முதல் உதவி!
கடலுார் மாவட்டம், ஸ்ரீ முஷ்ணம், ராமாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1987ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அந்தந்த வகுப்பறைகளில், திறமைக்கேற்ப மாணவர்களே கூட்டாக அரங்கு அமைத்திருந்தனர். எங்கள் வகுப்பறையிலும் அமைத்திருந்தோம். அவற்றை ஆய்வு செய்ய வந்த மாவட்ட கல்வி அலுவலர், ஒவ்வொன்றாக பார்த்து கொண்டிருந்தார். எங்கள் அரங்கில் நுழைந்த போது, எதிர்பாராத விதமாக கதவு நிலையில் அவரது தலை இடித்தது. லேசான காயம் ஏற்பட்டது. நிலைகுலைந்து போனார்.அரங்குக்கு பொறுப்பு வகித்திருந்த நான், உடனடியாக தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினேன். அமர்வதற்கு வசதி செய்து கொடுத்தேன். அத்தியாவசிய மருந்துகளை பயன்படுத்தி, முதல் உதவி செய்தேன். இந்த செயலை பாராட்டியதுடன், அது பற்றிய கூடுதல் விபரங்களை கேட்டார் கல்வி அலுவலர். அவரிடம், 'தந்தையுடன் மருத்துவமனைக்கு சென்ற போது முதல் உதவிப்பெட்டி இருப்பதை கவனித்து, அதுபோல் தயாரித்து பராமரித்து வந்தேன்...'தற்சமயமும், அது உதவியுள்ளது. வகுப்பு ஆசிரியர் ஒத்துழைப்புடன் கண்காட்சியிலும் வைத்துள்ளேன்...' என்று கூறினேன். அனைவரும் பாராட்டினர். என்னை உற்சாகப்படுத்தும் விதமாக, புத்தகம் பரிசளித்து வாழ்த்தினார் தலைமை ஆசிரியர். எனக்கு, 51 வயதாகிறது. அன்று, பள்ளி வகுப்பறையில் கிடைத்த அனுபவத்தால், துணிவுடன், எந்த சூழ்நிலையிலும் உதவி செய்வதை வழக்கமாக்கி உள்ளேன்.- ப.பாஸ்கரன், கடலுார்.