வெயில் தணிக்கும் பானங்கள்!
கோடை வெயில் கொடுமை துவங்கி விட்டது. இதில் இருந்து தப்ப குளிர்பானங்கள் தயாரித்து குடிக்கலாம். அவை, வெப்பம் தணிப்பதோடு, உடலில் நீரிழப்பை ஈடு செய்யும்; ஆரோக்கியம் தரும். அவற்றை தயாரிப்பது பற்றி பார்ப்போம்...பானகம்!சிறிதளவு புளியை தண்ணீரில் ஊற வைக்கவும். கரைந்ததும் வடிகட்டி காய்ச்சவும். அதில், வெல்லம், சுக்கு துாள், ஏலக்காய் துாள் கலக்கவும். மணமிக்க பானகம் தயார். வெப்பத்தால் ஏற்படும் உடல் சோர்வு நீங்கும்; சுவையாக இருக்கும்.எலுமிச்சை ஜூஸ்!எலுமிச்சை சாறு வெயிலை தணிக்கும் வரப்பிரசாதம். இதை அடிக்கடி குடித்தால் வெப்ப தாக்குதலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். எலுமிச்சை சாறில், சர்க்கரை, சிறிது உப்பு, தண்ணீர் கலந்து குடிக்கலாம்.இஞ்சி தண்ணீர்!வயிற்றுக்கு நலம் தரும் பானம் இஞ்சி தண்ணீர். இஞ்சியை தோல் நீக்கி துண்டுகளாக்கி, அரைத்து, கொதிக்கும் தண்ணீரில் போடவும். பின், வெல்லம், ஏலக்காய் துாள் துாவி இறக்கவும். ஆறியதும் வடிகட்டி குடிக்கலாம். சுவையும், மணமும் அசத்தும். ஜீரணத்துக்கு உகந்தது.தக்காளி ஜூஸ்!நன்கு பழுத்த தக்காளியுடன், சர்க்கரை, தண்ணீர் கலந்து அரைக்கவும். அதை வடிகட்டி சாறை குடிக்கலாம். ருசியாக இருக்கும். வெப்பத்தை தணிக்கும். நீர்மோர்!தயிரை கடைந்து மோர் ஆக்கி நீர் விட்டு பெருக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, சிறிது சீரக பொடி, கொத்தமல்லிதழை இதில் சேர்க்கவும். தேவையான உப்பு போட்டு குடிக்கலாம். வெப்பத்தை தணித்து இதமாக்கும்.நெல்லி மோர்!நெல்லிக்காய்கள் இரண்டை விதை நீக்கி துண்டாக்கவும். அதனுடன் ஒரு கப் தயிர், இஞ்சி சாறு, மிளகுத்துாள், உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டினால் நெல்லி மோர் தயார். உடலுக்கு, சக்தி, ஆரோக்கியம் தரும்!வெள்ளரி மோர்!வெள்ளரிக்காயை தோல் நீக்கி, துண்டுகளாக்கவும். இத்துடன், பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி தழை, தயிர், உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி குடிக்கவும். வெயில் உபாதை தணியும்.வெல்ல மோர்!சிறிதளவு வெல்லப்பொடி, சுத்தம் செய்த இஞ்சி, சுக்குப்பொடி, ஏலக்காய் பொடி, புதினா இலை, தயிர், உப்பு, எலுமிச்சைசாறு, தண்ணீர் கலந்து அரைத்து வடிகட்டவும். சுவை மிக்க வெல்ல மோர் தயார். அனைத்து வயதினரும் ரசித்து குடிப்பர்!- ரா.அமிர்தவர்ஷினி!