தெய்வ வாக்கு!
தென்காசி மாவட்டம், திருமலையப்பபுரம், திருகைலாசம் நினைவு நடுநிலைப் பள்ளியில், 1968ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!திருவள்ளுவர் கழகம் சார்பில், வட்டார அளவில் மாணவருக்கான பேச்சு போட்டி, பக்கத்து நகரமான ஆழ்வார்குறிச்சியில் நடக்க இருந்தது. எங்கள் பள்ளி சார்பில், நானும், 7ம் வகுப்பில் பெருமாளும் தேர்வாகி இருந்தோம்.போட்டியன்று புறப்படும் முன், தக்க ஆலோசனையும், வாழ்த்தும் பெற தலைமையாசிரியர் அரங்கநாதனை சந்தித்தோம். நம்பிக்கை ஊட்டும் வகையில், நல்ல வார்த்தைகளால் உற்சாகப்படுத்தினார். அதை கேட்டதும் உணர்ச்சி வயமாகி, 'நீங்க சொல்ற மாதிரி, நல்லா பேசி நான் முதல் பரிசும், பெருமாள் இரண்டாம் பரிசும் வாங்கி, பள்ளிக்கு பெருமை தேடி தருவோம்...' என்று கூறினேன்.அருகில் நின்றவன் முகம் வாடியது. அதை நான் பொருட்படுத்தவில்லை. போட்டி முடிந்ததும், பரிசு கோப்பையுடன் திரும்பி தலைமையாசிரியரை சந்தித்த போது, 'முதல் பரிசு எனக்குத்தான்னு தலைகனத்தோடு சொன்னீயே... ரிசல்ட் என்னாச்சு பார்த்தியா... உனக்கு இரண்டாம் பரிசு தான் கிடைத்திருக்கு... தன்னம்பிக்கை வேண்டும்; அது மத்தவங்க மனதை புண்படுத்தாம இருக்கணும்...' என்று அன்போடு அறிவுரைத்தார். பசுமரத்தாணி போல் நெஞ்சில் அது பதிந்தது. என் வயது, 69; தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பள்ளி பருவத்தில் அந்த தலைமை ஆசிரியர் இடித்து உரைத்ததை தெய்வ வாக்காய் கருதி வாழ்வில் பின்பற்றி வருகிறேன்.- நெல்லை குரலோன், தென்காசி.தொடர்புக்கு: 97916 67528