உள்ளூர் செய்திகள்

வேழமலைக்கோட்டை! (14)

முன்கதை: வேழமலை நாட்டில் முடிசூட்டு விழா நடக்க இருந்த நிலையில், இளவரசர் மாயமானார். அப்போது, நாட்டின் எல்லை காட்டில் நடமாடிய எதிரிகளை முறியடிக்க மன்னர் தந்த ஆலோசனைபடி அண்டை நாடுகளுக்கு ஓலை அனுப்பினர். அதில் கிடைத்த தகவல் படி, மேலும் சிலர் காட்டில் இருப்பது தெரிய வர, சிறை பிடிக்க சென்றார் தளபதி. இனி - காட்டை அடைந்தது, 60 வீரர்களை உடைய தளபதியின் சிறப்பு படை. காட்டின் அருகில், குதிரைகளை விட்டு விட்டு அதை கவனிக்க, 10 வீரர்களை நிறுத்தினார் தளபதி. மீதமுள்ள, 50 வீரர்கள், எதிரிகளை சிறை பிடிக்கும் வியூக பணிக்கு தயாராயினர்.எல்லாரும் மார்பில் கவசம் அணிந்தனர். இடது கையில் கேடயத்தை எடுத்தனர். குறுவாள், கட்டாரி பொருத்தப்பட்ட தோல் பட்டையை இடுப்பில் அணிந்தனர். மேலும், 20 பேர் ஈட்டியும், 20 பேர் வாள்களையும் ஏந்தினர். 10 பேர் வில் அம்புகளை எடுத்தனர்.தரையில் வரைப்படம் வரைந்து, எப்படி எதிரிகளை சூழ்ந்து, பிடிக்க வேண்டும் என்பதை தாழ்ந்த குரலில் விவரித்தார் தளபதி.'சத்தம் இன்றி நகர வேண்டும். காட்டில் பறவைகள், நாம் வருவதை கண்டு எச்சரிக்கை ஒலி எழுப்பாத வகையில், கவனமாக செல்ல வேண்டும்...' தலையசைத்து ஒப்புதல் தெரிவித்தனர் வீரர்கள்.'இன்னொரு முக்கிய விஷயம். எதிரிகள் கூடாரங்களிலோ, அவற்றின் அருகிலோ பெட்டி, பானைகளை வைத்திருந்தால், அதை திறந்து விடாதீர். அவற்றுக்குள் விஷ பாம்பு, தேள்கள் இருக்கலாம்...'எச்சரித்தார் தளபதி.மானோடையை நோக்கி நகர்ந்தது படை. கிட்டத்தட்ட பாதி துாரத்தை கடந்த போது, அந்த சத்தம் அவர்கள் காதுக்கு கேட்டது.'இது என்ன ரீங்காரமிடுவது போல இரைச்சல் கேட்கிறது...'தங்களுக்குள் மெல்ல பேசினர். அதை உற்று கவனித்த வீரர்களின் முகத்தில் பீதி படர்ந்தது.'இந்த சத்தம் விஷ குழவிகளின் ரீங்காரம்...' என்றான் ஒருவன்.தளபதிக்கு இந்த செய்தி எட்டிய போது, அவர் முகத்தில் திகைப்பு ஏற்பட்டது. கடந்த முறை உளவு பார்க்க வந்த வீரர்கள் குளவியால் தாக்கப்பட்டு முகம் வீங்கி, உடல் தடித்து, துடித்த காட்சி அவர் கண் முன் வந்தது.'அது போன்ற நிலைக்கு, 50 வீரர்களை இப்போது பலி கொடுப்பதா... இவ்வளவு பெரிய ரீங்காரம் கேட்கிறது என்றால், எவ்வளவு குளவிகள் இருக்கும்' தளபதியின் மனம் கணக்கிட்டது. நிச்சயம், பல நுாறு குளவிகள் இருக்கும்.'இது மிகவும் அபாயகரமானது தளபதி... எதிரிகள் குளவிகளை பிடித்து, இங்கே அடைத்து வைத்திருக்கின்றனர். அவை, தாக்க முற்பட்டால், வீரர்கள் மிக கடுமையாக பாதிக்கப்படுவர்...'தளபதியிடம் கிசு கிசுத்தான் ஒரு வீரன்.'இங்கிருக்கும் எதிரிகளை, எப்போது வேண்டுமானாலும் பிடித்து கொள்ளலாம். ஆனால், அவர்களை எதிர்த்து போரிடவும், சமாளிக்கவும் நம் வீரர்களின் நலன் முக்கியம். சிந்தியுங்கள் தளபதி...' தொடர்ந்து ஆலோசனை கூறினான்.ரீங்கார சத்தம் சிறிது சிறிதாக அதிகரிப்பதை தளபதியால் உணர முடிந்தது.அப்படியானால்... அந்த குளவிகள் மொத்தமும் வீரர்களை நோக்கி வருகிறது என புரிந்தது. நொடி நேரம் யோசித்த தளபதிக்கு, வீரன் சொல்வது நியாயம் என்றே பட்டது.'போரிட்டு வீரர்களை பலி கொடுத்தால் கூட பரவாயில்லை. இப்படி குளவிகளிடம் மாட்டி பாதிப்புக்குள்ளாவது மனதளவில் சோர்வடைய செய்யும். மேலும், இந்த செய்தி தெரிந்தால், மற்ற வீரர்களும் உற்சாகம் இழப்பர்' என நினைத்து, உடனடியாக படையை பின்வாங்க சமிஞ்கை கொடுத்தார் தளபதி.அடுத்தடுத்த வீரர்கள், இந்த சமிஞ்கையை பகிர ஒட்டுமொத்த வீரர்களும், பின் வாங்கும் முடிவுக்கு வந்தனர். குளவிகளின் சத்தம் இன்னும், இன்னும் அதிகரிப்பது கேட்க, குதிரைகள் நிறுத்தியிருந்த திசையை நோக்கி ஓட ஆரம்பித்தனர்.இந்த சலசலப்பை கேட்டு, மரங்களில் அமர்ந்திருந்த பறவைகள் கிறீச்சிட்டு மொத்தமாக வானில் பறந்தன.சிறிது நேரத்திற்குள், அந்த பகுதி களேபரமானது.ஓடுவதற்கு இடைஞ்சலாக இருந்த ஆயுதங்களை அப்படியே போட்டு விட்டனர். தப்பினால் போதும் என்று குதிரைகளை நோக்கி வந்தனர் வீரர்கள்.இறுகிய முகத்தோடு ஆலோசனை கூடத்தில் அமர்ந்திருந்தனர் ராஜகுரு, அமைச்சர், தளபதி, வைத்தியர் நால்வரும். 'என்ன தான் நடக்கிறது, நம் நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட காட்டு பகுதியில்... நாம் அமைக்கும் அத்தனை வியூகங்களும், தோல்வியில் முடிகின்றன. அங்கு, களமிறங்கி இருக்கும் எதிரிகள் எத்தனை பேர், எந்த நாட்டை சேர்ந்தவர்கள், என்ன திட்டத்துடன் வந்து இருகின்றனர் என்பதை ஒற்றர்களாலும், அறிய முடியவில்லை. வீரர்களாலும், எதிரிகளை நெருங்க முடியவில்லை. இந்த நிலை ஏன்...' கோபத்துடன் கேட்டார் ராஜகுரு.'நம்மால் முடிந்த, முயற்சிகள் அனைத்தையும், செய்தபடியே தான் இருக்கிறோம்...' தயக்கத்துடன் கூறினார் தளபதி.'நாம், 60 வீரர்களை அழைத்து சென்று, ஆயுதங்களை இழந்து திரும்பி வந்திருப்பது அவமானம் இல்லையா...' விரக்தியாக பேசினார் ராஜகுரு.'பிரச்னையை அணுகும் கோணத்தில் ஏதோ தவறு இருக்கிறது...''அது தான் புரிகிறதே...' என்ற வைத்தியர் தயக்கத்தடன், 'எனக்கு, ஒரு யோசனை தோன்றுகிறது...' என்றார்.'சொல்லுங்கள்...' 'நான் சொல்வது ஏற்புடையதா என்பது தெரியவில்லை...''சொல்ல வேண்டும் என்று ஆரம்பித்து விட்டீர். தயங்காமல் கூறலாம்...' என்றார் அமைச்சர்.'இத்தனை நாள், நம் வியூகம் எல்லாம் கோட்டையில் இருந்து தென்புறம் நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. எதிரிகளை நெருங்குவதற்குள்ளாக அவர்கள் நம்மை கவனித்து விடுகின்றனர்...''நீங்கள் சொல்வது சரி தான்...' தலையசைத்தார் தளபதி.'வியூகத்தை மாற்றி, காட்டின் தென் பகுதியில் இருந்து, கோட்டையை நோக்கி, வட திசையில் வீரர்களை நகர்த்தினால், பயன் தரும் என்று நினைக்கிறேன்...' என்றார் வைத்தியர்.'இது மதியூகமான சிந்தனை...'பாராட்டினார் ராஜகுரு.'அது எப்படி சாத்தியம்... காட்டின் தென்புறத்தில் நமக்கு படைத்தளம் எதுவும் இல்லையே... இப்போதைய சூழலில் படைகளை அங்கு நகர்த்துவது, மிக சிரமமான காரியம்...' என்றார் தளபதி.சிறிது நேரம் மவுனம் நிலவியது. நால்வருமே யோசனையில் இருந்தனர்.அந்த மவுனத்தை கலைத்தது வைத்தியர் தான்.'என்னிடம், அதற்கும் ஒரு யோசனை உள்ளது...'வைத்தியரை மற்றவர்கள் நிமிர்ந்து பார்த்தனர்.- தொடரும்...- ஜே.டி.ஆர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !