உள்ளூர் செய்திகள்

ஒட்டகமும் நரியும்!

ஒட்டகமும், நரியும் நண்பர்கள். அன்று நரி, ஒட்டகத்தை நதிக்கு மறுபக்கத்திலிருந்த ஒரு கரும்புத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றது. இருவரும் அங்கிருந்த கரும்புகளை ஆசை தீர சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும், நரி, சத்தமாக ஊளையிட்டது.நரியின் ஊளைச் சத்தத்தைக் கேட்ட ஒட்டகம் அதிர்ச்சி அடைந்தது.''நரி நண்பா! தயவு செய்து ஊளையிடாதே! காவல்காரங்க வந்துட்டா நம்மளை அடிச்சி பின்னிடுவாங்க!''ஆனால், நரி இதைக் கேட்கவில்லை.''சாப்பிட்டு முடிச்சதும் ஊளையிடறது என்னோட வழக்கம். அதை என்னால் யாருக்காகவும் மாத்திக்க முடியாது!''நரியின் ஊளைச் சத்தத்தைக் கேட்ட காவல்காரர்கள், கையில் தடியுடன் வந்துவிட்டனர். இதைப் பார்த்த நரி, ஓடி தப்பித்துக் கொண்டது. ஒட்டகம், காவல்காரர்களிடம் மாட்டிக் கொண்டு நல்ல உதை வாங்கியது.ஓடிச்சென்ற நரி, நதியைக் கடக்க நதிக் கரையில் காத்துக் கொண்டிருந்தது. உதை வாங்கிய ஒட்டகம், நதிக்கரைக்கு வந்தது.நரியை முதுகில் ஏற்றிக் கொண்டு நதியைக் கடக்க ஆரம்பித்தது.பாதி தூரம் சென்றதும், நதியின் அழமான பகுதி வந்தது. இப்போது ஒட்டகம், நதியில் மூழ்கி, மூழ்கி எழுந்தது. அப்போது நரி அதிர்ச்சி அடைந்தது.''ஒட்டக நண்பா! இப்படி மூழ்காதே. அப்புறம் நான் நதியிலே மூழ்கிடுவேன்!''''சாப்பிட்டு முடிச்சி நீந்த ஆரம்பிச்சா நான் இப்படி செய்யறது வழக்கம். யாருக்காகவும் என் பழக்கத்தை மாத்திக்க முடியாது!'' என்ற ஒட்டகம் மீண்டும் நதியில் மூழ்கி எழ ஆரம்பித்தது.ஒட்டகத்தின் முதுகிலிருந்து நதியில் விழுந்த நரி, தண்ணீருக்குள் மூழ்க ஆரம்பித்தது.ஒட்டகம் நரியைக் காப்பாற்றியது.நரி தன் தவறை உணர்ந்து ஒட்டகத்திடம் மன்னிப்பு கேட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !