உள்ளூர் செய்திகள்

பிராயசித்தம் செய்யுங்கள்!

ஜன 25., திருநீலகண்டர் குருபூஜைதவறு செய்வது மனித இயல்பு. ஆனால், அதற்காக வருந்தி, வாழும் காலத்திலேயே பிராயச்சித்தம் செய்து விட்டால், கடவுளின் மன்னிப்பை பெறலாம். இதற்கு உதாரணம் தான் திருநீலகண்டரின் வாழ்க்கை.சிதம்பரம் நகரில், நீலகண்டர் என்ற சிவனடியார் ஒருவர் வசித்து வந்தார். எப்போதும், 'திருநீலகண்டம்' என்ற சிவனின் திருப்பெயரையே சொல்லிக் கொண்டிருப்பார். 'கண்டம்' என்றால் கழுத்து. 'பாற்கடல் விஷத்தை விழுங்கியதால், நீலமான கழுத்தை உடையவர்' என்பது இதன் பொருள். நீலகண்டர் தன் மனைவி மீது அன்பு கொண்டவரே என்றாலும், ஒருமுறை, அவரது மனம் சபலப்பட, தாசி வீட்டுக்குச் சென்று வந்தார். இந்த விஷயம், மனைவிக்கு தெரிந்து விட்டது.அவளுக்கு கோபம் தலைக்கேறி, 'இனிமேல், என்னை, நீர் தொடக்கூடாது. இது, அந்த திருநீலகண்டனின் மீது ஆணை...' என்று சொல்லி விட்டாள்.அதிர்ந்து போன நீலகண்டர், மனைவியிடம் எவ்வளவோ மன்றாடி பார்த்தார். அவள், தன் நிலையில் இருந்து மாறவே இல்லை. தொட்டு தாலி கட்டிய மனைவிக்கு, கணவன், துரோகம் செய்தால், அவனை, மன்னிக்கவே கூடாது என்பதற்கு, எடுத்துக்காட்டாக இந்த மாதரசி அன்றே திகழ்ந்தாள்.தன் உயிர் மூச்சான சிவன் மீது ஆணையிட்டு சொல்லி விட்டதால், நீலகண்டர், தன் மனைவியை மட்டுமல்ல, பிற பெண்களையும், ஏறெடுத்துப் பார்ப்பதை விட்டு விட்டார். ஒரு சிறிய வீட்டில் வசித்தாலும், மனக்கட்டுப்பாடுடன் இருந்தார்.தன் திருநாமத்தின் மீது ஆணையிட்டு சொன்னதற்காக, மனம் திருந்திய நீலகண்டரை, ஆட்கொள்ள, முடிவெடுத்த சிவன், ஒரு துறவியின் வடிவத்தில், நீலகண்டர் வீட்டுக்கு வந்தார். தன்னிடமுள்ள திருவோட்டை அவரிடம் கொடுத்து, 'இது பல கோடி வைரங்களை விட மதிப்புடைய அட்சய பாத்திரம் போன்றது. இது, உன் பொறுப்பில் இருக்கட்டும்; நான் திரும்ப வந்து பெற்றுக் கொள்கிறேன்...'என்றார்.நீலகண்டரும், அவரது மனைவியும் அதை, மறைவான இடத்தில் வைத்தனர். திரும்பி வந்த துறவி, திருவோட்டை கேட்டார். வைத்த இடத்தில் இல்லை. அவர்கள் அதிர்ச்சியுடன் விஷயத்தை துறவியிடம் சொல்ல, அவருக்கு கோபம் தலைக்கேறி, திட்டித் தீர்த்து, அவர்களே அதைத் திருடி விட்டதாக குற்றம் சாட்டினார். விஷயம் வழக்கு மன்றத்துக்கு சென்றது.'இவன் திருடவில்லை என்பது உண்மையானால், அவனது மனைவியின் கரம் பிடித்து, சத்தியம் செய்து, ஒரு குளத்தில் மூழ்கி எழ வேண்டும்...' என்று, நிபந்தனை விதித்தார் துறவி.மனைவியைத் தொடுவதில்லை என்று சத்தியம் செய்திருப்பதால், 'அது மட்டும் முடியாது...' என்று, அவரது கோரிக்கையை நிராகரித்த நீலகண்டர், ஒரு கம்பின் இரு முனையையும் பிடித்தபடி, இருவரும் மூழ்குவதாக அறிவித்தார். அதை வழக்கு மன்றத்தாரும், துறவியும் ஏற்கவில்லை. நடப்பது நடக்கட்டுமென, கம்பைப் பிடித்தே இருவரும் மூழ்கி எழுந்தனர். அப்போது, துறவி மாயமாகி விட்டார். அவர்கள் முன், சிவனும், பார்வதியும் எழுந்தருளினர்.நீலகண்டரின் சத்திய உணர்வை சோதிக்கவே, அவ்வாறு செய்ததாகக் கூறிய சிவன், தன் திருநாமம் மீது கொண்ட சத்தியத்திற்காக, தங்கள் இளமையை தியாகம் செய்தமைக்காக பாராட்டி, இளமையை திரும்பத் தந்து, மீண்டும் பல காலம் வாழ்ந்து, தன் திருவடியை அடைய ஆசி வழங்கினார்.செய்த தவறை உணர்ந்து, அதற்கு மனதால் பரிகாரம் தேடினால், இறைவனின் அருளுக்கு பாத்திரமாவோம் என்பதற்கு, திருநீலகண்டரின் வாழ்க்கை ஒரு உதாரணம். அதனால், நம் தவறுகளுக்குரிய பரிகாரத்தை, உடனடியாக செய்து விட, மனதை தயார்படுத்திக்கொள்வோம்.தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !