விழிகளை விரியவைக்கும் பிரமாண்ட கார் பார்க்கிங்!
நிறுத்துவதற்கு இடமிருக்கிறதா, இல்லையா என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல், கடன் வாங்கியாவது கார் வாங்கும் நடைமுறை, நம் நாட்டில் அரங்கேறி வருகிறது. நம் நாட்டில் உள்ள, பல பெரிய நகரங்களில், பிசியான வர்த்தக பகுதிகள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றில் கூட, கார்களை நிறுத்துவதற்கு, போதிய அளவில் வசதிகள் செய்யப்படுவது இல்லை.இதனால், மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகமுள்ள சாலைகளின் ஓரங்களில், கார்களை நிறுத்தி, மக்களுக்கு தொல்லை கொடுக்கும் போக்கு, சர்வ சாதாரணமாக அரங்கேறுகிறது.ஆனால், ஜெர்மனியைச் சேர்ந்த, பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான, வோக்ஸ் வேகன், இந்த விஷயத்தில், மற்றவர்களுக்கு முன்னோடியாக மட்டுமல்லாது, புதுமையாகவும், ஒரு அசா தாரணமான காரியத்தை செய்து முடித்து, சர்வதேச நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த வோக்ஸ் வேகன் நிறுவனம், உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில், முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. உலகில், 10 கார்கள் விற்பனையானால், அதில், மூன்று கார்கள், வோக்ஸ் வேகன் நிறுவனத்தை சேர்ந்தது.இந்த நிறுவனத்தின் தயாரிப்பு தொழிற்சாலை, ஜெர்மனியின், வோப்ஸ்பர்க் நகரத்தில் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் கார்களை நிறுத்தி வைப்பதற்காகவும், வாடிக்கையாளர்களுக்கு அந்த கார்களை எளிதாக டெலிவரி செய்வதற்காகவும், தொழிற்சாலையின் அருகில், பிரமாண்டமான இரட்டை கோபுரங்களை கட்டியுள்ளது, அந்த நிறுவனம்.ஒவ்வொரு கோபுரமும், 60 மீட்டர் உயரமுடையது. இந்த இரண்டு கோபுரங்களிலும், கார்களை நிறுத்தி வைப்பதற்கு வசதியாக, பல அடுக்கு பார்க்கிங் வசதிகள் அமைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு கோபுரத்திலும், 400 கார்களை நிறுத்தி வைக்க முடியும்.தொழிற்சாலை யில் தயாராகும் கார்களை, நேரடியாக இந்த கோபுரங்களுக்கு கொண்டு வருவதற்காக, 700 மீட்டர் தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கப் பட்டுள்ளது. இங்கு, அனைத்துமே, தானியங்கி தொழில் நுட்பத்தில் இயங்க கூடியதாக வடிவமைக்கப் பட்டுள்ளது.கார்கள், லிப்ட் மூலமாக, அடுக்கு மாடி பார்க்கிங்கிற்கு கொண்டு வரப்பட்டு, நிறுத்தி வைக்கப்படுகின்றன. கார்களை வாங்குவதற்காக வரும் வாடிக்கையாளர்கள், கார்களை பார்ப்பதற்கு வசதியாக, தனி லிப்ட் வசதியும் உள்ளது.பொழுதுபோக்கு வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. வோக்ஸ் வேகன் நிறுவனத்தில், என்னென்ன மாடல்களில் கார்கள் தயாரிக்கப்படுகிறது என்பதை விளக்கும் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரமாண்ட கார் பார்க்கிங் கோபுரங்கள், தற்போது ஜெர்மனிக்கு வரும் சுற்றுலா பயணிகளின், முக்கிய சுற்றுலாத் தலமாகவும் மாறியுள்ளது. ***எஸ். ரேவதி