உள்ளூர் செய்திகள்

காரிய சித்தி!

நாம் ஒரு காரியமாக ஒருவரிடம் போகிறோம். அவரிடம் ஏதேதோ பேசிவிட்டு, ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வருகிறோம். வீட்டுக்கு வந்த பிறகுதான், 'அடடா, அவரிடம் இதைக் கேட்க மறந்து விட்டோமே...' என்ற, ஞாபகம் வருகிறது. அப்போது ஞாபகம் வந்து என்ன பயன்?பாண்டவர்கள் வனவாசத்தின்போது, பர்ண சாலையில், ஒரு முனிவர் இருந்தார். அவர், தினமும் அக்னி ஹோத்ரம் செய்வது வழக்கம். ஒரு நாள் அவரிடமிருந்த அரணிக்கட்டையை (இதைக் கடைந்து தான் நெருப்பு உண்டாக்க வேண்டும்!) ஒரு மான், தன் கொம்பில் சிக்க வைத்து, தூக்கிக் கொண்டு ஓடியது.இதைக் கண்ட முனிவர், பாண்டவர்களிடம் கூறி, அரணிக் கட்டையைக் கொண்டு வரும்படி வேண்டினார். சகாதேவனிடம் சொல்லி, மானை துரத்திச் சென்று, அரணிக் கட்டையை மீட்டுவரச் சொன்னார் தருமர். அந்த மான் ஓடிச் சென்று ஒரு மடுவில் இறங்கியதும், ஒரு யட்சசாக மாறியது.அந்த மடுவிலிருந்த தண்ணீரைக் குடிக்க முயன்றான் சகாதேவன். அப்போது அந்த யட்சஸ், 'நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு தண்ணீரைக் குடிக்கலாம். சரியான பதில் சொல்லா விட்டால், நீ இங்கேயே இறந்து விடுவாய்...' என்று சொல்லி, கேள்வி கேட்டது. பதில் தெரியாத சகாதேவன், அந்த மடுவில் இருந்த நீரைக் குடித்ததும் இறந்து விழுந்தான்.சகாதேவனை தேடி வந்த நகுலன், அர்ஜுனன், பீமன் எல்லாருமே இதேபோல் மடுவின் கரையில் வீழ்ந்து இறந்தனர். அதன்பின் தன் தம்பிகளை தேடி அங்கே வந்தார் தருமர். தருமரை பார்த்து, 'நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். சொல்லாவிட்டால், நீயும் இறந்து விடுவாய்...' என்றது யட்சஸ்.யட்சஸ் கேட்ட கேள்விகளுக்கெல்லாம், சரியான பதில் சொன்னார் தருமர். இது, பாரதத்தில் யட்சப்ரச்னம் என்ற பகுதியில் வருகிறது. யட்சஸ் சந்தோஷப்பட்டு, 'இங்கு இறந்து கிடக்கும் நால்வரில் யாராவது ஒருவரை பிழைக்க வைக்கிறேன். யாரை நீ விரும்புகிறாய்...' என்று கேட்டது.'நகுலனை பிழைக்க வை...' என்றார் தருமர்.'ஏன்? பலசாலியான பீமனையும், வில்லாளனான அர்ஜுனனையும், சகாதேவனையும் விட்டு விட்டு நகுலனை கேட்கிறாய்?' என்று கேட்டது.அதற்கு, 'குந்திக்கு ஒரு பிள்ளையாக நான் இருக்கிறேன். மாத்ரிக்கு ஒரு பிள்ளையாக நகுலன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், நகுலனைக் கேட்டேன்...' என்றார் தருமர்.தருமரின் நியாய புத்தியை மெச்சி, அனைவரையும் பிழைக்கச் செய்து, 'போரில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்...' என்று வாழ்த்தியது யட்சஸ்.நன்றி சொல்லி, யட்சஸ் கொண்டு வந்த அரணிக்கட்டையையும் கேட்டுப் பெற்றார் தருமர். வந்த காரியத்தை அவர் மறக்க வில்லை. பின், அரணிக் கட்டையை கொண்டு போய், சரியான நேரத்தில் முனிவரிடம் கொடுத்து, ஆசி பெற்றார்.எவ்வளவு நேரம் யாரிடம் பேசிக் கொண்டிருந்தாலும், தான் வந்த காரியத்தை மறக்காமல், காரிய சித்தியுடன் திரும்ப வேண்டும். ஊர் கதையெல்லாம் பேசி, வந்த காரியத்தை மறந்துவிடக் கூடாது.***கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!* பண்பாடு என்றால் என்ன?அது ஒரு பகாப்பதம் என்றே நான் கருதுகிறேன். பகுத்துப் பார்க்கலாம். ஒழுங்காகபாடப்படுவது, பண்; ஒழுங்கு முறை தவறாமல் இருப்பது, பண்பாடு.***வைரம் ராஜகோபால்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !