உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

தோழி கொடுத்த அறிவுரை!என் தோழியின் மகள், பெங்களூரில் உள்ள பிரபல பொறியியல் கல்லுாரியில் சேர்ந்து, அக்கல்லுாரி ஹாஸ்டலில் தங்கி படிக்கப் போகிறாள். தோழியை சந்திக்க அவள் வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது, கல்லுாரியில் முதலாமாண்டு சேர்ந்து படிக்க போகும் தன், பதின்பருவ மகளுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தாள், தோழி.'கல்லுாரி முடிந்தால் உடனே, ஹாஸ்டலுக்கு சென்று விட வேண்டும்; எக்காரணத்தை முன்னிட்டும், தேவையின்றி ஹாஸ்டலை விட்டோ, கல்லுாரி வளாகத்தை விட்டோ வெளியே போகக் கூடாது.'அப்படி ஏதாவது முக்கிய காரணங்களுக்காக வெளியே செல்ல வேண்டியிருந்தால், கல்லுாரி முதல்வர் மற்றும் ஹாஸ்டல் வார்டன் அனுமதியை முறையாக பெற்று செல்ல வேண்டும். குறித்த நேரத்தில் கல்லுாரி மற்றும் ஹாஸ்டலுக்கு வந்து விட வேண்டும்.'விடுமுறை நாட்களில், கல்லுாரிக்கு வெளியே தோழியர் தங்கியுள்ள அறை மற்றும் வீடுகளுக்கு செல்லக் கூடாது. அப்படி சென்றாலும், மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 'தோழி வெளியே சென்றிருக்கிறாள். இப்போது வந்து விடுவாள்...' எனக்கூறி, தோழியின் தந்தையோ, அண்ணனோ அல்லது உறவினரோ காத்திருக்க சொன்னால் மறுத்து, உடனே வெளியேற வேண்டும்.'மேலும், அதுபோன்ற சமயங்களில் அவர்கள் தரும் எதையும் குடிக்கவோ, சாப்பிடவோ கூடாது. அவர்கள் வீட்டு கழிவறையை பயன்படுத்த கூடாது...' என, மிக தெளிவாக தன் மகளிடம் கூறினாள், தோழி.அது மட்டுமின்றி, 'ஹிட்டன் கேமரா' மற்றும் மயக்க மருந்து போன்றவற்றால் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகள், 'ப்ளாக்மெயில்'கள் போன்ற செய்திகளை தன் மொபைலில், 'யூடியூப்'பில் போட்டு காண்பித்தாள்.சில பழைய செய்தித்தாள்களையும் எடுத்து, அது போன்ற செய்திகளை மகளிடம் காட்டி, அவளையே படித்து பார்க்க செய்தாள். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் தைரியமாக கையாள வேண்டும் என, மகளுக்கு தைரியம் தந்து பேசினாள்.இறுதியாக மகளின் மொபைலில், 'காவலன் செயலி'யை பதிவிறக்கம் செய்து, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் எனவும் சொல்லி தந்தாள்.மகளுக்கு தோழி கூறிய அறிவுரையால் கவரப்பட்டிருந்த நான், அவளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தேன்.— எஸ்.பேபி சகிலா, சென்னை.ஆசிரியர்களுக்கு ஒரு விழாவா?எங்கள் பள்ளியில், ஆசிரியர் தின விழா, பள்ளி தாளாளரின் தலைமையில், திருவிழா போல, சிறப்பாக கொண்டாடப்பட்டது.முதற்கட்டமாக, ஆசிரியர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார், தாளாளர். பின், ஆசிரியர்கள் அனைவரும் தங்களது கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்தனர்.பிறகு, ஆசிரியர்களுக்கிடையே, நடனம், பாடல் மற்றும் பேச்சு திறன் போட்டிகள் நடைபெற்றன.அனைத்து ஆசிரியர்களுக்கும், சைவம் மற்றும் அசைவ விருந்துகள் பரிமாறச் செய்தார். தாளாளர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் உணவு அருந்தினோம்.சிறிது இளைப்பாறிய பின், அறிவு திறன் மிக்க விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.மாலையில், அன்று நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு, கை நிறைய பரிசுகள் கொடுத்து, ஆச்சரியப்படுத்தினார், பள்ளியின் தாளாளர்.ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு கல்வி கற்பித்தல் சேவை புரிந்த, என் போன்ற ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக, கவுரவப்படுத்திய தாளாளருக்கு நன்றிக்கூறி விடைபெற்றோம்.இது போன்று மற்ற பள்ளிகளிலும், ஆசிரியர்கள் மனம் மகிழ, ஆசிரியர் தின விழாவை சிறப்பாக நடத்த, ஏற்பாடு செய்யலாமே!— எஸ்.மைதிலி, ராமாபுரம்.கோவிலில், 'ரீல்ஸ்' தேவையா? திருச்சியிலுள்ள பழமை வாய்ந்த கோவில்களுக்கு நண்பருடன் சென்றிருந்தேன்.ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற போது, பலரும் இறை பக்தியை மறந்து, மொபைல் போனில் வீடியோக்கள் பார்த்துக் கொண்டே வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.சிறிது நேரத்தில், கோவிலின் கர்ப்பக் கிரஹத்தின் அருகே, இரு இளைஞர்கள், மொபைலில், 'போடா, ஆண்டவனே நம்ம பக்கம்...' என்று வசனம் பேசி, 'ரீல்ஸ்' எடுக்க ஆரம்பித்தனர். கோவில் நிர்வாகிகள் கண்டித்த பின், அந்த வீடியோவை, 'டெலிட்' செய்தனர்.வருத்தமான இந்த சம்பவத்துக்கு பிறகு, அருகில் இருக்கும் திருவானைக்கோவிலுக்கு சென்றோம். அங்கே, கோவிலின் நுழைவு வாயிலிலேயே, மொபைல் போனை வாங்கி வைத்துக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய, டோக்கனை கொடுத்தனர். அதற்கு கட்டணமும் வாங்கிக் கொண்டு, 'லாக்கரில்' வைத்தனர்.கோவிலை தரிசித்து வெளியே கிளம்பும் போது, மீண்டும் மொபைல் போனை கொடுத்தனர்.இந்த நடைமுறையை பிற கோவில்களிலும் பயன்படுத்தினால், மக்கள் இறை சிந்தனையோடு மட்டும் கோவிலுக்குள் இருப்பர். அத்துடன் அனாவசியமாக கோவிலுக்குள், புகைப்படம், வீடியோக்கள் எடுப்பதும் தடுக்கப்படும்.— பா.சிவானந்தம், திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !