உள்ளூர் செய்திகள்

மண்ணெல்லாம் பொன்னாக மாற வேண்டும்

கடந்த 20 ஆண்டுகளாக மண்வளம் குறைந்து கொண்டே வருகிறது. மண்வளம் என்றால் என்ன, அதை எவ்வாறு அளவிட வேண்டும், மண்வளத்தை பாதுகாக்கும் வழிமுறைகளை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.தமிழகத்தில் செம்மண், கரிசல், வண்டல், களர், உவர் மண் மற்றும் அமிலத்தன்மை கொண்ட மண் வெவ்வேறு பகுதிகளில் பரவி கிடக்கிறது. செம்மண் 7.99 மில்லியன் எக்டேர் அதாவது 62 சதவீதம், வண்டல் 16.24, கரிசல் 11.67, கடலோர உவர், வண்டல் மண் 7.57, செம்புறை மண் 2.90 சதவீதம் உள்ளது. ஒவ்வொரு மண்ணிற்கும் அதன் பண்புகள் வேறுபடும் என்பதால் மண் வளத்தை கண்டறிந்து பயிர் மேலாண்மை செய்வது அவசியம். மண்ணின் வேதியியல், இயற்பியல், உயிரியல் பண்புகள் பயிர் செய்வதற்கு ஏற்றவாறும் மண்ணின் தன்மை மாறாமல் பாதுகாத்துக் கொள்ளும் தன்மைக்கு மண்வளம் என்று கூறலாம். மண்ணின் கார அமிலநிலை, மின்கடத்துத் திறன் (உப்பின் அளவு), நேர் மின் அயனி பரிமாற்றுத் திறன், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, இரண்டாம் நிலை ஊட்டச்சத்து, நுண்ணுாட்டச்சத்து போன்ற காரணிகளை மண் ஆய்வின் மூலம் பகுப்பாய்வு செய்ய வேண்டும். பயிர்களுக்கு வெவ்வேறு வகையான மண்நயம் தேவைப்படுகிறது. உதாரணமாக நெல், வாழை, கரும்புக்கு களி சார்ந்த வண்டல் மண்ணும் நிலக்கடலைக்கு மணற்சாரியான களிமண்ணும் பயறு வகை மற்றும் தானியப் பயிர்களுக்கு களிமண்ணும் ஏற்றது. கோள வடிவ கட்டமைப்பில் 12 சதவீத நீர்ப்பிடிப்புத் திறன், 10 சதவீத காற்றோட்டம், 25 முதல் 30 டிகிரி வெப்பம், 6.5 முதல் 7.5 அளவில் கார அமிலத்தன்மையுடன் மண் இருக்க வேண்டும். ஒரு கிலோ மண்ணில் 10 சதவீதம் கரிமச்சத்து, ஒரு எக்டேரில் 280 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து, 200 கிலோ சாம்பல் சத்து இருக்க வேண்டும். இந்த பண்புகளுடன் இருந்தால் அது வளமான மண்.மண்ணின் வளத்தைச் சார்ந்தே மனிதவளம் இருக்கும். மனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கு உணவு தானியங்களை நம்பியிருக்கிறோம். தாவரங்கள் தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை மண்ணில் இருந்து எடுத்துக் கொள்கின்றன. எனவே தானியங்களுக்கு ஆதரவாக இருக்கும் மண்வளத்தை பாதுகாப்பது நம் கடமை. மண் வளமானதாக இருந்தால் நமக்குத் தேவையான அனைத்து சத்துகளும் சம அளவில் உணவு தானியங்கள் வழியாக கிடைக்கும். - சுப்புராஜ்இணை இயக்குநர் வேளாண் துறை மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !