உள்ளூர் செய்திகள்

சம்பா பருவ நெல் சாகுபடி ஆந்திரா ரகத்தை தவிர்க்கலாம்

சம்பா பருவத்தில், ஆந்திரா ரக நெல் சாகுபடியை தவிர்ப்பது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மையம், தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:சம்பா பருவ நெல் விதைப்புக்கு, பி.பி.டி., ஆர்.என்.ஆர்., ஆகிய ரகங்களை தேர்வு செய்வது வழக்கம். இது போன்ற ரகங்கள் அதிக மகசூல் கொடுத்தாலும், சம்பா பருவத்தில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு ஆளாவதை தடுக்க முடியவில்லை.குறிப்பாக, செம்புள்ளி, பாக்டீரியா இலை கருகல், அழுகல், நெல் நிறமாற்றம் உள்ளிட்ட நோய்கள் எற்படும். இதன் வாயிலாக, நெல் மகசூல் இழப்பு ஏற்படும். இதை தவிர்க்க குறைந்த நாட்களில் சாகுபடியாகும் குறுகிய கால நெல் பயிர்களை பயிரிடலாம்.இதை தவிர்க்க, டி.கே.எம்.-13., ஆடுதுறை- 54, 56 ஆகிய ரகங்களை சாகுபடி செய்யலாம். இது, பி.பி.டி., 5.204 ரகத்திற்கு இணையாக விற்பனை செய்யப்படுவதால், சம்பா பருவத்திற்கு உகந்த ரகமாகும். மேலும், ஆடுதுறை- 58 மற்றும் கே.கே.எம்., -1 பாசுமதி அல்லாத வாசனை ரகம், கோவை- 58 ஆகியவை சாகுபடி செய்யலாம்.சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் என்ற உயிர் உரத்தை, ஒரு கிலோவிற்கு 10 கிராம் சேர்த்து, விதை நேர்த்தி செய்ய வேண்டும்.நெல் விதைப்பதற்கு முந்தைய நாளில், ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 10 கிராம் உயிர் உரம் கலந்து, அடுத்த நாள் விதைக்க வேண்டும். இது போல செய்தால், நெல்லில் முளைப்பு திறன் நன்றாக இருப்பதுடன், நல்ல மகசூல் கொடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு:முனைவர் செ.சுதாஷா,திருவள்ளூர்.97910 15355.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !