உள்ளூர் செய்திகள்

தேனீ

''தேனீக்கள் இல்லையெனில்... உலகின் 80 சதவிகித மலர்களுக்கு மகரந்த சேர்க்கை இல்லை. மகரந்த சேர்க்கை இல்லையெனில் தாவரங்கள் தழைக்க வழியில்லை. தாவரங்கள் இல்லையெனில் மிருகங்கள் வாழ வழியில்லை. மலர்கள், தாவரங்கள் மற்றும் மிருகங்கள் இல்லையெனில் மனிதனுக்கும் பூமி பந்தில் உயிர் வாழ வழியில்லை,'' என்றார் விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன்.தேனீ ஒரு அதிசயப்பிறவி ஒரு தேன் கூட்டில், ஒரே ஒரு ராணித்தேனீ, சுமார் 100 ஆண் தேனீக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான முட்டையிடாத பெண் பணித்தேனீக்கள் மட்டுமே இருக்கும். ராணித்தேனீ நல்ல சத்தான உணவை தினம் உண்டு, பருவத்தில் தான் தேர்ந்தெடுத்த ஆண் தேனீக்களுடன் புணர்ந்து, நாள் ஒன்றுக்கு 1,500 முதல் 2,000 முட்டைகளை இடும். இதன் ஆயுட்காலம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள். ஆண் தேனீக்கள் எந்த வேலையையும் செய்யாமல் உண்டு வளரும் சோம்பேறிகள். ராணித்தேனீ விரும்பும்போது அதுனுடன் சரி சமமாக பறந்து கவர முடிந்தால், புணரும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் புணர்ந்த மறுகணமே ஆண் தேனீ இறந்து விடும் அதிசயப்பிறவிகள்.பிறந்த 24 நாட்கள் முதல் சாகும் வரை தேனீக்களின் பணி தேன் சேகரித்தல் மட்டுமே. இவற்றிலும் சாரணியர் பிரிவு ஒன்று உண்டு. பூக்கும் காலங்களில் முதலில் பறந்து சென்று மலர்கள் இருக்கும் இடத்தை அறிந்து வந்து, தங்களது நேர்த்தியான நடனத்தால் மலர்கள் இருக்கும் திசையையும், தூரத்தையும் மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கும். ஒவ்வொரு தேனீயும் அதிகாலையில் எழுந்து மூன்று முதல் ஐந்து கி.மீ., தூரம் வரை சுற்றிப் பறந்து, மலர்களை கண்டறிந்து, மலர்கள் கொஞ்சம் கூட நோகாமல் அதன் அமிழ்தத்தை உறிஞ்சிக்குடித்து, தன் உடலில் இருக்கும் தேன் பையில் சேகரிக்கும். அதேநேரம் மலர்களின் மகரந்தத்தை தன் உடலில் சுமந்தும் வரும். மலருக்கு மலர் தாவும் பொழுது, தனது உடலில் ஒட்டியுள்ள மகரந்தத்தை சற்று சிதறி மகரந்த சேர்க்கையையும் உருவாக்கும். தான் உண்ட அமிழ்தத்தை கொஞ்சம் மட்டும் தனக்காக செரிமானம் செய்து விட்டு, மீதமுள்ளதை தன் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்த்து திரவமாக மாற்றி விடுகிறது. ஒவ்வொரு பயண முடிவிலும் தேன் கூட்டுக்கு திரும்பி, தான் உருவாக்கிய திரவத்தை வாசலில் காத்திருக்கும் பணித் தேனீயின் வாயில் கக்கிவிட்டு அடுத்த பயணத்தை மேற்கொள்ளப் பறந்து விடும். இவ்வாறாக ஒரு நாளைக்கு பத்து முறையாகினும் தன் பயணத்தை மேற்கொள்ளும். தன் வாழ்நாளில் ஒரு தேனீ பயணிக்கும் தூரம், இவ்வுலகத்தை நான்கு முறை சுற்றுவதற்கு சமம். ஒரு சிறு கரண்டி அளவு தேனை சேரிக்க 12 தேனீக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும்.தேன் உண்பதால் ஞாபக சக்தி அதிகரிக்கும். ரத்த அழுத்தம் சீராக இருக்கும். கொழுப்பு சத்து குறையும். இருமல் கட்டுப்படும். நல்ல தூக்கம் தரும். பொடுகை அகற்றும். காயங்கள் விரைவில் ஆறும். முக அழகை மேம்படுத்தும். இப்படி எத்தனையோ சிறப்புகள் கொண்ட,எளிதில் செரிமானம் ஆகக்கூடிய இயற்கையான உணவை தரும் தேனீக்களை பாதுகாப்பது நமது கடமை. வர்த்தக ரீதியாகவும் தேனீ வளர்ப்பு நல்ல லாபத்தை கொடுக்கும்.- தேனீ வளர்ப்பு ஆராய்ச்சி ஆய்வகம்,வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !