தென்னைக்கு தேவை ஊட்டச்சத்து
தென்னையின் வளர்ச்சிக்கும் அதன் விளைச்சலுக்கும் பேரூட்டசத்துகள், நுண்ணுாட்ட சத்துகள் உதவுகின்றன. தழைச்சத்தானது தென்னை மரத்தின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு பெண் பூக்கள் உற்பத்தியாவதில் பங்கு வகிக்கிறது. தென்னையில் 14 வது இலையில் தழைச்சத்தின் அளவு 1.8 முதல் 2 சதவீதம் இருக்க வேண்டும். சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் மரத்தின் வளர்ச்சியை பாதித்து இளம், முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாகின்றன. தென்னை மரத்தின் அடித்தண்டு பருமனாவதற்கு மணிச்சத்து பயன்படுகிறது. பற்றாக்குறை ஏற்பட்டால் வேர்களின் வளர்ச்சியை பாதித்து பூக்கள் உண்டாவதும், தேங்காய் முதிர்ச்சி அடைவதும் தாமதமாகும். தென்னை இலைகளில் மணிச்சத்து 0.12 சதவீதம் இருக்க வேண்டும். தேங்காயில் பருப்பு, எண்ணெய்ச்சத்து உருவாவதற்கும் அதிக காய்கள் பிடிப்பதற்கும் பருப்பு தடிமனாவதற்கும் சாம்பல் சத்து உதவுகிறது. சாம்பல் சத்தானது மரத்திற்கு பூச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. சாம்பல் சத்து பற்றாக்குறை அதிகரித்தால் மரத்தின் இலைகள் சிறுத்தும், வளர்ச்சி குன்றியும், நுனி சிறுத்தும் காணப்படும். கால்சியத்தின் பயன் தண்டு, இலைகளின் வளர்ச்சிக்கு கால்சியம் உதவுகிறது. குட்டை தென்னை ரகத்தில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படுகிறது. தென்னையில் 14ம் இலையில் இதன் அளவு 0.30 முதல் 0.40 சதவீதம் இருப்பதே வளர்ச்சிக்கு உகந்தது. தென்னை மரத்திற்கு கால்சியம் அடங்கிய சூப்பர் பாஸ்பேட், ராக் பாஸ்பேட் உரங்களை இடலாம். நெட்டை ரகத்தில் கால்சியம், மெக்னீசியம் பிரச்னை ஏற்படாது. மெக்னீசியம் பற்றாக்குறையால் அடி இலைகள் மஞ்சளாக மாறும். கந்தகம் தேவை தென்னை இலையில் கந்தகத்தின் அளவு 0.12 சதவீதத்திற்கு கீழே இருக்கும் போது இலைகள் இளம் மஞ்சள் நிறமாக மாறும். மேலும் பருப்பின் அடர்த்தி குறைந்து திடமாக இருக்காது. துத்தநாக பற்றாக்குறையால் தென்னையில் இலைகள் சிறுத்தும் உருமாறியும் தென்படும். இதைத் தவிர்க்க ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 500 கிராம் துத்தநாக சல்பேட் இட வேண்டும். தென்னம்பாளையில் உற்பத்திற்கும் மகரந்தம் முளைப்பதற்கும் போரான் உதவுகிறது. இதில் பற்றாக்குறை ஏற்பட்டால் மரத்தின் திசு வளர்ச்சியை பாதிக்கிறது. மேலும் இலைகள் நீளமாக வளர்வது தடைப்பட்டு இலைகளின் நுனி மடங்கி 'ஏ' வடிவத்தில் இருக்கும். மரத்தில் குருத்து இலைகள் பிரியாமல் ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படும். தேங்காய்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன் கீழே விழுந்துவிடும். மரம் ஒன்றிற்கு போராக்ஸ் 200 கிராம் இட்டு பற்றாக்குறையை சரிசெய்யலாம். எரு, உரமிடுதல் நெட்டை ரக தென்னைக்கு ஆண்டிற்கு 1.2 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், 2 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் உரம், 50 கிலோ தொழுஉரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். வீரிய ஒட்டுரகத்திற்கு ஆண்டிற்கு 2.25 கிலோ யூரியா, 1.5 கிலோ சூப்பர் பாஸ்பேட், 3 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ், 50 கிலோ தொழுஉரம், 2 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். இந்த உர அளவுகளை முதலாண்டு கால் பங்கு அளவும், இரண்டாம் ஆண்டு அரை பங்கு அளவும் மூன்றாம் ஆண்டு தென்னங்கன்றுகளுக்கு முக்கால் பங்கு இட வேண்டும். மொத்த உர அளவுகளை இரு சமமாகப் பிரித்து ஆடி மற்றும் மார்கழி, தையில் இட வேண்டும். மரத்தினை சுற்றிலும் எடுக்கப்பட்ட 6 அடி ஆரமுள்ள வட்டப்பாத்தியின் மேற்பரப்பில் எருவினையும் ரசாயன உரங்களையும் இட்டு மண்வெட்டியால் கொத்தி விட்ட பின் நீர் பாய்ச்ச வேண்டும். தென்னை நுண்ணுாட்ட கலவையினை ஆண்டிற்கு ஒரு மரத்திற்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும். அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறை ஒரு மரத்திற்கு 200 மில்லி தென்னை டானிக்கினை வேர் மூலம் கட்டி பயன்படுத்தினால் குரும்பை உதிர்ந்து மகசூல் அதிகரிக்கும். வட்டப்பாத்தியில் 100 கிராம் சணப்பினை விதைத்து பூக்கும் தருவாயில் அறுவடை செய்து வட்டப்பாத்தியில் இட வேண்டும். இவ்வாறு ஆண்டிற்கு மூன்று முறை செய்தால் தனியாக மரத்திற்கு 50 கிலோ தொழுஉரம் இடவேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் குரும்பை உதிர்வது கட்டுப்படுத்தப்பட்டு மகசூல் அதிகரிக்கும். -எம்.அருண்ராஜ் (மண்ணியல்) பொ.மகேஸ்வரன் (உழவியல்) தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் காமாட்சிபுரம், தேனி