மலை மண்ணில் சாகுபடியாகும் காபி கொட்டைகள்
மலை மண்ணில் காபி கொட்டைகள் சாகுபடி செய்வது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:மலை மண் சார்ந்த செம்மண் நிலத்தில், வியட்நாம் பலா, டிராகன், தைவான் இளஞ்சிவப்பு கொய்யா ஆகிய பலவித பழங்களை சாகுபடி செய்து வருகிறேன்.அந்த வரிசையில், காபி கொட்டை செடிகளை வரப்பு பயிராக சாகுபடி செய்துள்ளேன். இது, நம்மூர் மலை மண்ணின் சீதோஷ்ண நிலையை தாங்கி, வளர்கிறது. இன்னும், மகசூல் எடுக்கவில்லை.காபி செடியை பொறுத்தவரையில், ஒரு கிளையில் எத்தனை இலைகள் இருக்கின்றனவோ, அத்தனை இலைகளும் பூ பூக்கும். கொத்துக் கொத்தாகவும் காய் காய்க்கும் தன்மை உடையது. இந்த காபிச் செடியில், காய்கள் பச்சை நிறத்திலும், பழங்களாக மாறும்போது, இளஞ்சிவப்பு நிறத்திலும் மாறும். இந்த பழங்களை பறித்து உலர்த்திய பிறகே, காபிக்கொட்டைகளாக மாறும்.இதை நன்கு உலர்த்திய பின், வறுத்து காபி பொடியாக மாற்றி விற்பனை செய்யலாம். இதன் வாயிலாக, சுவை மிகுந்த காபி கொட்டைகளை, நாமே விளைவித்து மதிப்பு கூட்டிய பொருளாக தயாரித்து விற்பனை செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: கே.வெங்கடபதி,93829 61000.