ஊடுபயிர் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுதல் - விவசாயியின் அனுபவம்
வாழை பயிரிட்டுள்ள இடத்தில் ஊடுபயிராக உளுந்து பயிர் செய்து அதன் மூலம் வருமானத்தைப் பெருக்கியுள்ளார்.வாழை பயிரிடப்பட்டுள்ள இடத்தில் ஊடுபயிராக உளுந்து பயிர்செய்வதன் மூலம் மேலமங்களக் குறிச்சியைச் சார்ந்த விவசாயி வாழை மூலமாகவும், ஊடுபயிர் மூலமாகவும் இரட்டை லாபம் பெற்றுள்ளார். 5 ஏக்கர் வாழை பயிரிடப்பட்டுள்ள இடத்தில் முதலில் ஒரு ஏக்கர் நிலத்தில் ரூ.550 செலவு செய்து ரூ.7500 ஊடுபயிரின் மூலம் வருவாய் ஈட்டியுள்ளார்.மேலமங்களக்குறிச்சி கிராமத்தைச் சார்ந்த வெண்ணா சுப்பையாவின் மகன் செந்தூர்பாண்டியன் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர். அவர் அந்த கிராமத்தில் டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மூலம் இயங்கும் காமராஜர் உழவர் மன்றத்தின் உறுப்பினர் மற்றும் இவர்களது உழவர் மன்றம் 4 ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. இவரும் இவரது இரு மகன்களும் 15 வருடங்களாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.ஊடுபயிர்களின் மூலம் வருவாய் ஈட்டுவதின் முறைகளை தெளிவாக விவசாயிகளுக்கு விவரித்து மேலும் விவசாயிகளை ஊடுபயிர் (உளுந்து) பயிர் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். செந்தூர்பாண்டியன் வேளாண்மை வல்லுனர்களின் ஆலோசனையின் பேரில் தான் வைத்துள்ள 5 ஏக்கர் வாழை பயிரிட்டுள்ள நிலத்தில் ஒரு ஏக்கரில் ஊடுபயிர் செய்ய திட்டமிட்டார். அவர் ஒரு ஏக்கராவுக்கு ரூ.550 செலவு செய்து ரூ.7500 மதிப்புள்ள 180 கிலோ உளுந்தை ஊடுபயிரின் மூலம் பெற்றார். நல்ல லாபம் பெற்றதால் மீதமுள்ள நிலத்தில் ஊடுபயிர் செய்ய திட்டமிட்டுள்ளார்.உளுந்தை உளுந்து செடியில் இருந்து எடுத்தபின்னர், அந்த உளுந்து செடியே வாழைக்கு நல்ல உரமாக ஆனது எனவும், இதனால் வாழை மிகவும் செழிப்பாகவும், வாழை தாரின் எடை அதிகமானது என்றும் இவருக்கு ஒரு வாழைத்தார் 45 கிலோ வரை கிடைக்கின்றது எனவும் தெரிவித்து, இவர் மற்ற விவசாயிகளையும் தனது உழவர்மன்ற உறுப்பினர் களையும் ஊடுபயிர் செய்து பலன் அடையுமாறு வலியுறுத்தினார்.-எஸ்.செந்தூர்பாண்டி,பெருந்தலைவர் காமராஜ் உழவர் மன்றம்,மேலமங்களக்குறிச்சி.