உள்ளூர் செய்திகள்

கைகொடுக்கும் கால்நடை செல்வங்கள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் முள்ளிப்பள்ளம் பகுதிக்கு சென்றால், இதமாக, பதமாக பக்குவமாக வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை வாங்கி வரலாம். ''இரண்டாண்டு கால நஷ்ட அனுபவத்தில் நான் கற்றுக் கொண்டது ஏராளம். அதை மூலதனமாகக் கொண்டு கோழி வளர்ப்பில் அறிவை பெருக்கினேன்,'' என்கிறார் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்த இளைஞர் சிவக்குமார்.கோழி வளர்ப்பில் தனது அனுபவங்கள் குறித்து அவர் கூறியதாவது: நாட்டுக்கோழி வளர்ப்பை முறையாக செய்தால் நஷ்டம் இல்லை. ஏனென்றால், இவற்றில் நோய் தாக்குதல் குறைவு. வெளியே மேயவிட்டு வளர்த்தால் எடை அதிகம் வராது. எனவே அவற்றை நான்கு பக்கமும் காற்றோட்டமான வேலியிட்ட அறையில் பாதுகாக்க வேண்டும். 20வது நாளில் கோழியின் மூக்கு நுனியை வெட்டி விட்டால், அவைகள் ஒன்றோடொன்று சண்டையிடாது.தரையில் ஆற்றுமணல், தென்னை நார் துகள்களைக் கொண்டு மெத்தை அமைக்க வேண்டும். தென்னை நார் தேவைக்காக, ஒன்றரை ஏக்கரில் தென்னந்தோப்பு அமைத்துள்ளேன். தென்னை நார் மெத்தையில் கோழி எச்சங்கள் உடனடியாக உலர்ந்து விடும். கோழிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் அவற்றை வெளியே எடுத்து பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தலாம். இவற்றின் எச்சங்களில் துர்நாற்றம் வராது.உணவு மற்றும் தண்ணீர் வைப்பதற்காக அடிக்கடி கதவைத் திறந்தால் கோழிகள் பதறி பறந்து கொண்டே இருக்கும். இதனால் எடைக் குறைவு ஏற்படும் என்பதையும் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். எனவே மூன்று நாட்களுக்கு ஒருமுறை உணவை மாற்றி வைத்தேன். தண்ணீரை குழாயில் இருந்து சிறிய குழாய் வழியாக உள்ளே அவ்வப்போது நிறைத்து விடுவேன்.இதனால் மனித நடமாட்டம் அதிகமின்றி அவைகள் இயல்பாக வளர்கின்றன. இப்போது என்னிடம் இருப்பது 70 நாட்களான கோழிக் குஞ்சுகள். அவைகள் 90நாட்களானதும் இறைச்சிக்காக விற்பனை செய்து விடுவேன். ஓராண்டுக்கு முன் வரை, மதுரை மாவட்டத்தில் நாட்டுக்கோழி இறைச்சிக்கு அதிக வரவேற்பில்லாமல் இருந்தது. கோழிகளை வளர்த்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன்.எனவே சோழவந்தானில் இறைச்சி கடை அமைத்து ஞாயிறுகளில் விற்பனை செய்கிறேன். ஒருநாளில் 100 கிலோ இறைச்சி வரை விற்பனையாகிறது. நாட்டுக்கோழி தொழில் துவங்கி 40 நாளில் இதுவரை 4000 கிலோ கோழிகளை விற்பனை செய்துள்ளேன். கோழிகளை பராமரிப்பதற்கு அதிக நேரம் தேவையில்லை. எனவே ஆறு கறவை மாடுகளை வாங்கி வளர்க்கிறேன். இவற்றுக்கு இரண்டு ஏக்கரில் தீவனம் வளர்க்கிறேன். அடுத்து ஆடு வளர்ப்பில் ஈடுபட உள்ளேன். கால்நடைச் செல்வங்கள் தான் என் வாழ்க்கைக்கு கைகொடுக்கின்றன, என்றார். தொடர்புக்கு 96775 11766.- எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !