நெல் நாற்றில் வாடல் நோய் கட்டுப்படுத்துவது எப்படி?
நெல் நாற்றில், வாடல் நோய் கட்டுப்படுத்தும் முறை குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மையம் தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:நெல் நாற்றில், 'ரசக்' என அழைக்கப்படும் வாடல் நோய் வரும். இந்நோய் தாக்கிய நெல் நாற்றின் நுனி பகுதி, மஞ்சள் நிறத்தில் மாறும். நோய் தீவிரமடையும் போது, இலைகள் முழுதுமாக சிதைந்து, மேல் பகுதியில் இருந்து, கீழ் பகுதி வரையில் கருக துவங்கும். மேலும், நெற்பயிரின் ஒளிச்சேர்க்கை முழுதுமாக பாதிக்கப்பட்டு, பயிர்கள் வளர்ச்சி குறையும்.இதனால், நெற்பயிர் உருவாகுவது வெகுவாக பாதிக்கப்படும். நெல் நாற்றின் இலைகளில் இருந்து, பிசின் போன்ற திரவமும் வெளிப்படும்.இந்த வாடல் நோயைக் கட்டுப்படுத்த, நெல் நாற்றின் நுனிப் பகுதியை கிள்ளி விட வேண்டும். நாற்று நடும் போது, பேக்டரிமைசின் எனப்படும் தடுப்பு மருந்தை, 1 ஏக்கருக்கு 100 கிராம் அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு மருந்தினை, 200 கிராம், கோசைடு, 200 கிராம், 60 கிராம் பேக்டரிமைசின் ஆகியவை கலந்து தெளிக்கவேண்டும்.விவசாயிகள், 1 கிலோ மாட்டு சாணத்தை, 1 லிட்டர் நீரில் கலந்து இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். மேலும், பலவீனமான ரகங்களை தவிர்த்து, எதிர்ப்பு ரகங்களை பயிரிடலாம். தழைச்சத்துக்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வயல்வெளிகளை சுத்தமாக பராமரித்தல், களைகளை நீக்குதல் என்ற ஒருங்கிணைந்த முறையில் இந்த நோய்களை கட்டுப்படுத்துவதோடு, நல்ல மகசூலையும் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு:முனைவர் செ.சுதாஷா,திருவள்ளூர்.97910 15355.