உள்ளூர் செய்திகள்

உயிர்த்தண்ணீராய் உதவும் ஊடுபயிர்

அமெரிக்க வாழ்க்கையில் இயற்கை விவசாயம் குறித்து கற்றுக் கொண்ட பாடத்தை ஆத்துார் (திண்டுக்கல்) தொப்பம்பட்டியில் செயல்படுத்தி வருகிறார் உணவு சத்தியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்ற மாஷா.ஆத்துாரில் 5 ஏக்கரில் பழப்பயிர்கள் சாகுபடி செய்து வரும் தனது அனுபவத்தை விவரித்தார் மாஷா.காந்திகிராம் கிராமிய பல்கலையில் உணவு சத்தியல் துறையில் ஆராய்ச்சிபட்டம் (பி.எச்டி) முடித்தேன். கணவர் தனகுமார் சாப்ட்வேர் இன்ஜினியர். திருமணம் முடிந்தபின் அவரது வேலைக்காக அமெரிக்கா சென்றோம். அங்கு சென்ற பின் உணவு குறித்த புரிதல் வந்தது. அங்கே ஆர்கானிக், நார்மல் உணவுகள் என இருபிரிவு உண்டு. ஆர்கானிக் 2 அல்லது 3 மடங்கு விலை இருக்கும். அதை வாங்குவதற்கும் ஆட்கள் உள்ளனர். நம்மால் நார்மல் உணவு தான் வாங்க முடியும். நம் வீட்டைச் சுற்றி நட்ட கறிவேப்பிலையம் முருங்கைக்கீரையும் ஆர்கானிக் உணவு தான். இதை அமெரிக்காவில் பலமடங்கு விலை கொடுத்து வாங்கிறது கஷ்டமாக இருந்தது. கைநிறைய சம்பாதித்தாலும் நிம்மதி இல்லாத உணர்வு ஏற்பட்டது.அமெரிக்காவில் சம்பாதித்து திண்டுக்கல் ஆத்துாரில் நிலம் வாங்க வேண்டும் என நினைத்தேன். அதற்கேற்ப நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் குறித்த வீடியோக்கள் நிறைய பார்த்தேன். 2020 ல் அமெரிக்காவில் இருந்து சொந்த ஊர் திரும்ப நினைத்து ஆத்துார் தொப்பம்பட்டியில் 5 ஏக்கர் நிலம் வாங்கினோம். முதலில் ஆத்துார் சூழ்நிலையோடு ஒத்துப்போவது கடினமாக இருந்தது. இங்கே பழங்களில் கல் வைத்து பழுக்க வைப்பது, புகை போட்டு பழுக்க வைப்பது என்கிற ரசாயன மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்களைச் சுற்றி திராட்சை பயிரிட்டுள்ளனர். நல்ல லாபம் பார்க்கின்றனர். ஆனால் பழ மரங்கள் அதுவும் ஆர்கானிக் முறையில் சாகுபடி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.ஆரம்பத்தில் போர்வெல் அமைத்து மானாவாரி விவசாயம் செய்தோம். மா, தென்னை, பலா மரப்பயிர்களை வளர்த்தபோது இங்குள்ள மண் தன்மைக்கு தென்னை, பலாப்பயிர்கள் பலன் தரவில்லை. அதன் பின் பப்பாளி, மாதுளை, நாவல், கொடுக்காபுளி, நெல்லி, எலுமிச்சை மரக்கன்றுகளை நட்டோம். மரக்கன்றுகள் நட்ட உடனேயே பப்பாளி, மாதுளையை ஊடுபயிராக ஒன்றரை ஏக்கரில் சாகுபடி செய்தோம். 3 மாத பயிராக வெங்காயம் பயிரிட்டோம். 2 நாட்டு மாடுகள் உள்ளதால் அவற்றின் கோமியம், சாணத்தில் இருந்து ஜீவாமிர்தம் கரைசல் தயாரித்து மரப்பயிர், வெங்காயத்திற்கு உரமாக வழங்கினோம். ஓரளவு வளர்ந்த மரங்களை சுற்றி வெங்காயம் நட்டதால் நிழலில் 50 சதவீத பயிர்கள் வளர்ச்சியடையவில்லை. மீதி 50 சதவீதத்தை அறுவடை செய்தபோது பெரிய காய்களாக இருந்ததால் கிலோ ரூ.50 - ரூ.60 வரை உள்ளூரிலேயே விற்றோம். 100 கிலோ கிடைத்தாலும் ஓரளவு லாபம் கிடைத்தது.இப்போது பப்பாளி காய்ப்புக்கு வந்து விட்டது. ரெட்லேடி ரகத்தின் சுவை இதில் இல்லை என கடைகளில் வாங்க மறுத்தனர். உண்மையாகவே நாட்டு பப்பாளியில் தான் நல்ல சத்துகள் இருக்கிறது என்ற புரிதல் குறைவாக உள்ளது. சுவையை விட சத்துகள், தரத்தில் தான் முக்கியத்துவம் தரவேண்டும் என நினைத்து நேரடியாக நாங்களே விற்பனையில் இறங்கி விட்டோம்.மா வைத்து ஓராண்டாகிறது. இப்போது பூக்கள் வந்தாலும் அவற்றை கிள்ளி எறிந்து விடுகிறோம். இன்னும் இரண்டாண்டுகள் காத்திருந்தால் அதுவும் காய்ப்புக்கு வந்துவிடும். பயிர்களுக்கு அவ்வப்போது ஜீவாமிர்த கரைசல், வேர் அழுகாமல் இருக்க சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா, அசோஸ்பைரில்லம் இடுகிறோம். முடிந்தவரை இயற்கையோடு வாழ்ந்து இயற்கை சாகுபடி உணவுகளை நாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் வழங்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேற ஆரம்பித்துள்ளது என்றார்.இவரிடம் பேச: 87783 34019.- எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !