நெல்:
தரமான விதைகளைத் தேர்வுசெய்ய தேவையான அளவுக்கு தண்ணீரை கொதிக்கவைத்து ஒரு இரவு முழுவதும் (12 மணி நேரம்) ஆறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரில் 100 கிராம் வசம்புத்தூள், ஒரு லிட்டர் மாட்டு சிறுநீர் ஆகியவற்றை இட்டு கலக்கி விதைநெல்லில் கொட்டவேண்டும். இக்கரைசலில் மேல் பகுதியில் மிதக்கும் நெல்மணிகள் தரமற்றவை. அவற்றை நீக்கிவிட்டு, அடியில் தங்கி இருக்கும் விதைகளைச் சேகரித்து நல்ல தண்ணீரில் அலசி விதைக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது நோய்களை உண்டாக்கக்கூடிய பூஞ்சாணங்களும் அழிக்கப்படுகின்றன.நெல் விதையைத் தேர்வுசெய்ய மற்றொரு முறையும் உண்டு. ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 கிராம் உப்பு என்ற கணக்கில் தேவையான அளவுக்கு கரைசலைத் தயார்செய்து அதில் விதைநெல்லைக்கொட்டி மிதப்பவற்றை அகற்றிவிட்டு அடியில் தங்கியவற்றை மட்டும் சேகரிக்க வேண்டும். அதன்பிறகு விதைப்பதற்காக ஊறவைக்கும் தண்ணீரில் ஒரு லிட்டருக்கு 100 மில்லி என்ற அளவில் புதினா சாறு கலந்து ஊறவைத்தால் செம்புள்ளி நோய் தாக்குதல் வராது.
சோளத்திற்கு பஞ்சகவ்யா:
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் உப்பு கலந்த கரைசலிலோ அல்லது மாட்டுச் சிறுநீரிலோ சோள விதைகளை கொட்டவேண்டும். இப்படிச் செய்வதால் தரமற்ற விதைகள் மேல்பகுதிக்கு வந்துவிடும். அவற்றை நீக்கிவிட்டு அடிப்பகுதியில் தங்கியிருக்கும் விதைகளை சுத்தமான தண்ணீரில் அலசி அதை மாலை நேரம் நிழலில் உலர்த்தி, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி பஞ்சகவ்யா என்ற அளவில் கலந்து அதில் விதைகளை இட்டு அரைமணி நேரம் ஊறவைத்து பிறகு விதைக்க வேண்டும். இதனால் முளைப்புத்திறன் அதிகமாகும். சோளக்குருத்து ஈ மற்றும் கரிப்பூட்டை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க விதைகளை ஊறவைக்கத் தேவையான அளவு தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, ஓர் இரவு முழுவதும் வெட்டவெளியில் வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் விதையை அரைமணி நேரம் அந்தத் தண்ணீரில் ஊறவைத்து விதைக்க வேண்டும்.
கம்புக்கு உப்புக்கரைசல்:
தரமான கம்பு விதைகளைத் தேர்வுசெய்ய ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் உப்பு கலந்த கரைசல் தயார் செய்துகொள்ள வேண்டும். அதில் விதை களை இட்டு மிதக்கும் பதர்களை நீக்கிவிட்டு தரமானவற்றை சேகரித்து நல்ல தண்ணீ ரில் அலசி அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
மக்காச்சோளத்திற்கு சுடு தண்ணீர்:
வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் 3 மணி நேரம் மக்காச்சோள விதைகளை ஊறவைத்து, நிழலில் உலர்த்தி விதைத்தால் முளைப்புத்திறன் அதிகரிப்ப தோடு குருத்து ஈ தாக்குதல் குறைவாக இருக்கும். (தகவல்: பேராசிரியர் முனைவர் சுந்தரமாரி, 94430 22787, காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம், வேளாண் விரிவாக்கத்துறை, திண்டுக்கல்).
மூங்கில் இனப்பெருக்கம்:
5-10 வருடங்கள் வளரும் பருவத்தில் முதிர்ந்த மரத்தில் ஒரு வயதுள்ள கழியை எடுக்கவும். கழியை எடுக்கும்போது கழி மற்றும் தாய் மூங்கில் இரண்டும் சேதாரம் ஆகாமல் கவனமாக எடுக்க வேண்டும். பிரித்தெடுத்த குருத்தில் அரும்புள்ள கணுக்களை விட்டுவிட்டு மற்றவை எல்லாம் அகற்றிவிடலாம். பின்னர் குருத்துக்களை நாற்றங்கால் படுக்கையில் அரை அங்குலத்திற்கு மேலாக இருக்கும் மண்ணைக்கொண்டு மூடிவிட வேண்டும். தென்னங்கீற்று அல்லது வைக்கோல் கொண்டு நாற்றங்கால் படுக்கைக்கு நிழல் கொடுத்தபின் மண்ணின் கொள்திறன் அளவுக்கு நீர்விட வேண்டும். 2 நாட்களுக்கு ஒரு முறை நீர் விடுதல் கடைபிடிக்க வேண்டும். ஒரு மாதத்தில் அனைத்து அரும்புகளிலிருந்தும் தண்டுகள் துளிர்த்துவரும். நீர் விடுவதை 3 மாதங்கள் வரை தொடரவும். 2-3 மாதங்களில் வேர் விடுவதைக் கவனிக்கலாம். வேர்பிடித்த கழிகளை எவ்வித சேதாரமுமின்றி பிரித்து எடுத்துவிட்டு பின்பு எடுக்கவும். ஒவ்வொரு வேர் விதைத்தண்டுகளை சிறிய கை ரம்பம் கொண்டு பிரித்தெடுக்கவும். பிரித்தெடுத்த தண்டுகளைத் தனித்தனியாக பாலிதீன் பைகளில் நடவேண்டும். இத்தொழில் நுட்பம் மிகக் குறைந்த செலவில் மூங்கில் வேர் பிறக்க உதவுகிறது. வணிக முறையில் மூங்கிலை இனப்பெருக்கம் செய்வதற்கு இருக்கும் ஒரே எளியமையான தொழில்நுட்பம் இதுவேயாகும்.-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்