உணவகங்கள் விடுதிகளில் வெங்காய சேமிப்பு கலன்
உலகிலேயே வெங்காய உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கின்றது. உணவில் முக்கிய இடம் வகிக்கிறது. மருத்துவ குணம் கொண்டது. நம் நாட்டில் ஆண்டுக்கு 4.30 மில்லியன் டன் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. வெங்காயத்தை விதைக்காக மட்டுமே விவசாயிகள் சேமிக்கின்றனர். வெங்காய சேமிப்பு கலன் என்பது வெளிப்புற சேமிப்பு கலன், உட்புற சேமிப்பு கலன் என இரண்டு வகை உண்டு.வெளிப்புற சேமிப்பு கலன்: பள்ளி, கல்லூரி, உணவகங்கள், விடுதி வளாகங்களில் 1,000 முதல் 5,000 கிலோ வரை வெங்காயம் தேவை ஏற்படும் இடங்களில் கலன் அமைக்கலாம். அருகில் தண்ணீர், குப்பைகள், கழிப்பறைகள் இருக்கக்கூடாது. தேவைக்கு தகுந்தவாறு 10க்கு 10 அடி என்ற அளவில் அல்லது 20க்கு 20 அடி என்ற அளவில் இடத்தை தேர்வு செய்து நான்கு அடி உயரத்தில் நான்கு தூண்களை சதுர வடிவிலோ அல்லது செவ்வக வடிவிலோ வடிவமைத்து நிறுவ வேண்டும். மேற்கூரையை அலுமினியம், துருப்பிடிக்காத எவர் சில்வரால் உருவாக்க வேண்டும். சுற்றளவு இடத்தை இரும்பு வலை கொண்டு மூடி அடைத்து விட வேண்டும்.உட்புற சேமிப்பு கலன்: காற்றோட்டம் இருக்க வேண்டும். மழைச்சாரல் விழக்கூடாது. 5 முதல் 60 கிலோ வரை சேமிக்க கூடியதாக இருத்தல் வேண்டும். நகரும் வடிவமைப்பு கொண்டதாக வடிவமைக்க வேண்டும். எலி, கரப்பான் பூச்சிகள் வராத இடமாக தேர்வு செய்ய வேண்டும். 2 அல்லது 3 அடி வரை தூணாக இரும்பு கம்பிகளை வைத்து சதுரமோ அல்லது செவ்வக அமைப்பிலோ அமைக்கலாம். மர ரீப்பர்களை வைத்து அடித்தளம் அமைக்க வேண்டும். மேற்கூரை தேவையில்லாததால் கம்பி வலையை வைத்து மூடி விட வேண்டும்.பக்குவப்படுத்தும் முறைகள்: முதிர்ந்த வெங்காயத்தை அறுவடை செய்தல். அறுவடை செய்த வெங்காயத்தை 250 முதல் 300 கிலோ வரை தாளுடன் நூல் கொண்டு கட்டி விட வேண்டும். 48 மணி நேரம் மிதமான சூரிய ஒளியில் உலர வைக்க வேண்டும். வெங்காயத்தை ஒட்டிய மண்ணை தட்டி விட வேண்டும். பின் முதலில் கம்பியால் தொங்க விட வேண்டும். தாளுடன் பாதி தாள் ஒரு பக்கமும், பாதி வெங்காயம் ஒரு பக்கமாக இருக்குமாறு தொங்க விடுதல் வேண்டும். மர ரீப்பர் தட்டில் வெங்காய கற்றையை தாள் மேலிருக்கும் சாய்வாக வைத்தல் வேண்டும். இரண்டு அடி உயரத்திற்கு மட்டுமே வெங்காயக் கற்றையை அடுக்கி வைத்தல் வேண்டும்.உட்புற வெங்காய சேமிப்பு கலனின் ஒரு அடி உயரம் வைத்தால் போதுமானது. 30 நாட்களுக்கு வெங்காய கற்றையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை திருப்பி போட வேண்டும். பின் 15 நாட்களுக்கு ஒரு முறை திருப்பி போடுதல் வேண்டும். சேமித்து 30 நாட்களுக்கு பின் தேவையான அளவு வெங்காயத்தை தொங்க விடப்பட்டிருக்கும் பகுதியில் இருந்து எடுக்க தொடங்க வேண்டும் என்றார்.- தி.யுவராஜ், வேளாண் பொறியாளர், உடுமலை.