உள்ளூர் செய்திகள்

நானோ யூரியா உரத்திற்கு காப்புரிமை

நானோ தொழில்நுட்ப மையத்தலைவர் (ஓய்வு) சுப்ரமணியன் தலைமையில் பல்கலையில் ஆராய்ச்சிப்பட்டம் பெற்ற மாணவிகள் லதா, ஜெயசுந்தர சர்மிளா இருவரும் மண்ணில் இடும் நானோ யூரியா உர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனர்.கடந்த 2010ல் நாட்டில் முதன்முதலாக நானோ தொழில்நுட்ப மையம் தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தில் அமைக்கப்பட்டது. இம்மையம் மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையின் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளின் படி நானோ உரங்களை வர்த்தகமாக்குதல் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்யும் தளமாக செயல்படுகிறது.இந்தியாவில் இதுவரை 12 நானோ உரங்கள் திரவநிலை பயன்பாட்டில் செயல்படுத்தப்படுகிறது. அவற்றை இலைவழியாக தெளிக்க முடியும். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண்ணில் இடக்கூடிய நானோ உரமானது எளிதாக பயிர்களால் உறிஞ்சக்கூடியது. விரைவில் கிரகிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் உற்பத்தியை பெருக்கக்கூடியது. இலைவழியாக தெளிக்கக்கூடிய நானோ உரங்களுக்கு மாற்றாக மண்ணில் இடக்கூடிய நானோ உரமாக கண்டறிய தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னோடி முயற்சியை மேற்கொண்டது. இந்த புதிய கண்டுபிடிப்பு தனித்துவத்துடன் புதுமையாகவும் இருப்பதால் மத்திய அரசின் காப்புரிமம் பெற்றுள்ளது.இந்த நானோ உர உருவாக்கத்தில் உயிரித்தொகுப்பிலிருந்து பெறப்பட்ட லிக்னின் ஆனது சிட்ரிக் அமிலம் மற்றும் எதிர் அயனி இயற்கை பாலிமர் கைட்டோசானுடன் இணைந்த யூரியா மூலக்கூறுகளை பிடிக்கக்கூடிய தளமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான யூரியாவிலிருந்து தழைச்சத்து வெளியீடு நான்கு நாட்களில் முடிந்து விடும். இந்த நானோ யூரியாவில் 33 சதவீத தழைச்சத்தானது 30 - 35 நாட்களுக்கு லேசான கடினத்தன்மையுள்ள மண்ணில் வெளியிடப்படுகிறது. நீடித்த நிலையான இந்த முறையில் சத்துகளை வெளியிடுவதால் தழைச்சத்து பயன்பாட்டை மேலும் ஊக்குவிப்பதோடு சுற்றுச்சூழலில் சத்துகள் வீணாவதும் குறைகிறது. இது வர்த்தக ரீதியாக கொண்டு செல்வதற்கு முன் இன்னும் சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !