ஆதாயம் தரும் செவ்வாழை சாகுபடி
இந்தியாவில் இருபதுக்கு மேற்பட்ட வாழை ரகங்களும் குறிப்பாக ஜி 9, செவ்வாழை, நாழிப்பூவன், சக்கை, நேந்திரன் ரக வாழைகள் அதிகளவில் சாகுபடி செய்யப் படுகின்றன. மற்ற ரகங்களை விட செவ்வாழை லாபகரமானது. செவ்வாழையில் விட்டமின் சி, விட்டமின் பி 6 அதிகமாகவும் ஆன்டி ஆக்ஸிடன்ட், பீட்டா கரோட்டின் உள்ளதால் இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. நடவும், விதைநேர்த்தியும் கார்த்திகை, மார்கழி அல்லது தை, மாசி பட்டங்கள் தோட்டக்கால் நிலங்களுக்கு உதவும். கன்றுகள் தேர்வே சீரான வளர்ச்சிக்கான காரணி. தாய் மரத்திற்கு அருகிலிருந்து வளரும் 2 முதல் 3 அடி வரை உயரமுள்ள 3 மாத வயதான ஈட்டிக் கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும். கிழங்குகள் 1.5 முதல் 2 கிலோ வரை எடையுடன் பூச்சி, நோய் தாக்காதவாறு அடிப்பகுதி வேர்களை நீக்க வேண்டும். மேல்பகுதி 20 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். வாடல் நோயை தவிர்க்க 0.1 சதவீத 'எமிசான்' கரைசலில் நனைத்து நடவு செய்ய வேண்டும். தோல் சீவிய கன்றுகளை சேற்று குழம்பில் கலந்து அதன் மீது 40 கிராம் 'கார்போ பியூரான்' குருணை மருந்தை துாவினால் நுாற்புழு தாக்குதலை தவிர்க்கலாம். திசு வளர்ப்பு கன்றாக இருந்தால் 5 அல்லது 6 இலைகள் உள்ள கன்றுகளை தேர்வு செய்து, நடவின் போது ஒரு கன்றுக்கு 25 கிராம் அளவில் 'பேசில்லஸ் சப்டிலிஸ்' மருந்தை இட வேண்டும். நிலம் தயாரிப்பு மண்ணின் தன்மைக்கேற்ப 2 முதல் 4 முறை உழ வேண்டும். ஒன்றரை அடி ஆழம், அகலம், நீளம் என்ற அளவில் குழி எடுத்து தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு இட்டு மேல்மண்ணுடன் கலந்து கன்றுகளை ஊன்ற வேண்டும். வரிசைக்கு வரிசையும் கன்றுக்கு கன்று 7 அடி இடைவெளி இருக்க வேண்டும். நடவு செய்த உடனேயும், நான்கு நாட்கள் கழித்து ஒருமுறை உயிர்த்தண்ணீர் பாய்ச்சி அதன்பிறகு வாரத்திற்கு ஒரு முறை பாசனம் தரலாம். உரமிட்ட பிறகு அதிகளவில் நீர் பாய்ச்ச வேண்டும். ஊட்டச்சத்து மேலாண்மை புதிய நிலமெனில் மண் பரிசோதனை அவசியம். உழவின் போதே ஏக்கருக்கு 5 டன் வீதம் தொழுஉரம் இட வேண்டும். ஒரு மரத்திற்கு 110 கிராம் தழைச்சத்து, 35 கிராம் மணிச்சத்து, 330 கிராம் சாம்பல் சத்துகளை முதல், இரண்டாம், நான்காம், ஐந்தாம், ஏழாம் மாதங்களில் பிரித்து இட வேண்டும். இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ள 'வாழை ஸ்பெஷல்' நுண்ணுாட்டத்தில் ஜிங்க், போரான், இரும்பு சத்துகள் உள்ளன. இவை நீரில் எளிதில் கரையும். ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் நுண்ணுாட்டத்தை கலந்து 5வது, 6வது, 7வது மாதங்களிலும், வாழைத்தார் வளர்ச்சியடையும் போதும் இலை வழியாக தெளிக்கலாம் அல்லது வேரில் ஊற்றலாம். இதன் மூலம் 10 முதல் 20 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும். ஊடுபயிர் முறை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மண்வெட்டியால் மண்ணை கொத்தி அணைக்க வேண்டும். மாதம் ஒரு முறை பக்க கன்றுகளை வெட்டி அகற்றவேண்டும். காய்ந்த அல்லது இலைப்புள்ளி தாக்கிய இலைகளை அகற்றி எரித்தால் நோய்ப் பரவலை தடுக்கலாம். வாழை நடும்போதே ஊடுபயிருக்கான மாதிரி நிலத்தை தயார் செய்ய வேண்டும். சின்ன வெங்காயம், கொத்தமல்லி, அவரை, தக்காளியை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். பூச்சி, நோய் மேலாண்மை வாழை கூண் வண்டானது வாழைத்தண்டில் துளையிட்டு வாழும். இதனால் தண்டின் சிறுதுளையில் இருந்து நீர் போன்ற திரவம் கசியும். வாழையிலை ஓரம் மஞ்சள் நிறமாக மாறும். இலைகளின் எண்ணிக்கை குறைந்து வாழைக்காயின் அளவு சிறிதாகி விடும். லேசான காற்று அடித்தாலே மரம் கீழே விழுந்து விடும். கன்று நடவு செய்யும்போதே 'டியுரடான்' குருணையை ஒரு குழிக்கு 20 கிராம் என்ற அளவில் இட வேண்டும். வெட்டப்பட்ட இலைக்காம்பினை ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 மில்லி 'குளோர்பைரிபாஸ்' உடன் ஒரு மில்லி ஒட்டும் திரவம் கலந்த கலவையில் நனைக்க வேண்டும். 'சிகடோக்கா' இலைப்புள்ளி நோய் தாக்கினால் இலைகளில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி, சாம்பல் நிறமாகி இலை முழுவதும் விரைவில் காய்ந்து விடும். காய்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பிஞ்சிலே காய் பழுத்து வீணாகும். நோய் தாக்கப்பட்ட மரங்களை அழித்து அப்புறப் படுத்த வேண்டும். கன்று நடுவதற்கு முன் களிமண் குழம்பில் தோய்த்து எடுக்கப்பட்ட கிழங்கில் 'கார்போபியூரான் 3 ஜி' குருணை மருந்து 40 கிராம் அளவு துாவ வேண்டும். 200 மில்லி கிராம் 'பெர்னோக்சான்' மாத்திரைகளை கன்றினுள் 7 செ.மீ., ஆழத்திற்கு 'கேப்ஸ்யூல் அப்ளிகேட்டர்' கருவி மூலம் செலுத்த வேண்டும். அல்லது 5 மில்லி 'பெர்னோக்சான்' திரவத்தை ஊசி மூலம் தண்டுக்குள் செலுத்த வேண்டும். நோய் தாக்கப்பட்ட செடிகளை வேருடன் அகற்ற வேண்டும். குழிகளில் ஒன்று முதல் 2 கிலோ சுண்ணாம்பை இட்டு மண்ணால் மூடவேண்டும். 2 கிராம் 'கார்பன்டசிம்' மருந்தை 100 மில்லி தண்ணீரில் கரைக்க வேண்டும். அதில் 3 மில்லி மருந்தை ஊசி மூலம் தண்டுப்பகுதியும், கிழங்கும் சந்திக்கும் பகுதியில் 45 டிகிரி சாய்வாக 10 செ.மீ ஆழத்தில் செலுத்தவேண்டும். கன்று நட்ட 3வது, 6 வது மாதங்களில் இவ்வாறு செலுத்த வேண்டும். கன்று நட்டு 12 முதல் 15 மாதங்கள் கழித்து அறுவடைக்குத் தயாராகிவிடும். ஒரு மரத்திற்கு 20 முதல் 25 கிலோ வரை மகசூல் கிடைக்கும். - மகேஸ்வரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு)- அருண்ராஜ், தொழில்நுட்ப வல்லுநர் (மண்ணியல் துறை)சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், தேனி.அலைபேசி: 96776 91410